- Ads -
Home உரத்த சிந்தனை கண் ஜாடை காட்டி அக்கிரமம் நிகழ்த்துபவரா ஸ்டாலின்? என்ன சொல்கிறார் சத்தியமூர்த்தி?

கண் ஜாடை காட்டி அக்கிரமம் நிகழ்த்துபவரா ஸ்டாலின்? என்ன சொல்கிறார் சத்தியமூர்த்தி?

இறைவனின் கண் பார்வை தமிழகத்தின் மீது பரவட்டும், அரசியல் உலகில் தீய கண் ஜாடைகள், கெட்ட நோக்கங்கள், செயலிழக்கட்டும் என்று தானே நாம் பிரார்த்திக்க முடியும்?

— ஆர். வி. ஆர்

கவர்னர் ஆர். என். ரவி தமிழக சட்டசபையில் இருந்து சமீபத்தில் வெளிநடப்பு செய்தார். காரணம்: மத்திய அரசு உத்தரவை ஏற்று கவர்னரின் வருகையை ஒட்டி சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப் படவில்லை, அவையில் அவர் கேட்டுக்கொண்ட பின்னும் அது நடக்கவில்லை. தேசிய கீதத்திற்கு அவமதிப்பு நேர்கிறது என்று கவர்னர் உடனே சபையை விட்டு வெளியேறினார்.

“முதல்வர் ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் ரவியின் கோட்டு சூட்டைக் கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம்” என்று ஒரு திமுக தலைவர் பின்னர் ராமநாதபுரத்தில் பேசினார். அவர் பெயர் சத்தியமூர்த்தி. முன்பு இவர் அதிமுக-வில் இருந்து அப்போது மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர்.

முதல்வர் கண் ஜாடையின் அர்த்தத்தை, அற்புத சக்தியை, இப்படி ஒரு தலைவர் விளக்குவதைக் கேட்கப் புல்லரிக்கிறது! இருந்தாலும், இதில் பலருக்கும் பிடிபடாத சில விஷயங்கள் உண்டு. முதல்வரின் கண் ஜாடை மகிமையை விவரித்த மனிதர்தான் இவை பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கான கேள்விகள் இவை.

கவர்னர் ரவி சட்டசபையில் பேசும்போதோ, அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்ய முயலும்போதோ, அவையிலுள்ள திமுக எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைப் பார்க்கக் கூடாது, அவர் பேச்சையும் கவனிக்கக் கூடாது, ஆனால் முதல்வரின் கண் ஜாடையை அறிவதற்காக முதல்வரின் கண்களைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்று முன்பே அறிவுறுத்தப் பட்டார்களா?

ALSO READ:  அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் - இழுத்து மூடல்!

கவர்னர் ரவி தொடர்பாக, முதல்வர் எத்தனை வகையான கண் ஜாடைகளை வெளிப்படுத்தக் கூடியவர், அவை ஒவ்வொன்றும் திமுக-வினருக்கு நன்றாகப் புரியுமா?

‘கவர்னரை ஒன்றும் செய்யவேண்டாம், அவர் பாட்டுக்கு வெளிநடப்பு செய்யட்டும்’ என்று முதல்வர் கருணை கூர்ந்து தெரிவிக்கும் கண் ஜாடை ஒன்று உண்டா? உதாரணமாக: முதல்வர் வெறுமனே கண்களை மூடியபடி அமர்ந்திருப்பது, அல்லது மோட்டு வளையைப் பார்த்தபடி இருப்பது, என்பதாக?

கவர்னர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்யும்போது அவருடைய கோட்டு சூட்டைக் கிழிக்காமல், அவர் கையை மட்டும் இழுத்து விடுவது, காலை மட்டும் இடறி விடுவது, என்பதற்கும் முதல்வர் சில கண் ஜடைகளை வைத்திருக்கிறாரா?

கிழிக்க வேண்டும் என்றால், கவர்னரின் கோட்டை மட்டும் கிழித்துவிட்டு, அல்லது பேண்டை மட்டும் கிழித்து விட்டு, அவருடைய மற்ற உடைகளுக்கு சேதாரம் ஆகாமல் அவரை அனுப்பிவிட முதல்வரிடம் விசேஷ கண் ஜாடை உண்டா?

முதல்வரின் கண் ஜாடை உத்தரவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு ஒன்றுக்குப் பதில் மற்றதைச் செய்துவிடக் கூடாது, ஒன்றுக்குப் பதில் மற்றதைக் கிழிக்காமல் இருக்கவேண்டும், என்பதற்காக சம்பத்தப்பட திமுக-வினருக்கு ‘முதல்வரின் கண் ஜாடைப் பயிற்சி வகுப்புகள்’ நடந்திருக்குமா?

ALSO READ:  ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி மக்களைத் துரத்துவது ஏன்?

சத்தியமூர்த்தி பேசியதைப் போல், ‘லோக் சபையில் மோடி கண் ஜாடை காட்டினால் ராகுல் காந்தியின் – அல்லது ஒரு திமுக உறுப்பினரின் – ஆடைகளைக் கிழிப்போம்’ என்று எந்த பாஜக தலைவரும் பேசியதில்லை, அப்படி அவருக்குப் பேசவும் தோன்றாது, அதற்கான தைரியமும் வராது.

ஒரு அரசியல் கட்சியின் பிரதான தலைவருடைய பண்புகள் எத்தகையவை, நாட்டைப் பற்றிய அவருடைய சிந்தனை என்ன, அரசியலில் அவர் நீடிப்பதின் நோக்கம் எது, அந்த நோக்கத்திற்கான அவரது வழிமுறைகள் யாவை – இவற்றைப் பொறுத்துதான் அந்தக் கட்சிக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வந்து சேருவார்கள். அதற்கு ஏற்பதான் அந்தக் கட்சிக்கு லோக்கல் பிரமுகர்களும் அமைவார்கள்.

நமது நாட்டின் அப்பாவி மக்களுக்கு – ஏழ்மையில் அல்லது குறைவான வருமானத்தில் வைக்கப் பட்டிருக்கும் பெருவாரியான மக்களுக்கு – பொது வாழ்வில் அப்பட்டமாக நிகழும் அவலங்களே சரியாக, ழுவதுமாக, பிடிபடுவதில்லை. ஆனால் சட்டசபையில் ஒரு முதல்வரின் கண் ஜாடையைக் கவனித்தே அவர் கட்சி உறுப்பினர்கள் அந்த சபையில் ஒரு அடாவடியை, அக்கிரமத்தை, நிறைவேற்றுவார்கள் என்று திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர் சத்தியமூர்த்தி பேசுகிறார். திமுக தலைமை அவர் பேசியதை நிராகரிக்கவில்லை, அவரைக் கண்டிக்கவில்லை. இது இன்னும் கவலைக்குரியது.

ALSO READ:  கோயில் நிலங்களில் வசிப்பவர்கள் இனி வாடகைதாரர்களாக மாறினால் மட்டுமே வசிக்க முடியும்!

நாம் இப்போதைக்கு என்ன செய்யலாம்?

இறைவனின் கண் பார்வை தமிழகத்தின் மீது பரவட்டும், அரசியல் உலகில் தீய கண் ஜாடைகள், கெட்ட நோக்கங்கள், செயலிழக்கட்டும் என்று தானே நாம் பிரார்த்திக்க முடியும்?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version