
டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட்கள் எங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்கிறார்கள். திமுக வழக்கம் போல் அவர்களால்தான் ஒன்றிய அரசு பணிந்தது என்கிறார்கள். எதிர்த் தரப்பில் இருக்கும் அனைவருமே தமது வெற்றி என்று முழங்குகிறார்கள்.
இது வழக்கமாக நடப்பதுதான். ந்யூட்ரினோ, மீத்தேன், எட்டு வழிச்சாலை என ஆரம்பித்து மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களை தனீ நாடான தமிழ் நாட்டுக்கு வேண்டாம் என்று சொல்லி போராடி வென்று காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்கள் இன்னொரு வெற்றி என்று கொண்டாடத்தான் செய்வார்கள்.
இதில் புதியதொரு மாற்றமாக தமிழக பாஜகவும் இதைத் தனது வெற்றி என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது. இதிலும் வழக்கம்போல் இது அண்ணாமலையின் வெற்றி என்று சிலரும் நரேந்திர மோதியின் வெற்றி என்று சிலரும் வடக்கு தெற்காக நின்றுகொண்டு நூதன முறையில் கொண்டாடுகிறார்கள்.
யாருக்குமே இந்தத் திட்டம் வருவது பிடிக்கவில்லையென்றால் யார்தான் இதை கொண்டுவர விரும்பினார்கள்?
எல்லாருமே வெற்றி பெற்றுவிட்டால் தோற்றது யார்..?
நிபுணர்கள் குழு ஆராய்ந்துதான் இந்தத் திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருப்பார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சகம் இதில் மக்களுக்கு இருக்கும் நன்மை, அரசுக்குக் கிடைக்கும் நற்பெயர், கட்சிக்குக் கிடைக்கும் மைலேஜ் இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் அடுத்தகட்டப்பணிகளை முன்னெடுத்திருப்பார்கள். இப்போது ஏன் அதை முடக்கியதே பெரும் வெற்றி என்று சொல்கிறார்கள்.
திமுககூட முதலில் ஒத்துழைத்ததாகத் தெரிகிறது. அவர்கள் அப்படித்தான். அவர்கள் கூட்டணியில் இருந்தபோது கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் மத்தியில் ஆட்சி பறிபோனதும் எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
பொதுவாகவே மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களையும் அதை எதிர்த்து நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களையும் பார்த்தால் ஒரு பேட்டர்ன் புரியவரும்.
காங்கிரஸ் கூட்டணியினர் தமது ஆட்சி காலத்தில் தாம் முன்னெடுத்த நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., சி.ஏ.ஏ., அந்நிய நிதி முதலீடு, அதானி அம்பானிக்கு ஆதரவு என அதே வழியில் பாஜக செல்லும்போதும் அதை கண்மூடித்தனமாக எதிர்த்துவருகிறார்கள். எதனால் இப்படி என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே புரியாது.
சில காலம் எதிர்த்தபின் அடங்கிவிடுவார்கள். இதையும் தனியாக யோசித்துப் பார்த்தால் புரியாது. பாஜகவின் வெற்றியாகக் கூட சிலர் இதைச் சொல்வதுண்டு. ஆதார் கார்ட் எதிர்ப்பு, நீட் தேர்வு, சி.ஏ.ஏ., எதிர்ப்பு என எல்லாம் பிசுபிசுத்துப் போனதை வைத்துப் பார்த்தால் பாஜக ராஜ தந்திரமாக போராட்டங்களை நடக்கவிட்டு அவர்களைக் களைத்துப் போகவைத்து வெற்றி பெற்றதாகத் தோன்றும்.
ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஒரு திட்டத்தை முன்னெடுத்து, ஆட்சி பறிபோனபின் எதிர்த்து, சிறிது காலத்தில் அடங்கிப் போனது என்ற இந்தத் தொடர் நிகழ்வுகளை ஒன்றுகூட்டிப் பார்த்தால் புரியாத பல விஷயங்கள் புரியவரும்.
அதாவது ஒரு திட்டத்தை அதில் கிடைக்கும் கமிஷன் தொடங்கி பல காரணங்களால் காங்கிரஸ் கொண்டுவர விரும்புகிறது. ஆட்சி பறிபோகிறது. திட்டங்களின் பலன் தனக்குக் கிடைக்காமல் போவதை வைத்து எதிர்க்க ஆரம்பிக்கிறது.
கமிஷன் போகிறது என்று சொல்லி எதிர்ப்பது கெளரவமாக இருக்காது. எனவே அந்தத் திட்டத்தில் யார் பாதிக்கப்படுவாரோ அவருக்கு உதவும் போர்வையில் களத்தில் கலகத்தைத் தூண்டுகிறது.
பாஜக ஆட்சியில் இருந்தாலும் அந்த திட்டத்தின் காண்ட்ராக்ட் மற்றும் முழு கட்டுப்பாடும் தன் ஆட்களுக்குக் கிடைக்கும் வரையில் அறப்போர் நிகழ்த்துகிறது. திரைமறைவில் பேரம் ஆரம்பிக்கிறது. பாஜகவும் திட்டம் அமலானால் போதும் என்று காங்கிரஸ் சொல்லும் ஆட்களிடம் திட்டத்தை ஒப்படைத்துவிடுகிறது.
பாஜகவுக்குத் திட்டத்தைக் கொண்டுவந்த பெருமை; காங்கிரஸ் கூட்டணிக்கு அந்தத் திட்டம் தன் கட்டுப்பாட்டில் அமலாகும் வாய்ப்பு. தன் ஆட்களுக்கு அதை மடை மாற்றித் தர முடிந்த வசதி இவையே போதுமானதாக இருக்கிறது. அப்பறம் கொஞ்ச காலம் இந்திய, இந்து தர்ம, பாஜக எதிர்ப்பை அணையாமல் கிளறிவிட்ட பலனும் இருக்கிறது.
ஆதார் கார்ட் விஷயத்தில் அண்டை நாடுகளில் இருந்து ஊடுருபவர்களுக்கெல்லாம் போலியாக தயாரித்துக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அமைதியாகிவிட்டார்கள்.
நீட் தேர்வுக்குப் பின்னரும் காசு வாங்கிக் கொண்டு மருத்துவ சீட் கொடுக்கும் வழியை உருவாக்கிக் கொண்டதும் ஒப்புக்கு திவசம் கொண்டாடிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.
ஆக, நாட்டில் மத்திய அரசு கொண்டுவரப்படும் திட்டங்கள், அதைத் தொடர்ந்து எழும் எதிர்க்கட்சியின் போராட்டங்கள், சில திரை மறைவு பேரங்களுக்குப் பின் இரு தரப்பும் வெற்றி பெற்று தமது முகாமுக்குத் திரும்பிக் கொள்கிறார்கள்.
தேசத்தையும் தர்மத்தையும் எதிர்ப்பதற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை அமலாக்கும் காண்ட்ராக்ட் மூலமே எதிரிகளுக்குக் காசு கிடைத்துவிடுகிறது.
இது ஒருபக்கமென்றால் இதில் பெரிதும் தோற்பது பாஜக கட்சியினரே. ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டால் அதன் மூலம் கட்சியினருக்கு நன்மைகள் கிடைக்கவேண்டும். ஊழல், லஞ்சம் என்ற வழியில் அல்ல. எந்தவொரு திட்டமும் கோடிக்கணக்கான முதலீட்டில் செய்யப்படும். நேர்மையாக அதைச் செய்து கொடுக்கும் பலருக்கு நியாயமாகவே வாழ்வாதாரம் பெருகும்.
நூலகத்துக்கு 10 கோடி ஒதுக்கி ஒரு திட்டம் கொண்டுவந்தால் கட்சியைச் சேர்ந்த நாலைந்து பேருக்காவது அந்தத் திட்டத்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தால் அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும். அதில் அவர்கள் எந்த ஊழலும் செய்யாமலே சம்பளமாகவே நல்ல தொகையை சம்பாதித்துக்கொள்ள முடியும். வாழ்நாள் முழுவதும் கொள்கைப் பிடிப்புடன் விசுவாசமாகக் களமாடிக் கொண்டிருக்க முடியும்.
பாஜக கொண்டுவரும் திட்டங்கள் எல்லாமே எதிர் கட்சிகளால் எதிர்க்கப்பட்டு அதை அமல்படுத்தும் பொறுப்பு, காண்ட்ராக்ட் எல்லாம் எதிரிகளுக்கே சென்று சேர்ந்தால் பாஜகவினர்தான் நடுத்தெருவில் நிற்கவேண்டியிருக்கும். பாஜக இந்தப் பொறுப்பை நேரடியாக காங்கிரஸ் கூட்டணிக்காரருக்குக் கொடுக்காது. ஆனால், பாஜகவில் சேர்ந்துகொண்டு காங்கிரஸுக்கு வேலைபார்க்கும் நபர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
எளிய உதாரணம் தேர்தல் கால கூட்டணி. திடீரென்று எதிர் முகாமில் இருந்து சிலர் இங்கு வருவார்கள் புதிதாக சிலர் கூட்டணியில் சேருவார்கள். தேர்தலுக்கான பணம் முழுவதும் பாஜக அவர்களுக்குக் கொடுக்கும். நம்மவர்கள் தியாகம், நாட்டுப்பற்று, அவல், பொரி என்று அரும்பாடுபடவேண்டும். தேர்தல் முடிந்ததும் அவர்கள் அடங்கிப் போய்விடுவார்கள். நாம் பொரி உருண்டையை மறுபடியும் உருட்ட ஆரம்பிக்கவேண்டும்.
ஊடகங்களுக்கென்று கணிசமான தொகை வந்துகொண்டே இருக்கிறதாம். எங்கு போகிறது என்றுதான் தெரியவில்லை. அம்பானி தொலைகாட்சியிலேயே ஏ கார்ப்பரேட்டே… ஏ பாயச அரசே என்று தகர உண்டியல்கள் குலுங்குகின்றன.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ஊரான் பிள்ளைதான் வளரும். எதிர்க் கட்சியினருக்கு ஆதரவாக நடந்துகொண்டால் எதிர்க்கட்சிதான் வளரும்.
தியாகம், தேசம், தர்மம், பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய் என்று பல தத்துவங்கள் மிகவும் நல்லவைதான். நம் அம்பறாத்தூளியில் இந்த அம்புகள் ஏராளம் உண்டு என்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவே பெரும் சுமையாக கனக்க ஆரம்பித்துவிடும். ஆயுதமே சுமையாகிவிட்டால் போர் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
எதிரிகள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. கட்சியினருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. திட்டங்கள் அமலானால் போதும் என்ற இந்த தாராள அணுகுமுறை நிச்சயம் சரியில்லை. ஏனென்றால் திமுக போன்ற அரசும் தொழிற்சங்கங்களாலும் இடதுசாரிகளாலும் பீடிக்கப்பட்ட அதிகாரவர்க்கமெல்லாம் மத்திய அரசின் திட்டங்களை இந்து விரோதிகளுக்கே மடைமாற்றிவருகின்றன.
எனவே எந்தத் திட்டமாக இருந்தாலும் பாஜகவினராலேயே இந்துத்துவராலேயே அது மக்களுக்குச் சென்று சேரவேண்டும். நாம் எந்த நல்லதையும் பெருமைக்காகச் செய்யவேண்டாம். ஆனால் தேச பக்தியும் தெய்விக நம்பிக்கையும் கொண்டவர்களுக்கு அது சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்தியாகவேண்டும்.
இந்த டங்க்ஸ்டன் விவகாரத்தில் புதுமையாக திட்டத்தையே அனைவரும் முடக்கிவிட்டார்கள். தமிழக பாஜக இந்த வெற்றியைத் தனது சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடச் செய்யும்போலிருக்கிறது. பாருங்கள் நாங்களும் நரேந்திர மோதிக்கு எதிரானவர்கள்தான். திமுகவுக்குத் தரும் வாக்கில் கொஞ்சத்தை எங்களுக்கும்கொடுங்கள் என்று கேட்பார்கள் போலிருக்கிறது.
ஏதோ டங்க்ஸ்டன் நிபுணர்கள் தாமாகவே ஒரு திட்டம் கொண்டுவந்துவிட்டதாகவும் மத்திய பாஜகவும் மாநில பாஜகவுமே சேர்ந்து அதை போட்டி போட்டுக் கொண்டு முடக்குவதெல்லாம் நன்றாக இல்லை.
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் எதிர்க்கும்போது தமிழக பாஜக மட்டும் ஆதரிப்பதால் தனிமைப்பட்டுபோகிறோம் என்பது உண்மையே. ஆனால் நாமும் சேர்ந்து எதிர்த்தால் மத்திய பாஜக மேலும் தனிமைப்படும்.
அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
ஏதேனும் திட்டத்தை இனிமேல் கொண்டுவருவதாக இருந்தால் மாநிலக் கிளைகள் ஆதரிக்குமா என்பதையும் கேட்டுவிட்டுக் கொண்டுவருவது நல்லது. மத்திய மாநில அரசுகளுக்கிடையே மட்டுமல்ல; நாட்டின் கட்சிகளுக்கிடையே மட்டுமல்ல; ஒரு தேசியக் கட்சியின் கிளைகளுக்குள்ளேயே பரஸ்பர உரையாடல், ஜனநாயகம், கூட்டுறவு எல்லாம் மிகவும் அவசியம். மாநிலக் கிளை ஒரு திட்டம் வேண்டாம் என்று சொன்னால் அதை மத்திய கிளை/அரசு ஆரம்பத்திலேயே பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலானாலும் சட்ட மன்றத் தேர்தலானாலும் பிராந்திய கட்சியினர்தானே வாக்கு கேட்டு மக்களைச் சந்தித்தாகவேண்டியிருக்கும்.
அந்தக் கள பிரதிநிதிகளின் குரலுக்கு முதலிலேயே மதிப்பு கிடைக்கவேண்டும்.