பொம்மிநாயக்கன்பட்டியும் திருமாவளவனின் பொய் அரசியலும்!

நானும், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களும் நேற்றைய முன் தினம் அந்த ஊருக்கு சென்ற போது, அந்த பகுதியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் காவல்துறையின் கெடுபிடிக்கு பயந்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் இன்று மதியம் முகநூலில் ஒரு பதிவிட்டிருப்பதை பார்த்தேன். அதில் “தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன் பட்டியில் இருதரப்பினர்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் உருவானது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் இசுலாமிய மக்களை நேரில் சந்தித்து இருதரப்பினர் அமைதிக்கான முயற்சியிலும், இருதரப்பினருக்கும் உள்ளார்ந்த பிரச்சனையை நாமாக பேசி தீர்த்துக் கொள்வது என்று கூறி ஆறுதல் கூறியபோது…..” என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

நானும், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களும் நேற்றைய முன் தினம் அந்த ஊருக்கு சென்ற போது, அந்த பகுதியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் காவல்துறையின் கெடுபிடிக்கு பயந்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறினர்.

ஆண்களே இல்லாமல் பாதுகாப்பு குறித்து அச்சத்தோடு இருப்பதாக கூறினர். நாங்கள் சென்றிருந்த போது அந்த ஊரில் 75 வயதுக்கும் அதிகமான ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த ஒருவரையும், ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரையும் மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த இருவரையும் நாங்கள் சந்தித்து அவர்கள் தரப்பின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

ஆண்களில் மற்ற அனைவரும் காவல்துறையினர் மட்டுமே. மற்ற படி நாங்கள் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்து பெண்களிடம் மட்டுமே.

மேலும், நாங்கள் இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய போது தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், தங்களை தாக்கியவர்கள் அனைவரும் அந்த ஊரின் மசூதிக்குள் சென்று விட்டதாகவும், மசூதிக்குள் வரக்கூடாது என்று காவல்துறையினரை மிரட்டியதாகவும், காவல் துறையினரும் வழிபாட்டு தளத்துக்குள் செல்லமுடியாது இருந்து விட்டனர் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று திரு. திருமாவளவன் அவர்கள் வெளியிட்ட பதிவில் ஹிந்துக்களின் தரப்பில் பேசுவது போல் இருக்கும் இரு புகைப்படங்களில் உள்ள சில ஆண்கள் அவருடன் சென்றவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், அதே சமயம் 4 புகைப்படங்களில் அவர் மசூதிக்குள் இருக்கும் புகைப்படத்தில் , நூற்றுக்கும் மேலான ஆண்கள் (இஸ்லாமியர்கள்) உள்ளதை தெளிவுபடுத்துகிறது.

தாக்குதலுக்குள்ளான, பாதிக்கப்பட்ட சமுதாய ஆண்கள் காவல் துறையினரின் கெடுபிடிக்கு பயந்து ஊரை விட்டே வெளியேறி விட்ட நிலையில், பெண்களும், குழந்தைகளும் தனியாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் நேரத்தில், தாக்குதல் நடத்திய சமுதாயத்தினர் அனைவரும் ஓரிடத்தில் இருக்கிறார்கள் என்பதை திரு. திருமாவளவன் அவர்களின் பதிவு வெளிப்படுத்துகிறது. காவல் துறையானது ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டு வருகிறது என்பதை அவரின் பதிவிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இரு தரப்பினர்கிடையே மோதல் ஏற்பட்டது தனது சமுதாயத்தை சார்ந்த ஒரு மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதால் தான் என்பதை உணராது அல்லது மறைத்து திரு. திருமாவளவன் அவர்கள் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சினை என்று பொதுவாக சொல்லியிருப்பது முறையா? பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் இந்த ஆறுதலை ஏற்றுக்கொள்வார்களா?

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் ஆண்கள் அனைவரும் ஊரை விட்டே சென்றிருக்க, தாக்குதலை நடத்தியவர்களை சந்தித்து நட்பு பாராட்டி ஆறுதல் கூறியதாக திரு. திருமாவளவன் அவர்கள் சொல்லியிருப்பது நியாயமா?

ஹிந்துக்களுக்கிடையே சாதி மோதல்கள் வரும்போதெல்லாம் பொங்கியெழும் திரு. திருமாவளவன் அவர்கள், பொம்மிநாயக்கன்பட்டியில் தாக்கியது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து அவர்களுடன் நட்பு பாராட்டுவது ஏனோ? அவர்களோடு நட்பு பாராட்டுவது தவறு என்று சொல்வது நம் எண்ணம் அல்ல. ஆனால் அதே நட்பை ஏன் மற்ற சாதி பிரச்சினைகளில் பாராட்டுவதில்லை என்பதே நம் கேள்வி?

இவை எல்லாவற்றையும் கடந்து, நேற்றைய முன்தினம் நாம் அவர்களிடம் பேசிய போது தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், தங்களை மூன்றாம்தர குடிமக்களாக மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடத்துவதாகவும் தெளிவாக கூறினர் பாதிக்கப்பட்ட சமுதாய பெண்கள். பேருந்து நிலையத்தில், பொது இடங்களில் தங்களை சரிசமமாக நடத்த மறுக்கிறது அந்த ஊரிலே பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம், என்று தெளிவாக கூறினார்கள் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்கள். இவையெல்லாம் திரு.திருமாவளவன் அவர்களுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாரா?

இறுதி ஊர்வலத்தை அனுமதிக்க மறுக்கும் யாராக இருந்தாலும், எந்த சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்களே. வன்கொடுமை சட்டத்தின் கீழ் இந்த கலவரத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று திரு. திருமாவளவன் கேட்காததன் காரணம் என்ன? தீண்டாமை என்பது இஸ்லாத்திலும் உள்ளது என்று விசாவுக்காக காத்திருக்கிறேன் என்ற புத்தகத்தில் ‘தவுலாபாத்’ என்ற இடத்தில் தனக்கு ஏற்பட்ட கொடுமையை எழுதியிருந்த டாக்டர் அண்ணல். அம்பேத்கர் அவர்களது கருத்தினை ஏற்று கொள்கிறாரா திருமாவளவன் அவர்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுவாரா திருமாவளவன் அவர்கள்? பாஜக இதற்காக போராடுகிறது என்று தெரிந்ததும் களத்தில் இறங்கி, சமரசம் என்ற பெயரில், பாதிக்கப்பட்ட பொம்மிநாயக்கன் பட்டி மக்களை மீண்டும் தீண்டாமையின் பிடியில் விட்டுவிடாது இருப்பாரா திரு. தொல். திருமாவளவன் அவர்கள்?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

நாராயணன் திருப்பதி.