19/10/2019 8:35 PM
உரத்த சிந்தனை விழுந்து எழுந்து... விதியை வென்று... சதியிடம்... சசியிடம்... தோற்றுப் போனவர்!

விழுந்து எழுந்து… விதியை வென்று… சதியிடம்… சசியிடம்… தோற்றுப் போனவர்!

-

- Advertisment -
- Advertisement -

அதிர்ச்சிகளுடன் கலந்த ஆச்சர்யம்… ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங்களிலும் அதிகபட்சத்தை பார்த்தவர் முதலமைச்சராய் மறைந்த ஜெயலலிதா..

சினிமா, அரசியல், கோட்டை, முதலமைச்சர் பதவி, அப்பல்லோ ஆஸ்பிடல், ராஜாஜி ஹால், மெரீனா என ஆசான் எம்ஜிஆர் வழியிலேயே தனது பயணத்தையும் முடித்துக்கொண்ட விந்தையான பெண்மணி. .

சந்தியா என்ற பிரபல நடிகையின் மகளான அவருக்கு, வழக்கறிஞராக ஆசை. ஆனால் குடும்ப பொருளாதார சூழல் சினிமாவில் அரிதாரம் பூசியே ஆக வேண்டும் என்று வைத்துவிட்டது.. சிலரின் வற்புறுத்தலுக்காக சிறுமியாக சில படங்களில் தலைகாட்டிய வருக்கு தலைவிதி அப்படி ஆகிப்போனது

1964ல் கதாநாயகியாக முதல் படம் கன்னடத்தில். கல்யாண்குமார்தான் ஜெயலலிதாவின் ஜோடி. தமிழில் முதல் படம் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை..

இது சத்தியம் படத்தில் கும்பலோடு கும்பலாய் பாட்டு பாடி ஆடிய ஹேமாமாலினிக்கு இயக்குநர் ஸ்ரீதர் படத்தில் கதாநாயகியாய் ஆகும் வாய்ப்பு நழுவிப்போக, அது ஜெயலலிதா மடியில் விழுந்தது.

அப்போதுதான் பள்ளிப்படிப்பு முடிந்திருந்த மாணவியால், பெண்மையின் அத்தனை உணர்ச்சிகளையும் இவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்த முடியுமா என ஷுட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ஸ்ரீதர் ஆடிப்போகிற அளவுக்கு இருந்தது ஜெயலலிதாவின் நடிப்பு திறமை.

ஏற்றுக்கொண்ட விஷயம் எதுவானாலும் அதனை உள்வாங்கி வெற்றிகரமாக வெளிப்படுத்தும் திறமை அவரிடம் தாராளமாகவே இருந்தது..

இனி இதுதான் உலகம் என்று சினிமா வாழ்க்கையில் தாயார் சந்தியா தள்ளிவிட்டதால் ஜெயலலிதா துவண்டுபோய்விடவில்லை. இதுதான் ஒரே வழி என்று தீர்மானமாகிவிட்டால் அதன் இறுதிவரை போய் சாகசம் காட்டுவதில் ஜெயலலிதா கில்லாடி

ஆயிரத்தில் ஒருவன் படம் தன் தலையெழுத்தை மாற்றப்போகிறது என்று புரியாமல்தான் அந்த கன்னிதீவில் காலெடுத்து வைத்தார். காலத்தின் விந்தை. இப்போது சினிமா உலகில் கெமிஸ்ட்ரி என்கிறார்களா அதுபோல 31 வயது மூத்தவரான எம்ஜிஆருடன் ஜெயலலிதா தொடர்ந்து ஜோடி சேரும் அளவுக்கு கெமிஸ்ட்ரி அமைந்தது.

ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டின் நெம்பர் ஒன் வசூல் சக்ரவர்த்தியான எம்ஜிஆர் நடித்து தொடர்ச்சியாக வெளிவந்த 12 படங்களில் ஜெயலலிதாதான் கதாநாயகி. குடியிருந்த கோவில், ஒளிவிளக்கு, நம்நாடு அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் என பல பிளாக் பஸ்டர்கள்.

28 படங்களில் ஜோடி சேர்ந்த ஜெயலலிதாவால் எம்ஜிஆரின் கனவுப்படமான உலகம் சுற்றும் வாலிபனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. திரைமறைவு சதிகள் வலுப்பெற்றதில் எட்டுவருட திரை ஜோடி 1973ல் பட்டிக்காட்டு பொன்னையாவோடு பிரிந்துபோனது.. அதன்பின் நிஜத்திலும் பிரிந்தார்.

எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்து கலக்கியதுபோலவே நடிகர் திலகம் சிவாஜியுடன் வெற்றிகரமான கதாநாயகியாக பல படங்களில் வலம் வந்தார். தெய்வமகன், பட்டிக்காடா பட்டணமா, ராஜா, அவன்தான் மனிதன் என அந்த பட்டியல் அது ஒரு ரகம்.

பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி போன்றோர் சீனியராகிக்கொண்டிருந்த 60களின் மத்தியில் ஜெயலலிதாவின் வரவு துள்ளாட்டத்தின் துவக்கம் என்றே சொல்லலாம்.

கேஆர் விஜயா, காஞ்சனா, ராஜஸ்ரீ போன்ற சக காலத்து நடிகைகள் எட்ட முடியாத உயரத்தை பப்ளி பேஸ் என்பார்களே அப்படிப்பட்ட முகவாகு கொண்ட ஜெயலலிதா சர்வ சாதாரணமாக தொட்டார்.

இளைய நடிகர்களான ரவிச்சந்திரன் ஜெய்சங்கர், முத்துராமன் போன்றோருடன் சுழன்று சுழன்று ஆடுவதிலும் சரி, அழகுப்பதுமையாக ரசிகர்களை கவர்ந்ததிலும் சரி.. ஜெயலலிதாவின் இடத்தை மற்ற நடிகைகளால் பிடிக்கமுடியவில்லை..

அதனால்தான் இரண்டு தலைமுறை கதாநாயகர்களுடன் அவரால் வெற்றிகரமான கதாநாயகியாக கொடிகட்டிப்பறக்கமுடிந்தது.

வந்தாளே மகராசி, சூரியகாந்தி திருமாங்கல்யம், கமலுடன் நடித்த உன்னைச்சுற்றும் உலகம் போன்ற படங்களெல்லாம் ஜெயலலிதா என்ற ஒற்றை நாயகி ஒட்டுமொத்தமாக தலையில் சுமந்து பிரமிக்க வைத்தார்

ரஜினியின் பில்லா பட நாயகியை மறுத்தது, தன்னைவிட மூன்று வயது இளையவரான நடிகர் சரத்பாபுவின் படத்தில் நாயகியாக நடித்தது, என ஜெயலலிதாவின் திரையுலபயணம் நதியை தேடிவந்த கடலோடு முடிந்தபோது பல வியப்புகள் மிஞ்சின.
அதைவிட தனிப்பட்ட வாழ்விலும் ஏமாற்றமும் சறுக்கல்களுமே கையில் கிடைத்தன.

விரக்தியான மனநிலையில் வெளியுலக வாழ்வில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப்போய்விட்ட நடிகை ஜெயலலிதாவுக்கு இம்முறை அரசியல்வாதி என்ற அரிதாரத்தை பூசினார், நடிகனும் நாடாளமுடியும் என நாட்டுக்கே நிரூபித்து காட்டி முதலமைச்சராகியிருந்த எம்ஜிஆர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அழைத்து அதிமுகவில் உறுப்பினராக்கினார். கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பு..கடலூரில் மக்கள் அலைவெள்ளத்தில் கலக்கினார்..திமுக நாளேடான முரசொலி, கடலூர் கார்ப்பெட் என்று விமர்ச்சித்தது..எம்ஜிஆர்-ஜெயலலிதா நெருக்கம் மீண்டும் தூசியெடுக்கப்பட்டு சகட்டுமேனிக்கு விளாசப்பட்டது..

அரசியல் சொல்லடிகளை தாங்கிக்கொண்டு பக்குவப்பட்டுப் போனவருக்கு 1984 மார்ச் 24ல் இன்ப அதிர்ச்சி.. ராஜ்யசபா எம்பியாக நியமனம்.. நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா உட்கார்ந்த அதே இருக்கை கிடைத்தது.. அருமையானஆங்கிலத்தில் நேர்த்தியாக இருந்தது ஜெயலலிதாவின் கன்னிப்பேச்சு..

சபையே வியப்பாக பார்த்தது. பிரதமர் இந்திரா காந்தியையும் ஈர்த்துவிட்டது கன்னிப்பேச்சு
செக்கச்சிவந்து தங்கச்சிலை போல் பவனிவந்த ஜெயலலிதாவை ‘’அறிவுடன் கூடிய பேரழகு எம்பி’’ என்று வர்ணித்தார் குஷ்வந்த் சிங்..

எம்ஜிஆரின் கட்டளைப்படி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார் ஜெயலலிதா.. இந்த சந்திப்பின் நோக்கம் காங்கிரசுடன் அதிமுகவுக்கு கூட்டணிக்கான பாலத்தை அமைப்பது. கடைசியில் அது அப்படியே நிறைவேறவும் செய்தது.

டெல்லி அரசியல் கால்பதித்து அந்த தந்திர பூமியின் சூட்சுமங்கள் அத்துப்படியாகும்போது
ஜெயலலிதாவுக்கு வயது வெறும் 36 தான்

1987ல் எம்ஜிஆர் மறைந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வேறொரு பெண்ணுக்கு நேர்ந்திருந்தால் போதுமடா சாமி என ஏதோ ஒரு வெளிநாட்டுக்குப்போய் செட்டில் ஆகியிருப்பார்.

ஆனால் ஜெயலலிதாவோ அத்தனை சொல்லடிகளையும் எதிர்தரப்பு அரசியல்வாதிகளிடமிருந்து வாங்கி பதிலுக்கு செமையாக அடிகளை திருப்பித்தந்தார். அவரின் துணிச்சல், கம்பீரம் அதற்கு பெரும் துணையாக இருந்தன..

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெ.அணி என இரண்டாக பிரிந்துபோனதில் ஆட்சி மகுடத்தை தொடர்ந்து நான்காவது முறையாக வெல்லும் வாய்ப்பை 1989 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இழந்தது..

ஆனால் சில மாதங்களிலேயே ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவதில் வெற்றிகண்டவர் ஜெயலலிதா. அவர் தலைமையில் 1989 நவம்பரில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்டது..

39 தொகுதிகளில் 38 ஐ கைப்பற்றி எதிர்கட்சி திமுகவுக்கு முதல் தடவையாக தன் ஆளுமை மூலம் பெரும் அதிர்ச்சி தந்தார் அதன் கூட்டணியி லிருந்த இ.கம்யூனிஸ்ட் மட்டுமே நாகப்பட்டிணத்தில் வென்றது..

வெறும் ஒன்றரை ஆண்டுகளில் அதிமுகவை சீரமைத்து, ஜெயலலிதா இப்படி திமுகவை சுத்தமா வாஷ் அவுட் செய்தது அரசியலில் புதிய சாதனை. எம்ஜிஆர் தலைமையில் அதிமுக இருந்தபோதுகூட அப்படியொரு மோசமான தோல்வியை திமுக சந்தித்ததில்லை. ..

திமுகவை அலறவிடும்போக்கு, 1991 சட்டமன்ற தேர்தலில் இன்னும் மூர்க்கமாக தென்பட்டது ஜெயலலிதாவிடம். 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு, அதிமுக கூட்டணிக்கு கிடைத்த இடங்கள் 225 .

ராஜீவ் காந்தி படுகொலையால் கிடைத்த அனுதாப வெற்றி என்று சொல்லும் ஜெயலலிதா எதிர்ப்பாளர்கள் 1989 மக்களவை தேர்தல் முடிவை வசதியாக மறந்துவிடுவார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையுடன், அரியணை ஏறிய ஜெயலலிதாவுக்கு அப்போது வயது வெறும் 43தான்.. இவ்வளவு இள வயதில் முதலமைச்சர் பதவி என்பதும் தமிழகத்தில் மேலும் ஒரு புதிய சாதனை..

ஆனால் முதலமைச்சரான பிறகு எதிர்கட்சி திமுகவைவிட ஜெயலலிதா உடன் இருந்தவர்களால்தான் பிரச்சினையே வெடித்தது. உடன்பிறவா தோழி சசிகலாவின் குடும்பத்தில் தனக்கு எதிராக அரசியல் சதி நடப்பதை மோப்பம் பிடித்தார்.

கடைசியில் ஆட்சிக்கு வந்த மறுஆண்டே அதாவது 1992, ஆகஸ்ட் 5ந்தேதி இரவு எட்டு மணிக்கு ராஜினாமா கடிதத்தை எடுத்துக்கொண்டு ஓடினார் ஆளுநர் மாளிகைக்கு.

விஷயத்தை கேட்டுபதறிப்போன ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கிடம், சசிகலாவின் கணவர் நடராஜன் 35 எம்எல்ஏக்களை வைத்து வில்லங்கமான வேலையை செய்ய முயற்சிப்பதாக சொன்னார் ஜெயலலிதா.

ஆனால் ஆளுநர், ஒரு நாள் அமைதியாக காத்திருந்து பிறகு வாருங்கள்..அப்போது நிலைமையை பார்த்துக்கொள்ளலாம், இவ்வளவு அவசரம் வேண்டாம் என்று சாந்தப்படுத்தி அனுப்பினார்.

மறுநாள் ஜெயலலிதாவின் முடிவு மாறிப்போய்விட்டது. அதன் பின்னர் எதுவுமே அவருக்கு சரியாக அமையவில்லை..

சசிகலா குடும்பத்தினரின் அத்துமீறல்கள் தமிழகம் முழுவதும் வியாபித்து ஆட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது அவற்றை ஜெயலலிதா கண்டு கொள்ளவே யில்லை.

எல்லாவற்றிற்கும் உச்சம், வளர்ப்பு மகன் எனச்சொல்லி விஎன் சுதாகரனுக்கு செய்துவைத்த ஆடம்பர திருமணம்.. ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு என பல டெரர் சம்பவங்களுக்கு பஞ்சமே இல்லாமல் போனது.

திமுகவை சுத்தமாக வாஷ் அவுட் செய்து தேர்தலில் எம்ஜிஆரையும் மிஞ்சிய ஜெயலலிதா, 1996 சட்டமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை அதிமுகவுக்கு வாங்கிக்கொடுத்தார்.

அவ்வளவு ஏன், சுகவனம் என்ற சாமான்யனிடம் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோற்றுப்போனார். கலைஞரே கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார் ஜெயலலிதாவை பர்கூர் மக்கள் தோற்கடிப்பார்கள் என்று.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அவரை போலீஸ் வேனில் திமுக அரசு ஏற்றியபோது ஜெயலலிதாவின் கதை அத்தோடு முடிந்தது என்று பலரும் சொன்னார்கள்..

ஆனால், எதற்கும் ஜெயலலிதா கலங்கவேயில்லை. இன்னும் பல மடங்கு மனபலம் பெற்று அரசியலில் அடுத்த பாகத்தை ஆரம்பித்தார். அது, சகல தரப்புக்கும் அதகளமான 2.0 வெர்ஷன்.. (வெயிட் பண்ணுங்க)

  • எழுத்து: ஏழுமலை வேங்கடேசன்

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: