spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பிராம(ண)ணீய ஆதரவு நூலா... மனு ஸ்மிருதி?

பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?

- Advertisement -

தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம்  தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம் அளிக்கக் கூட ஆள் இல்லை.

    மனு ஸ்மிருதி பிராமணர்களை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் நூல் என்ற பிரச்சாரம் தர்மத்துக்கு எதிராக வீசப்படும் கூர்மையான கத்தி.

    எதிர்ப்பாளர்கள், ஏன் பல ஆன்மீக சிந்தனை கொண்டவர்களைக் கூட மனு பிராமண ஆதரவு நூல் என்று ஒப்புக்கொள்ள வைக்கும் ஸ்லோகங்கள் இருப்பதாக அவ்வப்பொழுது சில ஸ்லோகங்கள் சமூக ஊடகங்களில் வருகிறது. அப்படி வந்த கேள்விகளில் சில இங்கு சிந்திக்கப்படுகிறது.     

பிராமணனுக்கு கொலை தண்டனை கிடையா(து)தா?

    பிராமணனுக்கு தலையை முண்டிதம் செய்வது (மொட்டை அடிப்பது ) கொலைத் தண்டனையாகும். மற்ற வர்ணத்தாருக்கு கொலை தண்டனை உண்டு என்கிறது மனு அத்தியாயம் 8 சுலோகம் 379

    பிராமணன் பாபம் செய்தாலும் அவனைக் காயமின்றி அவன் பொருளுடன் நாட்டை விட்டு துரத்தவேண்டியது என்கிறது (மனு 8-380). பிரம்மஹத்தியை விட அதிக பாபம் உலகத்தில் கிடையாது. ஆதலால் பிராமணனைக் கொல்லவேண்டும் என்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாது. (மனு 8 381.)

    இப்படி பிராமணனுக்கு கொலை தண்டனை கிடையாது என்று சொல்வது பிராமண ஆதரவு நிலை அல்லவா? மனு பிராமண ஆதரவு நூல் தானே?

    இப்படி பிராமணனுக்கு ஆதரவான நூல் மனு ஸ்மிருதி என்கிறார்கள் .. உண்மைதான் என்ன?

    இப்படி பிராமணனை கொல்லாதே, அவன் தலைமுடியை மட்டும் நீக்கி மொட்டை அடி, அவனது பொருளுடன் ஊரை விட்டு துரத்து என்கிறது மனு இது என்ன சார் (அ)நியாயம்? என்கிறீர்களா? பிராமணனுக்கு மட்டும் மொட்டை, ஊர் விட்டு ஊர் கடத்தல் மற்றவர்களுக்கு மரண தண்டனையா?

    இப்படி பிராமணனுக்கு தண்டனை சொல்லும் பகுதி மனுவில் எந்த இடத்தில் வருகிறது என்று பார்த்தால் ஸ்த்ரீஸங்கிரணம் பகுதி, அதாவது பிறர் மனைவியை புணர்தல் பகுதியில்தான் இப்படி தண்டனை வருகிறது.  பிறர் மனைவியை புணரும் பிராமணனுக்குத்தான் இந்த தண்டனை.

    தனது உறவினர், நண்பர், ஊர்க்காரர், தன்னை அடையாளம் காணும் நிலையில் உள்ள எவரும் காணாதவாறு ஒருவர் 7 ஆண்டுகள் (வெளியூரில் / நாட்டில்) வாழ்ந்தால் அவன் இறந்து விட்டதாக இந்திய தண்டனை சட்டம் இன்றும் கூறுகிறது.

    அப்படி ஊர் விட்டு ஊர் கடத்தப்படும் பிராமணன் மனு தண்டனை சட்டத்தின் பார்வையில் இறந்துவிட்டதாகவே கருத்தப்படுகிறான். இதைத்தான் மனு அவன் பொருளுடன் நாட்டை விட்டு துரத்தவேண்டியது என்கிறது (மனு 8-380.)

    ஒருவரின் குடுமியை அறுப்பது என்பது அவனை கொல்வதற்கு ஈடானது. குடுமி இல்லாமல் ஒருவனை மொட்டைத் தலையுடன் கண்டாலே இந்த உண்மைத் தெரியும்.

    அதனால்தான் குழந்தை பிறந்தவுடன் முடி இறக்கி மொட்டையடிப்பதைத் தவிர வேறு காலங்களில் பிராமணர்கள் கோயில் வேண்டுதலாகக்கூட மொட்டை அடிப்பது கூடாது, என்று விதி உள்ளது.  பலர் இன்று அதை அறியாமல் அல்லது அறிந்து மீறுவதால் சாஸ்திரம் பொய்யாகாது. சாஸ்திரம் அப்படியே உள்ளது.

    அத்வைத சன்னியாசிகள் துறவு கோலத்தில் வபனம் (மொட்டை) அடித்துக்கொள்கிறார்கள். இதை அவர்களது துறவியல் மனப்பான்மையுடன் ஒப்பிட்டால் புரியும். எனவே பிராமணனுக்கு குடுமியை மழித்தால் அதாவது மொட்டை அடித்தால் அவன் இறந்ததாகவே அர்த்தம் என்கிற ரீதியில் மனு அதை மரண தண்டனையாக சொல்லுகிறது.

    முடியை எடுத்தால் தண்டனையா? என்றால் இன்றும் மஞ்சள் நோட்டீஸ் விட்டவன் ரேஷன் கார்ட் அரசால் திரும்பி பெறப்படும், அவன் எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு பொது பதவிகளிலும் தேர்வு செய்யப்படமாட்டான். அரசைப் பொறுத்த வரை அந்த மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த மனிதன் நடைப்பிணம். உயிர் இருந்தும் இல்லாதவன் என்று சட்டம் சொல்கிறது .

    குடுமி நீக்கப்பட்ட பிராமணன் அந்த நாட்டில், ஊரில் அல்லது வெளி தேசத்துக்கு சென்றாலும் அவன் குடுமி இல்லையென்றால் இவன் செய்த குற்றத்தினை மறைக்க முடியாது ஏனென்றால் அவனது தலையில் இருக்க வேண்டிய குடுமி இல்லையே?.

    குடுமி இல்லாதவனைப் பார்த்தால் ஓஹோ! இவன் குற்றவாளி என்று பார்த்தவுடன் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள். ஒழுக்கம் தவறிய பிராமணன் என்று இவனை எல்லோரும் அடையாளம் கண்டுகொள்வார்கள். அதனால் பிராமணன் என்று, குடுமியில்லாதவனை மதிக்க மாட்டார்கள் நடமாடும் பிணம் போன்று அவன் வாழலாம். பிராமணனுக்கு உரிய மரியாதை அவனுக்கு கிடைக்காது. மானம் இழந்த மனிதன் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?

    ஒழுக்கத்தினை விட்ட பிராமணனுக்கு வேதத்திற் சொல்லிய பலன் கிடைப்பதில்லை. ஒழுக்கமுடைய பிராமணனுக்கு சகல பலனும் குறைவின்றி கிடைக்கும். (மனு அத்தியாயம் 1 ஸ்லோகம் 109)

    அரசன் கொலை தண்டனை கொடுக்கவில்லை, ஆனால் நடைப்பிணமாக வாழும்படி செய்துவிட்டான். ஒழுக்கத்தினை விட்டு மாற்றான் மனைவியுடன் கூடிய பிராமணனானவன், பிராமணன் என்கிற நிலையை சமூகத்தில் இழந்துவிடுகிறான் அதை சமூகத்துக்கு அறிவிக்கிறது குடுமியை நீக்கும் தண்டனை.

    ஸ்ரீருக்மணியினை ஸ்ரீ கிருஷ்ணர் மணம் முடிக்க எண்ணியபோது அதை எதிர்த்த தன்னுடன் சண்டையிட்ட ஸ்ரீருக்மணியின் சகோதர் ருக்மியை கொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோது ருக்மியின் தலை சிகையை மட்டும் வெட்டி சிகையை நீக்குவதன் மூலம் க்ஷத்திரியனாகிய அவனுக்கு தோல்வியின் அடையாளமாக மொட்டை அடித்து காயத்தினை உண்டாக்கி அவமானம்   என்னும் தண்டனையை ஸ்ரீ கிருஷ்ணர் தந்தார் என்கிறது பாகவதம். 

   மொட்டை அடித்தால் அந்த பிராமணன் இறந்துவிட்டவனாகிறான் என்று .ஸ்த்ரீ சங்கிரகணம் விஷயத்தில் மட்டும் இப்படி தண்டனையை சொல்லிய மனு ஸ்மிருதி, தண்டனைக் கொடுமை விஷயத்தில் அதாவது தண்டனைகள் பற்றி கூறும்போது, இதே 8 ஆம் அத்தியாயத்தில் பாபம் செய்த மனிதர்கள் அரசனால் தண்டிக்கப்பட்டால்(தான்) பாபங்கள் நீங்கி சுவர்க்கம் அடைவார்கள் என்கிறது மனு (8 318).

        அரசனால் எந்த ஒரு மனிதனும் குற்றத்துக்கு தண்டனை அடையாவிட்டால் அவனுக்கு பாபம் போகாது என்கிறது மனு.

    ஒருவேளை ஒரு பிராமணன் செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்படாவிட்டால் அவனுக்கு பாபம் போகாது என்பதே அவனுக்கு பெரிய தண்டனையாகும். மேலும் அப்படி “பிராமணனை தண்டிக்காதே என்று எங்கும் மனு சொல்லவில்லை”. மாறாக கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது.

          பிராமணனுக்கே அதிக தண்டனை…

    இதோ மனு 8 – 335 என்ன சொல்கிறது பாருங்கள் “ தன்னுடைய தந்தை ,ஆசிரியன் இஷ்டன், தாய், மனைவி, பிள்ளை புரோகிதன் இவர்கள் தங்களது தருமங்களை கடைபிடிக்காவிட்டால் அரசன் தண்டிக்காமல் அவர்களை விடக்கூடாது. புரோகிதன் என்பவன் பிராமணனாகத்தானே இருக்கமுடியும்?. அப்புறம் எப்படி பிராமணனுக்கு தண்டனை கிடையாது என்று சொல்லமுடியும்?.

    இன்னும் மனு சொல்கிறது கேளுங்கள் 8-337 திருட்டுக்கு தண்டனை பற்றி சொல்லும்போது எந்த திருட்டுக்கு எவ்வளவு தண்டம் விதிக்கின்றதோ அதைத் திருடனின் குணதோஷங்களை அறிந்து திருடினவன் சூத்திரனாக இருந்தால் எட்டு பங்கு வரையிலும் அதுவே வைசியனாக இருந்தால் பதினாறு பங்கு வரையிலும், அதுவே க்ஷத்திரியனாக இருந்தால் முப்பத்தியிரண்டு பங்கு வரையிலும் “அதுவே பிராமணனாக இருந்தால் அறுபத்தி நான்கு அல்லது நூறு மடங்கு அல்லது 128 மடங்கு (பங்கு) வரை தண்டம் விதிக்க வேண்டும் “ஏனென்றால் அந்தப் பிராமணன் அந்த திருட்டினால் வரும் தோஷத்தினை அறிவான் அல்லவா?”.

    இப்படி பிராமணனுக்கு மற்ற வர்ணத்தாரைவிட பல மடங்கு / பங்கு அதிக தண்டம் விதிக்கிறது திருட்டு குற்றத்துக்கு மனு ஸ்மிருதி. ஏனென்றால், தவறு என்று தெரிந்து அதனால் வரும் தோஷத்தினை நன்றாக அறிந்தவன் பிராமணன். தவறு என்பதையும், தோஷம் என்பதையும் தெரிந்தவனாகிய பிராமணன் திருட்டை செய்தால் அந்த குற்றத்துக்கு தண்டனை அதிகம் என்பதால் பிராமணன் குற்றம் செய்தால் அவனுக்கு தண்டனை அதிகம் என்றே மனு சொல்கிறது. (மனு 8-338)   

    பிராமணனுக்கு தண்டனை கிடையாது என்று ஒரு விஷயத்தில் கூறுகிறது மனு ஸ்மிருதி 8-340 எதுக்கு தெரியுமா?

    வேலியில்லாத அத்தி ,ஆல், முதலியவற்றின் பழம், கிழங்கு ஹோமத்திற்காக சமித்து, பசுக்களுக்காகப் புல்லு, இவைகளை அயலான் பூமியிலிருந்து கேளாமல் எடுத்துக்கொள்ளலாம் அப்படி எடுத்துக்கொண்டாலும் அது திருட்டு அல்ல என்று மனு 8 – 339 கூறுகிறது. அதுவும் வேலியில்லாததால் அந்த அனுமதி, வேலி போட்டிருந்தால் அங்கு பிராமணன் எடுக்க கூடாது ஏனென்றால் வேலி போடுவது வேறு யாரும் உள்ளே வரக்கூடாது என்பதால்.

    அந்தக்காலத்தில் வீடுகளில் திண்ணை என்று வாசல் பகுதியில் இருக்கும். வழிப்போக்கன் வீட்டுக்காரனின் அனுமதி இல்லாமலேயே அங்கு திண்ணையில் சரீர சிரமம்தீர  படுத்துக்கொள்ளலாம் என்பது மாதிரி. வேலி இல்லையென்பதால் பசுவுக்கு புல், ஹோமத்திற்கு சமித்து, அத்தி, ஆல் என்னும் பழம், கிழங்கு மட்டுமே அனுமதியின்றி எடுத்துக்கொள்ள அனுமதி. 

    “உடையவன் கொடாமல் தானே எடுத்துக்கொள்கிறவனான திருடனுக்கு யாகங்களை செய்து வைக்கும்போது திருட்டுப்பொருளை, தக்ஷணையாக  வாங்குகிற பிராமணனும் அந்த திருடனுக்கு சமமானவன் என்கிறது.

    ஆம்! மனு நேரடியாக செய்யாத குற்றத்துக்கும் கூட பிராமணனை திருடன் என்று குற்றம் சாட்டுகிறது அந்த அளவுக்கு பிராமணன் ஒழுக்கமுடன் இருக்கவேண்டும் என்கிறது.  

     “மீண்டும் இதுதான் பிராமணனுக்கு சொல்லப்பட்ட விதி ஒழுக்கத்தினை விட்ட பிராமணனுக்கு வேதத்திற் சொல்லிய பலன் கிடைப்பதில்லை. ஒழுக்கமுடைய பிராமணனுக்கு சகல பலனும் குறைவின்றி கிடைக்கும். (மனு அத்தியாயம் 1 ஸ்லோகம் 109)”

           பிராமணன், தானம், நிதானம்

     பிராமணன் முதல் வருணத்தான் ஆனதால் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் முகத்தில் பிறந்ததானாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான் (மனு அத்தியாயம் 1 சுலோகம் 100)

    ஆதலால் பிராமணன் ஒருவரிடத்தில் தானம் வாங்கினாலும் தான் பொருளையே சாப்பிடுகிறான். தன் வஸ்திரத்தையே உடுத்துகிறான். தன் சொத்தையே தானம் செய்கிறான். மற்றவர்கள் அவன் தயவினாலேயே அவற்றை அனுபவிக்கிறார்கள் (மனு அத்தியாயம் 1 சுலோகம் 101)

    படித்தவுடன் எந்த பிராமணரல்லாதவருக்கும் மனு ஸ்மிருதி மேல் வெறுப்பும் கோபமும் வரும் பார்ப்பன அயோக்கியர்கள் எழுதிவைத்து நமது முன்னோர்களை மூளைச் சலவை செய்துவிட்டார்கள். நமது முன்னோர்களும் அந்த சூழ்ச்சிக்கார பார்ப்பனர்களின் சூழ்ச்சி அறியாமல் ஏமாந்து போய்விட்டார்களே?! என்று தோன்றுவது இயற்கை.

    பார்ப்பானாம், பிரம்மாவாம், முகமாம், முதல் வர்ணமாம் எல்லா தானமும் அவனுக்காம்…, பிச்சை எடுக்கிற பயல் அப்படி பிச்சை எடுக்கிற பயலுக்கு அது பிச்சை இல்லையாம், அவன் பொருளையே அவனே அனுபவிக்கிறது போலவாம் என்ன இது அநியாயம்? என்று தோன்றலாம்.

    மனுவை எரிக்கச் சொல்லி ஈவெராமசாமி நாயக்கர் சொன்னது சரிதான் பாம்பை கண்டால் விடு பார்ப்பானை கண்டால் அடி என்று சொன்னாரே?சரிதான். இப்படி கூடத் தோன்றும்.

    சரி இது குறித்து சிந்திப்போமா?

    பிராமணன் எல்லா வர்ணத்தினரின் பொருளையும் தானம் வாங்க தகுதியுள்ளவன் என்று சொன்ன மனு அந்த பிராமணருக்கு சில/பல கட்டுப்பாடுகளையும் அல்லவா வைத்துள்ளது மனுஸ்மிருதி. அந்த கட்டுப்பாட்டையும் விதிக்கிறார் அதை படிக்காமல் இந்த முதல் அத்தியாயம் 100, 101 ஸ்லோகத்தினை மட்டும் படித்துவிட்டு எம்பிக்குதித்தால் பிளட் பிரஷர் தான் வரும். அப்புறம் “எனக்கு முட்டாள்கள்தான் தேவை” என்று சொன்ன ஈவெராமசாமி நாயக்கருக்குத்தான் சிஷ்யனாக இருக்கவேண்டிவரும்..

    குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு மந்திரம் சொல்லி எவர் யாகம் செய்து வைக்கிறாரோ அவர் உபாத்தியாயர், என்கிறது மனு ஸ்மிருதி (2-140) அதாவது மனு 1-100,101 சொல்லியுள்ளதே என்று தானம் அளவுக்கு அதிகமாக வாங்கக்கூடாது.

    அதாவது யாகம் செய்துவைக்க வரும் பிராமணர்கள் அதிகம் பணம் வாங்கக்கூடாது என்கிறார் மனு.

     வேதக்கல்வி படித்திருந்தாலும் அடிக்கடி தானம் வாங்குவதில் மனம் வைக்கலாகாது, அப்படி அதிகமாக தானம் வாங்கினால் அது பிரம்ம தேஜஸ்சை அழிக்கும்  (மனு 4-186). பிரம்ம தேஜஸ்ஸை இழந்துவிட்டால் அப்புறம் அந்த பிராமணன் இழப்பதற்கு எதுவுமே இல்லையே? அவன் அப்புறம் நடைப்பிணமாயிற்றே? மதிப்பே போய்விடுமே.

    பிராமண ஜாதி கிரஹஸ்தன் 3 வருடங்களுக்கு போதுமான தானியத்தினை களஞ்சியத்தில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்,  (அந்த அளவுக்கு களஞ்சியம் வைத்துக்கொள்ள முடியாத ஏழை பிராமணன்) அதற்கு சக்தியில்லாவிடின் ஒருவருடம்,  அதற்கும் சக்தியில்லாதவன் (பரம ஏழை பிராமணன்) 3 நாளைக்கு, (3 நாளைக்கு சேர்த்து வைக்கக் கூட களஞ்சியம் இல்லாத பிச்சைக்காரன் நிலையில் உள்ள பிராமணன் பிட்சை எடுத்தால் தானே பிராமணன் ) அல்லது நாள்தோறும் சம்பாதித்துக்கொள்ளலாம்.

    “இந்த நால்வரில் முன் சொல்லப்பட்டவர்களை விட பின்னால் சொல்லப்பட்டவர்(கள்) அதாவது நாள்தோறும் அன்றைக்கு தேவையானதை மட்டும் (சம்பாதித்துக் கொள்பவபன்) தானம் பெறுபவன் மேலானவர்கள்”,ஏனென்றால் “பொருளை அதிகம் அடையாமல் இருந்தால்தான், போகங்களை அடையவேண்டும் என்ற ஆசை இல்லாதிருக்கும். (4-7,8)

    கர்மானுஷ்டானமுள்ள பிராமணன் (கிரஹஸ்தன்) அன்னம் (உணவு),வஸ்திரம் (துணி), இல்லாது கஷ்டப்பட்டால் அவன் க்ஷத்திரியனாகிய அரசனிடம் நின்றாவது, தன்னிடத்தில் யாகம் செய்தவனிடமாவது, தனது சிஷ்யனிடமாவது பொருளை வேண்டி பெறலாம். அவர்கள் இருக்கும் போது வேறு யாரிடமும் சென்று தானம் வாங்கக் கூடாது. (அட பிச்சை எடுப்பதற்கு அதுவும் அடிப்படை தேவையில் முதல் இரண்டான உண்ண உணவு உடுக்க உடை இரண்டுக்குமே மனு பிராமணனுக்கு இவ்வளவு கட்டுபாடு விதிக்கிறதே?)

    அப்படித்தான் போகம் ஏற்படக்கூடாது என்று பிராமணனுக்கு கட்டுபாடு உள்ளது. எல்லா தானத்தினையும் வாங்க எல்லா வர்ணத்தினர் தானத்தினையும் வாங்க தகுதியுள்ள பிரபுவுக்கு கட்டுபாடுகளை பார்த்தால் உண்மை புரியும்.

    தானம் வாங்குவது மட்டும் பிராமணனுக்கு சொல்லவில்லை தானம் கொடுக்கவும் வேண்டும் என்றும் பிராமணனுக்கு கட்டளை இடுகிறது (மனு அத்தியாயம் 1 88வது சுலோகம்.)

    பலாசுளையை உரிக்கும்போது கையில் அதன் பிசு பிசுப்பு ஒட்டிக்கொள்ளக் கூடாது என்று கையில் எண்ணை தடவிக்கொண்டு உரிப்பது போலத்தான் பிராமணன் தானம் வாங்குவதில் உள்ள விஷயமும்.

  • கட்டுரை: ஆரியத் தமிழன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe