ஹிந்துக்கள் சிறுபான்மையினரே!

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
(Source: ருஷி பீடம் மாத இதழ் ஜனவரி 2019 – தலையங்கம்)
தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் வேறொரு கோணத்தில் சிறுபான்மையினர். நாம் மைனாரிட்டி என்று நினைப்பவர்கள் பெரும்பான்மையினராக ஆகக்கூடிய காலம் தூரத்தில் இல்லை. கொஞ்சம் பரிசீலித்துப் பார்த்தால் இந்த உண்மையை உணர்வோம். இந்துக்கள் பெயரளவில் பெரும்பான்மையினராக இருந்தாலும், அதில் சிலர் – இட ஒதுக்கீட்டுக்காக இந்துக்களாக காட்டிக் கொண்டே இதர மதங்களுக்கு மாறியவர்கள்.

பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

வேறு சிலர் – இந்து மதத்திலேயே இருந்தாலும் இதன் மீது சிரத்தையோ இந்துக்களாக வாழ வேண்டும் என்ற ஆர்வமோ நம் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பக்தியோ சிறிதும் அற்றவர்கள். ஏதோ எப்போதோ பிறந்த நாளன்றோ இறந்த நாளன்றோ சிறிதளவு இந்துக்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோவிலுக்குச் செல்வார்கள்.

அவ்வளவுதானே தவிர இந்து தர்மத்திற்கோ, கோவில்களுக்கோ ஆபத்து ஏற்பட்டாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். கட்சித் தலைவர்கள் இந்து மதத்தின்மேல் அலட்சியம் காட்டினாலும் பெரிதாக அசைந்து கொடுக்க மாட்டார்கள். மேலும் ‘எந்த மதமானால் என்ன?’ என்று உதாசீனமாக இருப்பார்கள்.

இன்னும் சிலர் – நாத்திகர்களாக இந்துமத நூல்களையும் தெய்வங்களையும் சம்பிரதாயங்களையும் கோயில்களையும் இழிவு படுத்துவார்கள். அவற்றைப் பற்றி விமர்சித்து புத்தகங்கள் எழுதுவார்கள்.

இவ்வாறு இந்துக்களில் மூன்று விதமானவர்களைக் கழித்தால் சிரத்தையாக இந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சிறுபான்மையினரே. உண்மையான இந்துக்கள் இவர்கள்தான்.

இதற்கு மாறாக – பிற மதத்தவர்கள் நூற்றுக்கு நூறு பங்கு ஒரே விதமாக இருப்பார்கள். குடும்பங்கள் அனைத்தும் தம்முடைய மதத்தை விட உயர்ந்த மதம் வேறில்லை என்ற தீர்மானமான முடிவோடு இருப்பார்கள். தம் மத நூல்களைப் பற்றியும் தொழுகை இடங்களைப் பற்றியும் பழக்க வழக்கங்களைப் பற்றியும் எதிர்த்துப் பேச மாட்டார்கள்.

பிற மதங்களை அழிப்பதற்கும் தூஷிப்பதற்கும் பின்வாங்காத உக்கிரமான அபிமானம் கூட இவர்களில் காணப்படும். பெரியவர், சிறியவர், ஆண், பெண் அனைவரும் கட்டாயம் தம் மதம் சார்த்த வழிமுறைகளை அறிந்து கொள்வதோடு அவற்றைத் தவறாமல் பின்பற்றுவார்கள்.

தம் மதத் தலைவர் அநீதியானவராக இருந்தாலும் கலவரத்தைத் தூண்டுபவரானாலும் வாயைத் திறக்க மாட்டார்கள். மேலும் அனைவரும் ஒரே பேச்சிற்குக் கட்டுப்பட்டு அவரை வெற்றி பெறச் செய்வார்கள். தம் மதங்களின் பெயரால் தீவிரவாதமும் பயங்கரவாதமும் உருவாக்கும் அமைப்பைப் பற்றிக் கூட ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.

இவ்வாறு அந்நிய மதங்கள் இரண்டும் உறுதியான அனுஷ்டான நிஷ்டையில் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டாவது ரகம் என்று ஒன்று இல்லை. அதனால்தான் அவர்கள் எண்ணிக்கையிலும் அனுஷ்டானத்திலும் திடமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ஆசையும் தம்முடைய மதம் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதே. அவர்களின் லட்சியம் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதே. அதற்கேற்றவாறு முயற்சிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள்.

அவர்களிடம் காணப்படும் அந்த ஒரே பேச்சின்படி நடந்து கொள்ளும் குணத்தை கவனித்த பிறப்பால் இந்துவான கட்சித் தலைவர்கள் கூட அவர்களை ஆதரித்தும் மகிழ்வித்தும் நம் நாட்டின் செல்வங்களை அவர்களுக்கு பங்கிட்டும் வருகிறார்கள். அவர்களின் பண்டிகைகளுக்குச் சென்று அவர்களைப் போல வேடமிட்டு விருந்துண்டு களித்து வருகிறார்கள்.

ஆனால் அந்த மதங்களைச் சேர்ந்த ஒரு தலைவராவது இந்து மத பண்டிகைகளில் தென்பட மாட்டார்கள். வேண்டுமானால் தடைகள் விதித்து கலவரத்தில் ஈடுபடுவார்கள்.

இந்துவாய்ப் பிறந்த கட்சித் தலைவர்களுக்குத் தெரியும். நான்கு வித ரக ஹிந்துக்களில் மேலும் ‘என் குலத்தவனே ஆட்சிக்கு வர வேண்டும். என் குலத்தவனே எனக்கு வேண்டும்!’ என்று கோஷமிடும் நாற்பது வித ரகங்கள் உள்ளன என்று. இவர்கள் என்றுமே இந்துக்களை ஒன்று சேர விட மாட்டார்கள்.

இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் வெற்றியின் விளைவாக வரம்பு மீறிக் களிப்படைந்த சிலர் அக்கிரமமாக பச்சை நிறக் கொடியை ஏந்தி வீதிகளில் அலைந்து ‘பாகிஸ்தானுக்கு ஜே!’ என்று கூக்குரலில் கோஷமிட்டாலும் எந்த ஒரு பாதுகாப்பு அமைப்போ எந்த ஒரு கட்சித் தலைவரோ வாய் திறந்து ஒரு வார்த்தை கண்டிக்கவுமில்லை. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவுமில்லை. நாட்டின் ஒழுங்குமுறைக்கும் பாதுகாப்பிற்கும் பேராபத்து காத்திருக்கிகிறது என்றறிந்தும் எந்தவித சலனமும் இல்லை.

மதம் மாறவில்லை என்ற ஆத்திரத்தால் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் ஒரு அம்மன் கோவில் உற்சவத்தில் கோவிலுக்குள் புகுந்து பிரசாதத்தில் விஷம் கலந்து பல அப்பாவி மக்களின் சாவுக்குக் காரணமானார்கள்.

இது போன்ற செயல்கள் இந்துக்களின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமின்றி நாட்டின் பாதுக்காப்புக்கும் அமைதி சமரசத்திற்கும் ஆபத்தான சூழலை உருவாக்குகின்றன.

சிறு பான்மையினரான ஹிந்துக்கள் என்ன செய்ய இயலும்? அனைத்து மதத்தவரோடும் சேர்ந்து அனைவரும் நிம்மதியாக வாழ்வோம் என்று விரும்பும் சுபாவம் இயல்பாகவே உள்ள இந்துக்கள் பலமானவர்களாக இல்லாவிட்டால் நம் நாட்டில் இந்துக்களின் இருப்பிற்கே கூட சாத்தியம் இல்லாமல் போகும்.

தற்போது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்த அந்நிய மதத்தவரின் ஆட்சிக்கு மாறாக எதுவும் நிகழவில்லை. கேரளா, மேற்கு வங்காளம், காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஹிந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்காணா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இன்றைக்கும் சில இடங்களில் அந்நியர்களுக்கு முக்கியத்துவம் உள்ளது. ஹிந்துக்கள் ஒவ்வொறு கணமும் பாதுகாப்பற்று பயமும் கவலையுமாக திகிலோடு வாழ்கிறார்கள்.

சில அறிவாளிகள் புள்ளி விவரங்களோடு உண்மையை எடுத்துரைத்தாலும் அவை பேஸ்புக், வாட்சப், யுடியூப் போன்றவற்றில் லைக்கிங்கும் ஷேரிங்கும் பெறுவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்தையும் காண்பதில்லை. சரியான எதிர்விளைவுகள் நிகழ்வதில்லை.

முக்கியமான ஊடகங்கள் அனைத்தும் உண்மையை மறைக்கப் பார்க்கின்றன. தம் குலத் தலைவர்களுக்கு பஜனை செய்தும் பல்லக்கு சுமந்தும் காலத்தை ஒட்டுகின்றன.

பண்டைய வரலாற்றில் பாரத நாட்டின் மீதும் ஹிந்து தர்மத்தின் மீதும் நடந்தேறிய அந்நிய படையெடுப்பைப் பற்றியும் அக்கிரமங்களைப் பற்றியும் இன்னும் தற்போது நடக்கும் கொடுமைகளைப் பற்றியும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளும் அக்கறையுமில்லை. அவர்கள் ‘நோட்டா’ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எதிலும் பொறுப்போடு இந்தியாவின் தர்மங்களைக் காத்துக் கொள்ளும் முயற்சியைச் செய்வதில்லை.

இத்தகைய பின்னணியில் நம் நாட்டையும் தர்மத்தையும் காப்பாற்றும்படி இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்யப் போகிறோம்?

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.