சென்னை லயோலா கல்லூரியில் கடந்த சனி, ஞாயிறு இரு தினங்கள் வீதி விருது அமைப்பின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகிலன் என்பவர் வைத்த ஓவியக் கண்காட்சி பெரும் புயலைக் கிளப்பியது.

நாட்டையும் இந்து மதத்தையும் கேவலமாக சித்திரிக்கும் ஓவியங்கள், பிரதமர் மோடி, அரசின் திட்டங்கள் ஆகியவற்றை அவதூறு கிளப்பும் வகையிலான ஓவியங்கள் என வரையப் பட்டிருந்தன. இது சமூகத் தளத்திலும் அரசியல் மட்டத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கண்காட்சியை ஏற்பாடு செய்த லயோலா கல்லூரி நிர்வாகத்துக்கும், இந்த நிகழ்ச்சியை வடிவமைத்த அமைப்பினருக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் ஒன்றுக்கு ஸ்பான்சர் செய்திருந்த கங்கா ஸ்வீட்ஸ் நிறுவனத்துக்கும் எதிராக பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது. கங்கா ஸ்வீட்ஸ் நிறுவனத்தை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள கங்கா ஸ்வீட்ஸ் நிறுவனம், தாங்கள் அந்த ஒவியக் கண்காட்சிக்கு ஸ்பான்சர் செய்யவில்லை என்றும், நடந்த நிகழ்வுகளால் தாங்களும் வருத்தம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தாங்கள் பல வருடங்களாக நலிந்த கலைஞர்களை ஆதரித்து வாழ்வாதாரம் தருவதற்காக இந்த லயோலா கல்லூரியின் சார்பிலான அமைப்புக்கு ஸ்பான்சர் செய்து வருவதாகவும், இந்தக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் தங்கள் நிறுவனத்தைக் குறித்து தேவையற்ற எதிர்மறை பிரசாரம் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறியுள்ளது.

மேலும் தங்கள் நிறுவனம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காக்கும் விதமாக சென்னையில் உள்ள சில கோவில்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வதுடன், கிராமங்களில் இருக்கும் பழமையான கோவில்களை செப்பனிட உதவுவதாகவும், கோவில்களையும் கட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தென்தமிழகத்தின் சில கிராமங்களில் கோவில்கள் கட்டுவதற்கு உதவி செய்வதுடன், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளுக்கும் பொருளுதவி செய்து வருவதாகவும், தூத்துக்குடி மாவட்டம் முத்துலபுரம் மற்றும் நம்பியாபுரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பழமையான சிவன் கோவில்களை அரசு அனுமதியுடன் பல லட்சம் செலவு செய்து சீர்செய்து கும்பாபிஷேகமும் செய்து முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களுக்கும் பொருளதவி செய்வது நாட்டின் பாரம்பரியத்தின் மீது கங்கா ஸ்வீட்ஸுக்கு இருக்கும் பற்றைப் பறை சாற்றும் என்று கூறியுள்ள அந்நிறுவனம், சமூகத்தின் ஆரோக்கியமான செயல்களுக்கு தாங்கள் ஸ்பான்சர் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், சென்னையில் நடைபெறும் இந்து ஆன்மீக சேவை காட்சிக்கும் ஸ்பான்சர் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

லயோலா கல்லூரி ஓவியம் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்றும்,
என்றென்றும் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரியத்தைக் காப்பதிலும் ஏழைகளுக்கு உதவி புரிவதிலும் கங்கா ஸ்வீட்ஸ் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...