spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇளம் பெண்களைக் குறிவைக்கும் சா’தீய’ அரசியல்! கொலை, வன்முறைகளுக்கு தீர்வு என்ன?!

இளம் பெண்களைக் குறிவைக்கும் சா’தீய’ அரசியல்! கொலை, வன்முறைகளுக்கு தீர்வு என்ன?!

- Advertisement -

வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைக்கு ஈடான நிலையில் இருக்கிறது கடலூர் மாவட்டம்! விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் வீட்டில் தனியாக
இருந்த கல்லூரி மாணவி, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு பொறுக்கியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பண்ருட்டி அருகே குச்சிப்பாளையத்தில் பள்ளி,
கல்லூரி செல்லவேண்டிய மாணவிகள், பொறுக்கிகளின் பாலியல் தொல்லைகளுக்கு பயந்து படிப்பை பாதியில் கைவிட்டு திருமணம் செய்துகொள்கின்றனர்.

இவையெல்லாம், ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல – கடலூர், நாகை, அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியிருக்கும் ஒரு மாபெரும் சமூகக் கேட்டின் தீய விளைவுகள் ஆகும்!

காரணம் என்ன?

ஒரு குறிப்பிட்ட வகுப்பை சாராத மற்ற சமுதாயப் பெண்களை குறிவைத்து அவர்கள் மீது வன்முறையை ஏவும் ஒரு கொடூரமான கலாச்சாரம் இந்த மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகளில் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது. சாதி ஒழிப்பு என்கிற போர்வையில் இந்த கொடூரக் கலாச்சாரத்துக்கு, ஊடகங்களாலும் சில அரசியல் அமைப்புகளாலும் புரட்சி வடிவமும், சமுதாய அங்கீகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அக்கிரமத்தினை அரங்கேற்ற திட்டமிட்ட தொழில்முறை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக ஒரு மிகப்பெரிய கட்டமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக முன்னேறிய நகரமான நியூயார்க்கில், ’21 வயதுக்குள் திருமணமோ குழந்தை பிறப்போ வேண்டாம். உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தள்ளிப் போடுங்கள்’ என்கிற பிரச்சாரம் நடக்கிறது. ஐநா குழந்தைகள் நிதியம் (UNICEF), ‘இளம் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு, அவர்களுக்கு கல்வியை அளிக்க வேண்டும்’ என்று பிரச்சாரம் செய்கிறது. தந்தை பெரியார் ‘பெண்களுக்கு 21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்யாதீர். அவர்களை படிக்க வையுங்கள்’ என்றார்.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு நேர்மாறாக ’18 வயதை அடைவதற்கு முன்பாக மாற்று சாதி சிறுமிகளின் மனதை மயக்க வேண்டும். 18 வயது ஆன உடன் இழுத்துக் கொண்டு ஓட வேண்டும். அதுதான் மாபெரும் புரட்சி’ என்கிற சித்தாந்தம் வளர்க்கப்பட்டுள்ளது (ஏனெனில் 21 வயது கடந்த பெண்கள் ஏமாறுவது குறைவு). மாற்று சாதி சிறுமிகளை இழுத்துக்கொண்டு ஓடிவந்த 1000 பேருக்கு திருமணம் செய்து வைத்த கடலூர் விசிக பொறுப்பாளர் ஒரு மாபெரும் சாதி ஒழிப்பு புரட்சியாளர் என்று ஆனந்த விகடன் புகழாரம் சூட்டியது!

இவ்வாறான, சீரழிவு சித்தாந்தத்தால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூண்டப்பட்ட ஒரு கும்பல், 13 வயது முதல் 21 வயது வரையிலான பெண்களை குறி வைத்து அவர்களை திட்டமிட்டு ஏமாற்றுகின்றனர். பாலியல் ரீதியுலும் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் சுரண்டுகின்றனர். மேற்கண்ட கும்பலால் பாதிக்கப்படும் மிகப்பெரும்பாலான குடும்பத்தினர் இந்த நிகழ்வினை மூடி மறைக்கின்றனர். பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இவர்கள் விரிக்கும் வலையில் வீழாத பெண்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இந்த சூழலில் இளம் பெண்கள் பலரும் படிப்பை கைவிட்டுவிடுகின்றனர்.

வே. அனைமுத்து அவர்களால் நிறுவப்பட்ட, பெரியாரிய மார்க்சிய பொதுவுடமை கட்சியின் மகளிர் அணிச் செயலர் கோவி. ராமலிங்கம் எழுதிய ஒரு கட்டுரையில் இந்த கொடுமைகளை பின்வருமாறு விவரிக்கிறார்:

//”தறிநெய்து, துன்பப்பட்டு, தான் பெற்ற பெண்ணை முதல்முறையாகவு கல்லூரிக்கு அனுப்பி, ஆசை யோடு படிக்க வைக்கிறார் ஒரு பெற்றோர். ஒரு பையன் அவனது கெட்ட நடத்தைக்காக ஒரு கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறான்; அவனுக்கு வயது ஏறுகிறதே தவிர கல்வி கற்பதில் நாட்டமில்லை; வேறு ஒரு கல்லூரியில் அவனை சேர்த்துக் கொள்கிறார்கள். அங்கும் அவன் படிப்பில் ஈடுபாடு காட்டவில்லை. வயதோ 23 ஏறுகிறது. கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலித்து தன் குடிசையில் இரண்டு நாட்கள் வைத்து இருக்கிறான். பின்னர் பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்து பேசி, பெண்ணை மீட்டு வருகின்றனர். அவன் அடுத்த வேட்டைக்குத் தயார் ஆகின்றான்.

அழகிய கல்லூரிப் பெண் அவனது வேட்டைக்கு இரையாகிறாள்; மூன்றாம் ஆண்டு மாணவி, படிப்பில் படுசுட்டி. அவனோ வயதில் மூத்தவனாயிருந்தும் அவளை விடக் கீழ்வகுப்பில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டே இருக்கின்றான். இறுதி யாண்டுத் தேர்வு எழுதச்சென்ற அவளின் கழுத்தில் அவனின் மஞ்சள் கொம்பு கட்டிய மஞ்சள் கயிறும் ஏறுகிறது. பிறகு கணவன் – மனைவி உறவு. பெண்ணின் படிப்பும் நின்று விடுகிறது. அவனுக்கோ படிப்பு வெகுதூரம். செய்தி அறிந்த பெண்ணின் தாய் – தகப்பன் துடிக்கின்றனர். வழக்குமன்றம் வரை வந்து பெண்ணும் பையனும் வயது அடைந்தவர்கள் என்பதால் யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பதினான்கு வயதுப் பெண்ணை லாரி ஓட்டும் படிப்பறிவல்லா ஒருவன் அழைத்துச் சென்று மஞ்சள் கயிறு கட்டி மனைவியாக்கிப்
பாழ்படுத்துகிறான். வழக்கு மன்றத்தில் பெரும் போராட்டத்திற்குப் பின் நீதி கிடைத்தது. பெண் பெற்றோருடன் சேர்ந்து விட்டாள்.

இந்த உண்மை நிகழ்வுகளில் எல்லாம் கெடுவது பெண்ணின் கல்வி; பெரும் போராட்டத்திற்குப் பின் பெரும் சீர்திருத்தவாதிகள் பெண் கல்விக்குக் குரல்
கொடுத்துப் பெற்ற பெண் கல்வி இவ்வாறு சீரழிகிறது”//

அரங்கேற்றப்படும் குழு வன்முறை

இந்தக் குற்றங்கள் தனிமனித குற்றமாக மட்டும் நிகழ்த்தப்படுவதில்லை. மாறாக, குழுவாக சேர்ந்து தொல்லை கொடுத்தல் (Group harassment) என்பதில் தொடங்கு கிறது. திட்டமிட்டு சமுதாய நோக்கில் குழுவாக உருவாக்கப்படும் வன்முறை இதுவாகும். கூடவே, இன்னொரு சமுதாயத்தை தண்டிக்க வேண்டும் என்கிற பழிவாங்கும் மனப்பான்மை இக்குற்றங்களுக்கு ஒரு அற வலிமையை அளிக்கிறது! (Group harassment can be directed at individuals on the basis of discrimination on race, caste or other factors)

ஒரு குழுவினர் தமக்கென்று ஒரு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்வது வழக்கம். அதனால், தமது குழுவினர் செய்யும் தவறுகளை அந்தக் குழுவில் உள்ள மற்றவர் களும் நியாயப்படுத்துவார்கள். அவ்வாறாக ஒரு குழு ஒருமித்து இயங்கும் போது அக்குழுவில் உள்ள பலரும் பாலியல் தொல்லைகள் தருவதை இயல்பான பழக்கமாக கருதிக்கொள்கின்றனர் (if sexual harassment is perceived as tolerated or expected by other group members, then members are more likely to engage in it – by Eric D. Wesselmann and Janice R. Kelly, Sex Roles scientific journal 2010).

மேலும், தாம் ஆண்மையுள்ளவர், சக்தியுள்ளவர் என்கிற கருத்தினைக் கொண்டிருக்கும் நிலையில், அதாவது “சரக்கும் மிடுக்கும்” இருப்பதாக குழுவினர் நம்பும் சூழலில் – பாலியல் தொல்லைகள் கொடுக்கும் போக்கு அதிகமாகிறது! (men who have a higher conformity to masculine norms are more likely to engage in gender harassing behaviour when encouraged by a peer than those with a lower conformity to masculine norms – by Christopher Hunt and Karen  Gonsalkorale, Sex Roles scientific journal 2014) இத்தகைய பாலியல் தொல்லைகள் தான் பின்னர் மிகக் கொடூரமான பாலியல் குற்றமாக மாறு கிறது.

குச்சிப்பாளையத்தில் பெண்களை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவிடாமல் துன்புறுத் துவது பாலியல் தொல்லை. அதுவே, விருதாச்சலத்தில் கொடூரமான குற்றமாக மாறியுள்ளது. இத்தகைய கொடூரமான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்தவொரு சமூகமானாலும், இன்னொரு சமூகத்தின் மீது பாலியல் தொல்லையையும், பாலியல் வன்முறையையும் ஏவும் அநீதியை இனி ஒருபோதும் பொறுத்துக்கொள்ளக் கூடாது.

சாதி, மதம், இனம், மொழி என எந்தவொரு அடையாளத்தின் அடிப்படையிலும் பெண்கள் மீதான வன்முறை ஏவப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த
வேண்டும்.

சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் தொல்லை ஏன் ஆபத்தானது?

1. குழந்தைகள் மீதான வன்முறை:

சிறுமிகள் மற்றும் குழந்தைகள் உரிமை என்பது பன்னாட்டு சட்டங்களால் ஏற்கப்பட்ட மிக முதன்மையான உரிமை ஆகும். ஐநா குழந்தைகள் உடன்படிக்கையின் கீழ் (Convention on the Rights of the Child – CRC 1989) குழந்தைகள் மீதான அனைத்து விதமான வன்முறைகளையும் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. குழந்தைகள் குறித்த அனைத்து நடவடிக்கைகளிலும், ‘குழந்தையின் நலன்’ என்பதே முதன்மையான நோக்கமாக (The best interests of the child) இருக்க வேண்டும்.

சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மீது திணிக்கப்படும் பாலியல் தொல்லை அவர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து, அவர்களின் வாழ்வையே  நாசமாக்குகிறது. குழந்தைகளின் நலனே எல்லாவற்றையும் விட முதன்மை (The best interests of the child) என்கிற கோட்பாட்டை ‘பாலியல் தொல்லை’  முற்றிலுமாக மறுக்கிறது.

2. பெண்கள் மீதான வன்முறை:

பெண்கள் மீதான அனைத்து விதமான வன்முறைகளையும் தடுக்க வேண்டியது ஐநா பெண்கள் உடன்படிக்கையின் (Convention on the Elimination of all Forms of Discrimination Against Women – CEDAW 1979) கீழ் அரசாங்கத்தின் கடமை. குறிப்பாக, வன்முறையிலிருந்து பாதுகாப்பு, பெண் கல்வி, நல்ல உடல்நலம், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை கிடைக்கச் செய்ய வேண்டும். பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறை இந்த உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது.

3. கல்வி உரிமை பறிப்பு:

கல்வி பயிலும் காலத்தை குறிவைத்து ‘பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறை’ திணிக்கப்படுவதால், பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் நிறுத்தப் படுகின்றனர். பதின்வயதிலேயே காதல் திருமணம் செய்யும் பெண்கள், தமது படிப்பை தொடராமல் கை விடுகின்றனர். இளம் பெண்கள் மீதான வன்முறையால் பாதிப்படையும் பெண்கள் ஒரேயடியாக படிப்பை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால், பெண் கல்வி எனும் மாபெரும் லட்சியம் அழிக்கப்படுகிறது. முன் கூட்டியே திருமணம், வேலை செய்யும் திறன்கள் இன்மை, பொருளாதார சுதந்திரம் இல்லாமை என பல தொடர் பாதிப்புகள் இதனால் நேர்கிறது.

4. உடல்நலத்துக்கான உரிமை பாதிப்பு:

பாலியல் தொல்லையால் துரத்தப்படும் இளம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், மனநல பாதிப்புக்கும் ஆளாகின்றனர். வன்முறையில் சிக்கும் பெண்கள் காயமடை கின்றனர். பாலியல் வன்முறையில் சிக்கும் இளம்பெண்கள் கருக்கலைப்பு உள்ளிட்ட துன்பங்களை சந்திக்கின்றனர். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ள நேரும் பெண்கள், இளம் வயது தாயாக மாறுவதால் எண்ணற்ற உடல்நல பாதிப்புகளால் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது.

5. வேலை உரிமை பறிப்பு:

பதின்வயது என்பது வாய்ப்புகளின் காலம் (Adolescence: An Age of Opportunity – UNICEF). இந்த வயதில் படிப்பதும், வேலைக்கான திறன்களை வளர்ப்பதும்தான் எதிர்கால வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முக்கியமான காலக்கட்டத்தில், பாலியல் தொல்லையால் அலைகழிக்கப்படும் இளம்பெண்கள் – கல்வி வாய்ப்புகளையும் வேலைத் திறன்களையும் இழக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் நல்லதொரு வேலைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. பெண்களின் பொருளாதார தற்சார்பு முற்றிலும் பறிபோகிறது.

6. தலைமுறைகள் பாதிப்பு:

பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறை தலைமுறைகளை பாதிக்கிறது. இளம் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு, அவர் சார்ந்த குடும்பத்தை சின்னாபின்னம் ஆக்குகிறது. இளம்பெண்கள் படிப்பை கை விடுவதால், அது அவர்களின் குழந்தைகள் வளர்ப்பையும் பாதிக்கிறது. இளம் வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் இளம் பெண்களால், தமது குழந்தைகளின் உடல்நலத்தை பேணிக்காக்க முடிவதில்லை. குழந்தைகளுக்கு நல்ல உணவையோ, மருத்துவ வசதிகளையோ அளிக்க முடிவதில்லை. பெண்கள் நல்லதொரு வேலைக்கு சென்று பணம் ஈட்டும் நிலையும் இல்லாமல் போவதால் – வறுமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.

பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறையை ஒழிப்பது எப்படி?

கடலூர், நாகை, அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியிருக்கும் மாபெரும் சமூகக் கேட்டினை தடுக்க, இளம்பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு
கட்ட வேண்டும். அதற்காக பின்வரும் நடவடிக்கைகள் தேவை:

  1. ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை முன்கூட்டியே தடுக்க மாநில செயல்திட்டம்’ தேவை! (State Action Plans to Prevent Violence against Women)

பாலியல் தொல்லைகளில் இருந்தும் பாலியல் வன்முறைகளில் இருந்தும் பெண்களை முன்கூட்டியே பாதுகாத்தல், குற்றவாளிகளை தண்டித்தல், பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு முழு இழப்பீடு அளித்தல் ஆகியன அரசாங்கத்தின் கடமை ஆகும் (States are required to exercise due diligence to prevent acts of violence against women; to investigate such acts and prosecute and punish perpetrators; and to provide redress and relief to victims – UN Women). அந்த வகையில் ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை முன்கூட்டியே தடுக்க மாநில செயல்திட்டம்’ ஒன்றிணை உருவாக்கி செயலாக்க வேண்டும் (State Action Plans to Prevent Violence against Women). இந்த செயல்திட்டம் ஐநா பெண்கள் அமைப்பு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

2. போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தேவை

‘சரக்கு, மிடுக்கும் இருப்பவர்கள், இளம்பெண்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும்; அவர்களை மனம் மயக்குவதே வாழ்வின் இலக்கு’ என்கிற மிகத் தவறான, மிக மோசமான கருத்து தமிழ்நாட்டில் பரப்பப்பட்டுள்ளது. இந்த அவலத்தை மாற்ற, இளைஞர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசாங்கமும் ஊடகங்களும் சமூக அமைப்புகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

3. சமூக ஊடகங்கள் மூலமான பெண்கள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும்.

சமூக ஊடகங்கள் பாலியல் தொல்லைக்கான முதன்மை காரணமாக மாறியுள்ளன. பெண்களின் தனியுரிமைகளை பாதிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், தொல்லை கொடுக்கும் வகையிலும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க சிறப்பு சட்டம், தனிப்பிரிவு, அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் சிறப்பு பயிற்சி, குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை உள்ளிட்ட, பெண்களுக்கு எதிரான சமூக ஊடகக் குற்றங்களை தடுக்கும் வகையிலான ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்செயல் காதல் அல்ல.

பதினெட்டு வயது நிறைவடையாத அனைவரும் குழந்தைகளே. 18 வயதுக்கு கீழுள்ள பெண்ணை 18 வயதுக்கு மேலான ஆண் ஒருவர் காதலிப்பதாகக் கூறுவதும்,
அதற்கு முயற்சிப்பதும் நியாயமற்ற சமூகக் கேடு ஆகும். அதாவது, 18 வயது நிறைவடையாத சிறுமியின் சம்மதத்துடன் நடந்தால் கூட, அது காதல் அல்ல.
பாலியல் குற்றமே ஆகும்.

எனவே, 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை காதலுடன் தொடர்புபடுத்தி பேசும் அநாகரீகத்தை முற்றிலுமாக ஒழித்தல் வேண்டும். குறிப்பாக, 18 வயதுக்கு கீழான பெண்கள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை செய்திகளில், காதல் என்கிற வார்த்தையை பயன்படுத்த மாட்டோம் என்று தாமாக முன்வந்து ஊடகங்கள் அறிவிக்க வேண்டும்.

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும், பள்ளி மாணவிகளை காதலிப்பது போன்ற காட்சிகளை வைக்க மாட்டோம் என தாமாக முன்வந்து
திரைப்படத் துறையினர் அறிவிக்க வேண்டும்.

5. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முன்கூட்டியே தடுத்தல்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான – அவசர தொலைபேசி வசதிகள், காவல்துறை காண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் விரிவாக
செய்யப்பட வேண்டும் (an integrated, system-wide response to incidents of violence against women).

6. பெண்களுக்கு எதிரான குற்றமிழைப்போருக்கு விரைவில் தண்டனை

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனுக்குடன் விசாரித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்காக சிறப்பு விசாரணை மற்றும்
சிறப்பு நீதிமன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். (specialized police units and specialized prosecutor units on violence against women/ The creation of a specialized court system or specialized court proceedings guaranteeing timely and efficient handling of cases of violence against women).

7. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பள்ளிகள், கல்லூரிகள்

இளம்பெண்களுக்கு முழு பாதுகாப்பான சூழலை பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் உருவாக்க வேண்டும். (Safe Schools and Education Institutions for
Girls).

8. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து

பெண்களுக்கு முழு பாதுகாப்பளிக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மாற்றியமைக்க வேண்டும். (Safe Public Transport for Girls and Women).

9. பெண்களுக்கு பாதுகாப்பான பொது இடங்கள்

பெண்களுக்கு முழு பாதுகாப்பளிக்கும் வகையில் பொது இடங்களை மாற்றியமைக்க வேண்டும். பொது கழிப்பிடங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கப்பட வேண்டும் (Safe Public Spaces for Girls and Women).

  • மொத்தத்தில், அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறையை அனைவரும் ஒன்றிணைந்து ஒழித்துக்கட்டுவது அவசரமும் அவசியமும் ஆகும். அதற்கு
    மேற்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.

[videopress JVNfDM5M]

வன்முறையை தடுப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறை, சமுதாய மோதல்கள், குழு மோதல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வன்முறைகளையும் தவிர்ப்பதற்கும், தீவிரவாதம்  போன்ற மிக மோசமான கேடுகள் நேராமல் தடுக்கவும், கடலூர், நாகை, அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பின்வரும் நடவடிக்கைகள் தேவை:

1. விளையாட்டு வசதிகளை அதிகமாக்கி, இளையோர் அனைவரும் விளையாட்டு துறையில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

இளைஞர்களும், இளம்பெண்களும் விளையாட்டுகளில் பங்கேற்பது அவர்களது வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன், வன்முறைகளையும் தீவிரவாதத்தையும் முன்கூட்டியே தடுக்கும். எனவே, இந்த மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் முழுமையான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி, இயக்க வேண்டும்.

2. தொழில்நுட்ப மற்றும் வாழ்க்கைத் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) வசதிகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும்.

இளம் வயதினர் பெரும்பாலானோர் மேற்கண்ட மாவட்டங்களில் கல்லூரிகளிலும் இல்லாமல், வேலையிலும் இல்லாமல் இருக்கிறார்கள். இது மிக ஆபத்தானதாகும். இந்த நிலையை மாற்றவும், நவீன கால வேலைவாய்ப்புகளுக்கு இளையோரை தயார் செய்யும் வகையிலும் தொழில்நுட்ப மற்றும் வாழ்க்கைத் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வசதிகளை (TVET – Technical and Vocational Education and Training) அதிக அளவில் உருவாக்க வேண்டும்.

3. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

மேற்கண்ட மாவட்டங்களின் அனைத்து விதமான கேடுகளுக்கும் ஒரு முக்கிய தூண்டுதலாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம் ஆகும். இதனை களைய
இந்த மாவட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் அதிக வேலைகளை உருவாக்கும் தொழில்களை ஏற்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகளை
பெருமளவில் உருவாக்க வேண்டும்.

4. மதுப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.

மேற்கண்ட மாவட்டங்களில் மதுவிற்பனை மிகப்பெரிய அளவில் உள்ளது. பலவிதமான சச்சரவுகளுக்கு மதுப்பழக்கமும் ஒரு தூண்டுகோலாக உள்ளது. எனவே,
மது ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்க வேண்டும்.

  • ‘தையலை உயர்வு செய்‘’ என்று மகாகவி பாரதி பாடினான். பெண்களை உயர்வு செய்யாத குடும்பமோ, நாடோ முன்னேற்றம் அடையாது. எனவே, மேலே சொல்லப் பட்டுள்ள அனைத்து விதமான மெய்ப்பிக்கப்பட்ட வழிமுறைகளையும் செயல்படுத்தி இளம் பெண்களை காப்பாற்ற வேண்டும்.

கட்டுரை: – இர. அருள்

email: [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe