spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதமிழ் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கவும்! அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டாம்!

தமிழ் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கவும்! அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டாம்!

- Advertisement -

modi constitution book

புதிதாக அமைந்துள்ள மோடியின் அரசு, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்; தமிழர்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்!

தமிழன் லேசுப்பட்டவன் இல்லை – அறிவு, உணர்வு இரண்டுமே அவனுக்கு உண்டு. ஆனால் என்ன அறிவை ஒரு சதவீதம் மட்டுமே பயன்படுத்துவான்! மீதி 99 சதம் ‘உணர்வை’ப் பயன்படுத்துவான். எனவேதான் அவனது ‘உணர்வுகளை’ மதிக்க வேண்டும் என்கிறோம்!

முதலில் ஒரு சிறப்புச் சட்டத் திருத்தம் மூலம் NEET தேர்வு, தமிழ் நாட்டுக்கு மட்டும் அகற்றப்பட வேண்டும்; தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ‘வெளி மாநிலத்தவருக்கு’ என்று சீட்கள் ஒதுக்கப்பட்டு, அந்த OTHER STATES QUOTA வில் வரும் வெளி மாநில மாணவர்கள் மட்டும் NEET எழுதி வரட்டும் – அவர்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திப் படிக்கட்டும்!

ஆனால் தமிழன் அறிவை விட ‘உணர்வு’ க்கு அதிகம் முக்கியத்துவம் தருபவன். NEET தேர்வின் போது ‘அரைக்கை சட்டை அணியச் சொல்கிறார்கள்’- ‘முழுக்கை சட்டை அணிந்து வந்தால் கழற்றச் சொல்கிறார்கள்’- ‘காதில் ஜிமிக்கி, தோடு இவற்றை அகற்றச் சொல்கிறார்கள்’- ‘தலைமுடியைக் கொண்டை போடத் சடை’… இப்படி உணர்வுபூர்வமான “தன்மானப் பிரச்னை” அவனைச் சூடேற்றும்!

நவீன எலெக்ட்ரானிக் உபகரணங்கள் – சுண்டுவிரல் சைசில் விவரங்களை சேமிக்கும் கருவிகள் வந்துவிட்டன : எனவே யாரும் முறைகேடுகளில் ஈடுபட்டு, தேர்வில் கோல்மால் செய்து, அடுத்தவன் வாய்ப்பைப் பறித்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளே இந்த ‘செக்கிங்’ கெடுபிடிகள்… – இதை எல்லாம் தமிழனுக்கு அறிவுபூர்வமாகப் புரிய வைக்க எந்த ஒரு பொறுப்புள்ள ஊடகங்களும் இல்லை!

இப்படி சற்று NEET தேர்வு தினத்தன்று சிரமங்களை எதிர் கொண்டாலும், பிறகு மெடிக்கல் சீட் கிடைக்கும் போது அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தில் சேரலாம் என்று தமிழனுக்கு வழிகாட்ட நல்ல அரசியல் தலைமைகள் இல்லை! அவர்களில் பலரும் சொந்தமாகத் தனியார் கல்லூரிகள் நடத்துபவர்கள். அவர்களுக்கு என்ன வியர்த்து வடிகிறதா தமிழனுக்கு அரசாங்கக் கட்டணத்தில் மருத்துவக் கல்வி என்று எடுத்துச் சொல்ல?!

NEET மூலம் மெடிகல் சீட் பெறுபவர்களிலும் OBC/SC/ST உள்ளிட்ட இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெறுபவர்கள் இருக்கிறார்கள் – சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் படிக்கலாம் என்று அறிவு பூர்வமாக தமிழனுக்கு யார் புரியவைத்தார்கள்!

அதைவிட அவனை ‘உணர்வு’ பூர்வமாக மடக்கி வைப்பதே லாபம் – அரசுக் கட்டணத்தில் இருந்து அவனை ஓரங்கட்டி, தங்கள் நிர்வாகக் கட்டண வலைக்குள் அவனை இருக்க வைப்பதே லாபம் என்பது ‘கல்வித் தந்தைகளுக்கு’ தெரியாதா என்ன? எனவே ‘பார் தமிழா, NEET தேர்வு பார்ப்பனீய சதி’- என்று உசுப்பி விட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தருவான் தமிழன்!

அவனிடம் அறிவில்லை என்று சொல்ல முடியாது – ஆனால் அதை 0.1 % மட்டுமே பயன்படுத்துவான் தமிழன்! மீதம் 99.9% ‘உணர்வு’ சார்ந்தே அவனது முடிவுகள் அமையும்!

எனவே பழையபடி மெடிகல் அட்மிஷன் – நீட் தேர்வு இல்லாத வெறும் +2 மதிப்பெண் மட்டுமே அடிப்படையாக, அதுவும் குறைந்தால் 50/60 லட்சம் அல்லது MD படிப்பும் சேர்த்து PACKAGE DEAL 1 கோடி ரூபாய் மெடிகல் சீட்டுக்கு என்றால் தமிழன் பரீட்சை எழுதும் சிரமம் இன்றி அதை வாங்க விரும்புவான்! வாங்கும் சக்தி இருப்பவன் வாங்கிக் கொண்டு போகட்டுமே!

அப்படி 50/60 லட்சம் கொடுத்து சீட் வாங்குபவர்களிலும் OBC/SC/ST… எல்லாம்தானே இருந்தார்கள், இருப்பார்கள்! ‘சமூக நீதி’ யையும் காப்பாற்றிய மாதிரி இருக்கும்!

எதற்காக ஜிமிக்கியைக் கழற்று, கம்மலைக் கழற்று, சட்டை பாக்கெட் செக் பண்ணுகிறேன் என்று ஒரு “திருடனைச் சோதிப்பது போலச் சோதித்து ” தமிழனின் “உணர்வை” ஏன் புண்படுத்த வேண்டும்!

அதே தமிழன் படித்து வெளிநாடு செல்கையில் அயல் நாட்டு விமான செக்யூரிட்டி செக்கப்பில் உடைகளை முழுவதும் களைந்து சோதனை இட்டால் கூட, சம்பாதிக்கப் போகும் டாலர்களை நினைத்து அவற்றை சகித்துக் கொள்ளும் ‘பகுத்தறிவு’ தமிழனுக்கு உண்டே!

அடுத்தது ‘சுற்றுச் சூழல்’ மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் தமிழன்! இதில் பல்கலைக் கழக GEOLOGY பேராசிரியர் விஞ்ஞானபூர்வமாக எவ்வளவு விளக்கினாலும் அதை ஏற்காமல், வாயில் புகையிலை இடுக்கி, கறைபடிந்த பற்கள் தெரிய, முண்டாசு கட்டியபடி ‘வில்லேஜ் விஞ்ஞானிகள்’ கருத்தையே ‘உணர்வு’ பூர்வமான தமிழன் மதிப்பான்!

வெறும் ஆறடி ஆழத்தில், பூமிக்கடியில் அதுவும் கிடை மட்டவாக்கில் – HORIZONTAL – பதிக்கப்பட்டு, அதன் மூலம் கொண்டு செல்லப்படும் மீதேன் வாயு எப்படி தரைக்கு நூறடி ஆழத்தில் காணப்படும் தண்ணீரை அசுத்தமாக்கும்? ஒரு டியூப் வழியாக, மிகுந்த பாதுகாப்பாக INSULATE செய்யப்பட்டுக் கடத்தப்படும் வாயு எப்படி விவசாய பூமியை வறண்டு போக வைக்கும்?

பூமிக்கடியில் இண்டாயிரம் அடி ஆழத்தில் கிடைப்பது எரிவாயுப் படலம் – வாயுவின் மென்மைத் தன்மை காரணமாக, அது பூமிக்கடியில் பாறை அடுக்குகளில் நகர்ந்து நகர்ந்து போகும். அதை ஒரே இடத்தில் நிலை கொள்ள வைக்க, நீண்ட டியூபை உள்ளே செலுத்திக் கவ்விப் பிடிக்க வைக்க வேண்டும் – பின்பு அதை மேலெழும்ப வைக்க, பக்கத்தில் ஒரு டியூப் பதித்து, அடர்த்தியான சேறு கலந்த நீரைப் பீய்ச்ச வேண்டும் – அப்போது அடர்த்தி குறைவான எரிவாயு மேலே எழும்! இதனை அந்தப் பேராசிரியர் படம் போட்டு விளக்கினார்! இந்த விஷயங்கள் நடப்பது பூமிக்கு 4000 அடி கீழே! தண்ணீர் மட்டம் என்பது பூமிக்கு கீழே சுமார் 1000 அடிகள் மட்டுமே – அதை இந்த எரிவாயுத் துரப்பணக் குழாய்கள் பாதிக்கவே செய்யாது… படம் போட்டுக் காட்டினாரே GEOLOGY பேராசிரியர்!

தன்னிடமுள்ள நிறைந்த அறிவை 1 சதம் மட்டுமே பயன்படுத்தும் தமிழன் ஏற்றானா அதை? அவன் 99 சதம் “உணர்வுகளால்” கட்டமைக்கப் பட்டவன்! எனவே அவன் உதயகுமார், சீமான், பூவுலகின் நண்பர்கள்… போன்றவர்கள் சொல்வதைத்தான் ஏற்பான்! அப்படித்தான் ஊடகங்களும் அவனுக்கு வழிகாட்டும்!

‘தமிழா இன உணர்வு கொள்’- என்றுதான் இவனை நன்றாக அறிந்து வைத்துள்ள அரசியல் தலைமைகள் அறைகூவல் விடுகின்றனவே தவிர, ‘தமிழா இன அறிவு கொள்’ என்றா கூப்பிடுகிறார்கள்?

modi victory delhi hqஎனவே மத்திய அரசு தமிழனின் ‘உணர்வு’ களுக்கு மதிப்பளிக்க வேண்டும்! அவனுடைய ‘அறிவுக்கு’ வேலை கொடுத்து சிரமப் படுத்தக் கூடாது!

இங்கே மிகப் பல தமிழ் இளைஞர்கள் ஏதோ ஒரு ‘வில்லேஜ் விஞ்ஞானி’ யின் சீடன் என்பதையும், அதனாலேயே மிகப்பல தமிழ் இளைஞர்கள் “சுற்றுச் சூழல்” போராளி என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் மட்டுமில்லை, கல்பாக்கம் அணு உலை மற்றும் எண்ணூர், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி நிலையங்கள், மேட்டூர் மின் உற்பத்தி நிலையம் சகலத்தையும் மத்திய அரசு மூடிவிட வேண்டும். ‘கதிரியக்கம்’- ‘அனல் மின் நிலையத்தில் வெளிப்படும் புகையால் காற்று மாசு’- ‘மேட்டூரில் சாம்பல் பறப்பதால் தூசி மாசு’-… எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு அத்தனை மின் உற்பத்தி நிலையங்களையும் தமிழ் நாட்டில் மத்திய அரசு மூடிவிட வேண்டும்.

பதிலுக்கு ஆமணக்கு எண்ணை வித்துக்களைப் பயிரிடும் விவசாயத்தைத் தொழிலாக விரிவுபடுத்தி – இதில் சீமான் போன்றவர்களின் ஆலோசனையைப் பெறுவது நலம் – ஒவ்வொரு இளைஞனையும் ‘விளக்கெண்ணைத் தொழிலதிபராக’ மாற்ற வேண்டும். அவனவன் கல்வித் தகுதிக்கு ஏற்ப கையில் விளக்கெண்ணை புட்டியுடன் தெருத்தெருவாக அலையும் சேல்ஸ்மேன் வேலை தரலாம்!

எல்லா வீடுகளும் மின்சார விளக்கு இல்லாமல், ஆமணக்கு எண்ணையில் எரியும் விளக்குகளே பயன் படுத்தும் சட்டம் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் பல ‘விளக்கெண்ணை’ இளைஞர்கள் கோடீஸ்வரர்கள் ஆகும் நிலை வரும்!

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, திருப்பூர், கோவை, கரூர்… போன்ற பகுதிகளில் உள்ள அத்தனை பஞ்சாலைகள், டெக்ஸ்டைல் மில்கள், பனியன் உற்பத்தி கம்பெனிகள் எல்லாம் மூடப்பட வேண்டும். ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள்அணியாமல் தமிழனின் பாரம்பரிய உடையான கோவணம், மார்க் கச்சு போன்றவை அணிய சட்டமியற்ற வேண்டும்! சுற்றுச் சூழல் போராளிகளையும், தமிழ் உணர்’வாலர்’ களையும் ஒரே நேரத்தில் மகிழ்விக்கலாம்!

பஸ், லாரி, கார்கள், டூவீலர்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத மாட்டு வண்டிகள், திடமான எருதுகளால் இழுக்கப்படும் சரக்கு வண்டிகள் அறிமுகப் படுத்தப் பட வேண்டும்!

இப்படி எல்லாம் செய்து ‘சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்’- ‘வில்லேஜ் விஞ்ஞானிகள்’ ஆகியோரின் நன் மதிப்பைப் பெற பாஜக முயல வேண்டும்!

அதை விட்டுவிட்டு சும்மா தொழில் முன்னேற்றம், சரக்குப் போக்கு வரத்தை விரைவு படுத்த 8 வழிச் சாலை, தடையில்லா மின்சார உற்பத்திக்கு ஏற்ற நவீன மின் உற்பத்தி நிலையங்கள், கோதாவரி – காவிரி இணைப்பு, அதிவேக புல்லட் ரயில், புதிய அணைக்கட்டுகள்- என்றெல்லாம் பினாத்திக் கொண்டு இருந்தால் இன்னும் 7 ஜென்மம் ஆனாலும் BJP இங்கே தலை எடுக்க முடியாது!

தமிழ் உணர்வாளர்களின் ‘உணர்வுகளுக்கு’ மதிப்புக் கொடுங்கள் மோடிஜி – இல்லை என்றால் மறுபடி MODI GO BACK என்று கறுப்பு பலூன் ஊதுவோம்!

கட்டுரை – முரளி சீதாராமன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe