தந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்! ‘ஏழுமலையான்’ அருளிய முதல்வர் பதவி!

இந்து மதத்தில் பாவிகள் திருந்த சில வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும்! பாவிகள் எப்போதும் மன்னிக்கப் படுவதில்லை. மாறாக இறுதியில் தண்டிக்கப் படுகிறார்கள்! 

தந்தை மதம் மாற்றினார் மகன் மதம் மாறினார்- ஆந்திர சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் அலை வீசியதால் பிரதமர் கனவில் இருந்த சந்திரபாபு நாயுடு படு தோல்வி அடைந்து முதல்வர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இனி நாயுடு இந்த தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகும்.

இந்த பத்து வருடங்களில் ஆந்திர அரசியல் களம் நிச்சயமாக மாறி இருக்கும். அதனால் இனி சந்திரபாபு நாயுடுவின் எதிர் காலம் என்பது கிட்டத்தட்டமுடிந்தது போல்தான்! கடைசியில் ஜெகன் மோகன் ரெட்டி, தான் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே கூற வேண்டும். ஆனால் இதை அடைவதற்கு அவர் செய்த முயற்சிகள் நடத்திய போராட்டங்கள் மேற்கொண்ட நடைப் பயணங்கள் எத்தனை தெரியுமா?

இதற்காகவே அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டியை நிச்சயமாக பாராட்டியே தீர வேண்டும். தந்தையின் பாவம் பிள்ளையை சேரும் என்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தான் முக்கியமான உதாரணமாக இருக்க முடியும்.

தன் தந்தை செய்த பாவங்கள் எல்லாம் தீரவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி உங்களது பூர்வீக மதமான இந்துவாக மாறுங்கள் என்று அவருக்கு வைக்கப்பட்ட ஆலோசனையை தலைவணங்கி ஏற்றுக் கொண்டு விசாகப்பட்டினம் ஸ்ரீசாரதா பீட அதிபதி ஸ்ரீஸ்வரூபானந்தேந்த்ர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் இந்துவாக தன்னை முழுதாக நிலை நிறுத்திக் கொண்டதுதான்!

கடந்த 2014 தேர்தலில் வெற்றி பெற இயலாத நிலையில், அதன் பின்னர் தனது திட்டங்களை மாற்றிக் கொண்டார் ஜெகன். அதற்கு அவர் நாடியது விசாகப் பட்டினம் சாரதா பீடத்தை! அடிக்கடி செல்லத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த ஸ்ரீஸ்வரூபானந்த சரஸ்வதியின் தயவை நாடினார் ஜெகன். மடத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மடத்தின் அழைப்பிதழ்களில் ஜெகன் பெயரும் அடிக்கடி இடம்பெற்றது.

2015ல் முதன் முதலில் ஜெகன் ஸ்ரீஸ்வரூபானந்த சரஸ்வதியைத் தொடர்பு கொண்டு, தாம் மடத்துக்கு வர விரும்புவதாகச் சொன்ன போது, ஜெகன் முதலில் சிம்மாசலம் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு, பின்னர் மடத்துக்கு வரட்டும் என்றார். அதன்படி, சிம்மாசலம் கோயிலில் வணங்கி, அங்குள்ள சாரதா பீடத்துக்குச் சென்று தரிசித்து, பின்னர் விசாகப் பட்டினம் பீடத்துக்கு வந்தார் ஜெகன். அப்போது, பீடத்தின் வருடாந்திர நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. அன்று ஜெகன் கையில் ரட்சைக் கயிறு ஒன்றைக் கட்டியுள்ளார் சுவாமிகள். தொடர்ந்து, பீடத்தின் யாக சாலை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார். பின்னாளில் ஜெகனுக்காக எதிரிகளை வெல்லும் சண்டி ஹோமமும் நடந்ததாக கூறுகிறார்கள்.

தொடர்ந்து, அவர் தேர்ந்தெடுத்தது காஞ்சி மடத்தை! ஆந்திரப் பிரதேசத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பெருவாரியாக பக்தர்கள் உள்ளனர். காஞ்சி மடத்தின் சேவைப் பணிகள், ஆந்திரம், ஒடிஸா, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கில் பிரபலமானவை. எனவே காஞ்சி சுவாமிகளையும் வந்து சந்தித்து, தந்தையின் மூலம் தன்னை வந்தடைந்து மக்கள் மத்தியில் ஆழப் பதிந்துவிட்ட கிறிஸ்துவ அடையாளத்தை நீக்குவதற்கு முயற்சி செய்தார்.

தன் வெற்றிக்கு தடையாக இருப்பது தனது தந்தையின் மூலம் தனக்கு வந்து சேர்ந்த கிறிஸ்துவ அடையாளம் தான் என்று உணர்ந்து கொண்டார் ஜெகன். தனது குடும்பத்தில் பெரும்பாலும் அனைவரும் ஹிந்துக்களாகவே அதற்குரிய சடங்குகளுடன் இருக்க, தாமும் அத்தகைய அடையாளத்தை வெளிக்காட்ட அவர் நாடியது விசாகப்பட்டினம் சாரதா பீடத்தையே என்கிறார்கள்!

அடுத்து அவர் மேற்கொண்ட நடைபயணங்களை எல்லாம் திருப்பதியை மையமாக வைத்தே மேற்கொண்டார்.

ஆச்சரியம் என்னவென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே ஜெகன் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதைத் தடுத்தது மோடி அலை. ஜெகனிடம் இருந்து 2014 தேர்தலில் காப்பாற்றி சந்திரபாபு நாயுடுவை முதல்வர் பதவியில் அமர வைத்து கரை சேர்த்தவர் மோடி. ஆனால் அந்த மோடியை கேவலப்படுத்திய சந்திரபாபு நாயுடு இன்று ஜெகனிடம் படுதோல்வி அடைந்துள்ளதை பார்க்கும் பொழுது ஜெகனின் கர்மவினை விலகி விட்டது என்றே தோன்றுகிறது.

2009 செப்டம்பரில் ஆந்திர முதல்வராக இருந்த சாலமன் ராஜசேகர ரெட்டி திருப்பதி மலைகளின் ஊடே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன் பிறகு ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் பதவியை தனக்கு அளியுங்கள் என்று கேட்டார் ஜெகன். ஆனால், உனக்கெல்லாம் முதல்வர் ஆசையா? என்று ஜெகனை அவமானப்படுத்தினார் சோனியா.

இதை ராஜசேகர ரெட்டியின் குடும்பம் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் மக்களுக்கு ராஜசேகர ரெட்டியை மட்டும்தான் தெரியும். ஆனால் சோனியாவுக்கு மட்டுமே ராஜசேகர ரெட்டியின் அடையாளமான சாமுவேல் ரெட்டியின் முழு ஜாதகமும் தெரியும். சோனியாவின் மூலமாக சாமுவேல் ரெட்டி நடத்திய மதம் மாற்றங்கள் தான் எத்தனை?

ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் கூட்டம் கூட்டமாக மதமாற்றம் நடைபெற்றது. அதற்கு துணையாக அரசு உதவியோடு சர்ச்கள் கட்ட நிதி வழங்கப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 2006 ஆகஸ்ட் 22 ஆம் தேதி அரசாணை போட்டு புதிதாக சர்ச் கட்டிக்கொள்ள 1.5 லட்சம் ரூபாயும் பழைய சர்ச்களை புதுப்பித்து கொள்ள 80 ஆயிரம் ரூபாயும் வழங்கி தன்னுடைய மதவெறியை வெளிப்படுத்தியவர் சாமுவேல் ரெட்டி.

இதனால் உருவாக்கப்பட்ட சர்ச்க்கள் மூலமாக கிராமங்களில் உள்ள அப்பாவி மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனிதத் தலங்களான பத்ராசலம், சிம்மாசலம், ஸ்ரீசைலம், அஹோபிலம், மங்களகிரி, காளஹஸ்தி உள்ளிட்ட பல இடங்களில் புதியதாக அரசு உதவியுடன் சர்ச்கள் கட்டப்பட்டு மதபோதகர்கள் மூலமாக மதமாற்றப் பிரசாரமும் நடைபெற்றது.

இப்படி இந்து புனிதத் தலங்கள் இருக்கும் இடங்களில் தீவிர கிறிஸ்தவ பிரசாரம் மேற் கொள்ளப்பட்டதை எதிர்க்க யாரும் முன் வரவில்லை. எப்படி வருவார்கள்? ஆந்திராவில் சாமுவேல் ரெட்டி என்கிற ராஜசேகர ரெட்டியின் ஆட்சி தில்லியில் அண்டோனியா அல்பினா மையினோ என்கிற சோனியாவின் ஆட்சி.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக அனைத்து கோயில் இடங்களையும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வழங்கிய சாமுவேல் ரெட்டி கடைசியில் திருமலை திருப்பதியிலும் கிறிஸ்தவ பிரசாரங்கள் நடைபெற அனுமதி அளித்தார். அதோடு ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் (27.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றார்.

மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக்கொண்டு அவற்றை தலைசிறந்த சுற்றுலா தலமாக மாற்றப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார். திருமலையில் கமர்சியல் காம்ப்ளெக்ஸ், விளையாட்டு அரங்கம், தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்படும்; மலை மேல் போக வர கேபிள் கார் வசதி செய்யப்படும் என்றும் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இதற்குப் பிறகு தான் இந்துக்களுக்கு கோபம் வரத் தொடங்கியது.  போராட்டங்களும் தொடங்கின. இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஹைதராபாத் நீதிமன்றமும் ஏழு மலைகளும் பகவான் வேங்கடாசலபதிக்கே சொந்தம் என்றும் அரசாணை செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.

அதற்குப் பின்னர் தான் சாமுவேல் ரெட்டி அடங்கிப் போனார். ஆனாலும், திருமலையிலும் திருப்பதியிலும் மிஷனரிகள் மதமாற்றச் செயல்களை நிறுத்துவதாக இல்லை. ஆனால் இதற்குள் இந்தியா முழுவதும் திருப்பதியை கபளீகரம் செய்ய நினைத்த சாமுவேல் ரெட்டியின் செயலுக்கு எதிர்ப்புகள் பரவ இந்து இயக்கங்கள் ஒன்று சேரத் தொடங்கின

உடுப்பி பெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், மற்ற இந்து இயக்கங்களுடன் சேர்ந்து திருப்பதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தி ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜி.பிக்‌ஷாபதி தலைமையில் திருமலையில் நடைபெறும் மதமாற்ற பிரச்சாரங்கள் பற்றிய உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்தார்.

அந்தக் குழு 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் பொது விசாரணை செய்து, கிறிஸ்துவ மிஷனரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்று உறுதி செய்து விசாரணையின் மூலம் அறிந்த அனைத்து உண்மைகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிக்கையாக வெளியிட்டு அதை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைத்தது.

இந்தக் குழுவின் அறிக்கை வெளியான பிறகே திருமலையில் மதமாற்ற பிரசாரங்கள் நின்றன. மேலும், திருமலை கோயிலுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ய ஜெ.ஆர்.ஜி வெல்த் மெனேஜ்மெண்ட் என்கிற கொச்சியைச் சேர்ந்த கிறிஸ்துவ நிறுவனத்திற்கே சாமுவேல் ரெட்டி ஆட்சியின் பொழுது ஆர்டர்கள் அளிக்கப்பட்டன.

சாமுவேல் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் இந்து கோயில்களின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மிஷனரிகளுக்கு அளிக்கப்பட்டது என்றால் அவர் எவ்வளவு தீவிர கிறிஸ்துவ மதமாற்ற வெறியராக இருந்திருப்பார் என்று மக்கள் பேசினார்கள்.  கடைசியில் திருமலையையும் கபளீகரம் செய்ய முயன்ற போதுதான் சாமுவேல் ஹெலிகாப்டர் விபத்தில் அதே திருப்பதி மலைகளின் ஊடே தன் உயிரை இழந்தார்.

சாமுவேல் ரெட்டியின் அகால மரணம் ஆந்திர அரசியலை உலுக்கியது. திருமலை வேங்கடாசலபதியின் கோபமே சாமுவேல் ரெட்டியின் மரணம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அதையே ஊடகங்களும் எழுதின. இந்த நேரத்தில் முதல்வர் பதவியை கேட்டு ஜெகன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் மன்றாட, அவரோ ரோசய்யாவை முதல்வராகக் கொண்டு வந்து ஜெகனை ஆந்திர அரசியலில் இருந்து ஓரம் கட்டினார்.

அது மட்டுமல்ல ஜெகனை 16 மாதம் சிறையிலும் அடைத்து கொடுமைப் படுத்தினார் சோனியா. இதனால்தான் ஒரு சாதாரண மனிதனான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மக்களின்  நம்பிக்கை நாயகனாக இப்போது எழுந்து நிற்கிறார். காரணம், அனுதாபம், சினிமாத்தனம் எல்லாம் கலந்ததுதான்!

சோனியா நினைத்திருந்தால் ஜெகனை சாமுவேல் ரெட்டியின் மரணத்திற்கு பிறகு ஆந்திர முதல்வர் ஆக்கியிருக்க முடியும். ஆனால் ராகுலின் பேச்சைக் கேட்டு எதிர்கால நடப்பியல் என்ற தீர்க்க தரிசனம் இன்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல் பட்டார். அதனால் தான் இன்று காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திராவில் இன்று காங்கிரஸ் முகவரி இழந்து நிற்கிறது.

சோனியாவும் சாமுவேல் ரெட்டியும் சேர்ந்து ஆந்திராவை, குறிப்பாக திருப்பதியைக் கொள்ளை அடித்தார்கள். இதில் பங்குகள் சரியாக சோனியாவுக்கு செல்லவில்லை என்று காங்கிரஸிலேயே சிலர் பேசிக் கொண்டார்கள். அதனால்தான் ஜெகன் மோகனுக்கு எதிர்காலம் இல்லாமல் ஆக்க சோனியா நினைத்தார் என்றும் பேச்சு எழுந்தது.

ஆனால் கடவுள் இருக்கிறார் அல்லவா!? தெய்வம் உடனடியாகக் கொல்லாமல், தவறு இழைத்தவர்களை திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்து, அதுவும் இல்லாமல் போனால்தான் நின்று கொல்லும் என்பது பழமொழி. நம் நம்பிக்கை!

அதோடு, கர்மவினையும் இருக்கிறது அல்லவா. அதன்படி தன்னுடைய தந்தை செய்த பாவங்களைப் போக்க இந்து மதத்தை தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கினார் ஜெகன் மோகன். அதற்கு, எந்த திருப்பதியை தன் தந்தை சீர்குலைத்தாரோ, அந்த திருப்பதி பாலாஜியிடமே சரண் அடைவது என்று செயல்பட்டார். தனது நடைப்பயணங்கள் போராட்டங்களை திருப்பதியை மையமாக வைத்தே மேற்கொண்டார். தனது மக்களை சந்திக்கும் யாத்திரையை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் தொடங்கி, ஆசி பெற்றார். தொடர்ந்து ஆந்திர ஹிந்துக்கள் புனிதத் தலங்களாகப் போற்றும் இடங்களுக்கு தொடர்பு படுத்தி தனது யாத்திரையை அமைத்தார்.

அதற்கு பிரஜா சங்கல்ப யாத்திரை என்று பெயர் வைத்தார். தேர்தலுக்கு முன்னர் 14 மாதங்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து வந்தவர், இறுதியில், திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே மலை ஏறிச் சென்று, அங்கே தனது யாத்திரையை நிறைவு செய்தார்.

இதன் பிரதி பலனாக 9 வருடங்களாக எந்த முதல்வர் பதவியை முன் வைத்து போராடினாரோ அது அவருக்கு திருப்பதி வேங்கடவனை அடி பணிந்ததும் அவன் அருளால் கிடைத்து விட்டது. பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவும் கட்டுக்கடங்காத கூட்டமும் இந்த பிரஜா சங்கல்ப யாத்திரையில் கிடைத்தது.

அடுத்தது, திருப்பதியில் சந்திரபாபு நாயுடு செய்த முறைகேடுகள். திருமலை கோயிலில் சமையலறை பக்கம் திடீரென மறைத்து மேற்கொள்ளப் பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள். அது, புதையலை எடுப்பதற்காகத்தான் என்று பரவிய செய்தி. தொடர்ந்து திருப்பதி நிர்வாக நடைமுறைகளில் நாயுடுவின் தலையீடு! அதற்காக கிளர்ந்தெழுந்து, திருப்பதியில் நகைகள் காணாமல் போனது குறித்தும், நகைகள் ஒரிஜினலுக்கு பதில் வேறு மாற்றப்பட்டது குறித்தும் திருப்பதி ஆலய அர்ச்சகர் ரமண தீட்சிதலு கூறிய புகார் என திருப்பதியை மையமாக வைத்தே சந்திரபாபு நாயுடுவுக்கும் மக்கள் மத்தியில் பெயர் கெட்டது. அதை சாதகமாக்கிக் கொண்ட ஜெகன், திருப்பதியை மையமாக வைத்தே தனது பிரசாரத்தை அமைத்துக் கொண்டார் என்கிறார்கள் ஆந்திர மக்கள்.

இப்போது ஜெகன் ஆந்திர மக்களின் பிரதிநிதி. தாம் தினமும் பைபிள் படிப்பதாகவும் கூறிக் கொள்கிறார். சிலுவை அணிந்திருக்கிறார், அதை சட்டைக்குள் மறைத்திருக்கிறார்; இப்போதும் அவர் கிறிஸ்துவர்தான்! பெருவாரியான மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்றால், ஹிந்து மத நம்பிக்கைகளை அனுசரித்து நடந்தாக வேண்டும். கோயில்களுக்குச் சென்று மக்களிடம் அந்த நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆலோசகர்கள் கூறியதால் தான் அவர் திருப்பதிக்கு வந்தார், சிம்மாசலம் சென்றார்; மற்றபடி அவர் பின்னே ஒரு கிறிஸ்துவ லாபி மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது; அவருக்கு நிதி உதவி செய்தது எல்லாமே கிறிஸ்துவ மிஷனரிகள்தான்! தேர்தலுக்காக ஜெகன் நடித்தார். மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்றால் ஹிந்துக்களின் வாக்கு தேவை என்பதற்காக அவர் மேற்கொண்ட நாடகங்கள் இவை. இனிதான் அவரது சுயரூபம் வெளியில் தெரியும்! நம்பகத் தன்மை அற்ற மனிதர் அவர் என்றெல்லாம் ஆந்திர அரசியலில் சிலர் விமர்சித்தாலும், ஆந்திர மக்களின் இந்து மத நம்பிக்கைகளை சீர்குலைக்கக் கூடாது; குறிப்பாக தனது தந்தையைப் போல் திருப்பதியில் கைவைக்கக் கூடாது என்ற தெளிவு அவருக்கு இப்போது வந்திருக்கும் என்றே அவர் மீது விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.

அரசியல் ரீதியில் பார்த்தால்… ராகுலின் பேச்சைக் கேட்டு ஜெகனுக்கு ஆந்திர முதல்வர் பதவியை சோனியா அளிக்க மறுத்தார். அந்த ராகுலுக்கு கடைசி வரை எத்தனை கோயில்கள் ஏறி இறங்கினாலும் பிரதமர் பதவி கிடைக்கப் போவதில்லை.

ஏனெனில் இந்து மதத்தில் பாவிகள் திருந்த சில வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும்! பாவிகள் எப்போதும் மன்னிக்கப் படுவதில்லை. மாறாக இறுதியில் தண்டிக்கப் படுகிறார்கள்!

~ பாமரன்..!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...