க்ரேஸியின் வெற்றிலை வ்யாஸம்..!

நான் ஒரு வெற்றிலை பிரியன்… அப்படிகூட சொல்லக்கூடாது… வெற்றிலை வெறியன். கும்பகோணம் வெத்தலை… (இனிமேல் வெத்தலை என்றே சொல்கின்றேன்) அந்த கும்பகோணம் வெத்தலை இருக்கே.. வாவ்… அது போல கும்பகோணம் சீவல், பன்னீர் புகையிலை, சுத்தமான சுண்ணாம்பு இந்த கலவை இருக்கே… ஆஹா அலாதி!

இந்த சீவல் பற்றி முதலில் சொல்ல வேண்டும். அது ஆக்சுவலா எங்கள் தஞ்சை மாவட்டத்தில் இருந்தது தான். பனைமரம் குஷ்பூ எனில், ஜெனீலியா தான் பாக்கு மரம். வீட்டுக்கு இரண்டு இருக்கும். ரொம்ப ஒல்லியாக! அதில் ஏறி காய் பறிக்க முடியாது. அதுவாக பூத்து காய்த்து பழுத்து உதிரும். அதை எடுத்து ..கிட்டத்தட்ட தேங்காய் போல் உரித்தால் சீவல் கொட்டை கிடைக்கும். அதை கைச்சீவல் வீட்டில் அதாவது பெருமாலானவர்கள் பாய்மார்கள் தான் அதை செய்வார்கள். அங்கே கொடுத்து கை சீவல் ஆக்கிக்கொள்ள வேண்டும். 1980களில் மிஷின் வந்ததால் பாய்மார்கள் தங்கள் தொழிலை தொலைத்து விட்டனர். மெஷின் சீவல் தான். போகட்டும்!

இந்த சீவலை ஒரு மண் சட்டியில் விறகு அடுப்பு மூட்டி அதிலே கொஞ்சம் எருமை நெய் போட்டு வறுத்து வாயிலே போட்டா சும்மா ஓமப்பொடி மாதிரி ஆகும் அளவு எடுத்து தனியே வைக்க வேண்டும். முடிஞ்சுதா!

அடுத்து நல்ல செவ்வெளனீர் அதாவது சாதாரண இளநீர் அல்ல! சிவப்பு கலர் காய்க்குமே அந்த செவ்வெளனீர் 5 வாங்கிக்கனும்! அப்படியே வந்து சுண்ணாம்பு கிளிஞ்சள் வாங்க வேண்டும். அதை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? மொந்தை மொந்தையா பொறுக்கி எடுக்கனும். கடைக்காரன் விட மாட்டான். நீங்க சண்டை பிடிச்சு “எனக்கு சொத்தை எல்லாம் வேண்டாம், இதுக்கு என்ன காசோ அதை தரேன்” என சொல்லி அழகிய மொந்தையான கிளிஞ்சள் வாங்கனும். பக்கத்திலேயே பச்சை மஞ்சள் அதாவது கிழங்கு மஞ்சள் இரண்டு கொத்து வாங்கனும்.

வீட்டுக்கு வரும் முன்னர் மெதுவாக ராஜேந்திரன் வெற்றிலை சீவல் கடைக்கு போகனும்! அங்கே நாம் போனதும் “ஒரு கவுலியா அண்ணே” என அவர் கேட்ப்பார். நாம் அதுக்கு ஒத்துக்க கூடாது. ஏனனில் கும்பகோணம் வெத்தலை 12 அவர்ஸ் தான் உயிரோடு இருக்கும். ஏன்னா அதுங்க குழந்தைகள் போல. வாடிவிடும். கொஞ்சம் கரும் பச்சையில் இருக்கும். ஆனா பாபநாசம் வெத்தலை, திருவாரூர் வெத்தலை எல்லாம் 24 வயசு பெண்கள் பேல “என்னாட இப்ப” என்பது போல திமிர் காட்டும். இரண்டு நாள் ஆனாலும் வாடாது. அதனால் தான் சொல்கிறேன்.. கும்பகோணம் வெத்தலை தான் வாங்கனும். அரை கவுலி தான் வாங்கனும். ஒரு கவுலி என்பது 100 வெத்தலை என்பது உபரி செய்தி!

”அப்படியே ஒரு ரங்கவிலாஸ் பத்து ரூவா புகையிலை கொடுங்க” என கேட்டு வாங்கிப்பது முக்கிய நிகழ்வாக இருக்கனும்.

அதுக்கு அடுத்தது தான் முக்கிய விஷயம்!

பன்னீர் புகையிலை!

வேதாரண்யத்திலே இருந்து புகையிலை கொடிக்காலில் இருந்து நேரிடை கொள்முதல் செஞ்சு வந்த புகையிலை செல்லங்களை காயவைத்து அதை சின்ன சின்ன துண்டுகளாக்கி பக்குவப்படுத்தி அதை நன்கு கவனிக்கவும் ரோஜா மலர்களை ஊறவைத்த பன்னீர் நீரில் ஊறவைத்து, எடுத்து காயவைத்து மீண்டும் சிறு துண்டுகளாக்கி பன்னீர் மற்றும் பச்சை கற்கண்டு கலவை மற்றும் கத்த காம்பு போற மிக்சிங் செய்து சொத சொதன்னு ஒரு சிட்டிகை 5 ரூபாய் என பாக்கெட்ல போட்டு அழகாய் கொடுக்கும் அந்த ராஜேந்திரன் கடைக்கு ஈடு எதுவும் இல்லை.

அதை வாங்கிக்கனும். வீட்டில் வந்து வாங்கிய பத்து ரூபாய் ரங்கவிலாஸ் பிரிச்சு ஒரு தினமலர் பேப்பரில் போட்டு கட்டை காம்புகளை அகற்றி, அதிலே ராஜேந்திரன் கடை பன்னீர் புகையிலையை போட்டு மிக்ஸ் செய்து கலக்கி கொஞ்சம் ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது வாங்கி வந்த செவ்வெளனீர் எல்லாம் வெட்டி ஒரு மண் சட்டியில் ஊற்றி அதில் வாங்கி வந்த சுண்ணாம்பு கிளிஞ்சள்கள் போடவும். அதிலே நாம் வாங்கி வந்த மஞ்சள் கிழங்கை அரைத்து போட வேண்டும். பொதுவாக சுண்ணாம்பு கிளிஞ்சல் வென்னீர் ஊற்றினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் சுண்ணாம்பு ஆகிடும். ஆனா நாம தான் ரசணைக்காரன் ஆச்சுதே.

அடுத்த நாள் காலை சுண்ணாம்பு ரெடி! சிவந்த நிறத்தில் இருக்காது! பாஜக வின் காவி நிறத்தில் இருக்கும். காவியை வாயில் பச்சையோடு மென்று சிவப்பாய் டெலிவரி செய்வது தான் நம் நோக்கமே! விடுங்கள். எங்கே விட்டோம்!

அந்த காவி நிற சுண்ணாப்புவை அதாவது இளநீரில் வெந்த மஞ்சள் கலந்த சுண்ணாம்புவை ஒரு வெள்ளி கரண்டாவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்!

அதே போல நாம் வாங்கி வந்த புகையிலை மிக்ஸிங் ஒரு வெள்ளி டப்பாவில்!

சீவல் மாத்திரம் பாவம் செய்தது.. அதை கோல்டு வின்னர் பிலாஸ்டிக் பையில் போட்டு வச்சுகிட்டா போதுமானது!

கும்பகோணம் அத்தாச்சியை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக ”நாட்டு ஃப்ரிட்ஜ்” அதாவது ஒரு வெள்ளை வேட்டி துணியில் தண்ணீர் நனைத்து சுற்றி வைக்க வேண்டும்.

ஆச்சுதா!

இதையெல்லாம் அந்த காலத்தில் வெற்றிலைப்பெட்டியில் அழகாக வைத்துக்கொள்வார்கள்! ஆனா இப்போது? டெக்னாலஜி இம்ப்ரூவ்டு டூ மச் என்பதால் இதற்கெல்லாம் உசிதம் சின்ன பேக். அதாவது அடிக்கடி “கப்பலுக்கு” போறவங்க (அதாவது கப்பலுக்கு போறதுன்னா அந்த காலத்திலே கப்பலுக்கு, இப்போ ஃப்லைட்) பாஸ்போர்ட் வச்சிக்க ஒரு லெதர் பேக் வச்சிப்பாங்களே அதுவே உத்தமம். அந்த பேக்கில் ஒரு இடத்தில் வெற்றிலை துணி சுத்தி அமந்திருக்கும். அடுத்த அறையில் வெள்ளிசுண்ணாம்பு கரண்டா, மற்றும் பன்னீர் புகையிலை, அடுத்த அறையில் வறுத்த நெய் சீவல்… போதுமடா சாமி இந்த உலகில்….

நல்ல கச்சேரிக்கு செல்ல வேண்டும்! நாசூக்காய் அந்த வெத்தலை பேக்கை எடுத்து மடி மீது வைக்க வேண்டும். மெதுவாக பிரித்து ஒரு கும்பகோணம் வெத்தலை எடுத்து கதர் சட்டை போட்ட நெஞ்சில் துடைக்க வேண்டும். தலையை பின்பக்கமாக இழுத்து நடு முதுகு வரை இழுப்பது போல நரம்பை கிள்ளி அந்த வெள்ளி கரண்டாவில் இருந்து சுண்ணாம்பு என்கிற வெண்ணெய் எடுத்து முழுவதும் தடவ வேண்டும்! உனக்கு படையல் வைக்கிறேன் பார் என்பது போல வெற்றிலையின் நடுவில் நெய் சீவல் மற்றும் பன்னீர் புகையிலையை கொத்து கொத்தாய் அலங்கரித்து பின்பு, வெற்றிலையின் காலை மடக்கித் தலைக்குக் கொண்டு வந்து இரண்டு கைகளையும் மடக்கி வாயில் போட்டு மெதுவாக மெல்ல வேண்டும். முதலில் ஒரு ஜிலீர் வரும். முதல் எச்சிலை சுத்தமான இடம் பார்த்து புளிச்ச வேண்டும்! (துப்புவதோ எச்சில், அதில் என்ன சுத்தமான இடம்? ஏன்னா நாங்க ரசனைக்காரன்கள்)

நேரம் கடக்க கடக்க கற்பனைகள் வரும். எழுத்துகள் கைகூடி வரும்.

இப்படிப்பட்ட ஒரு வெற்றிலை ரசிகர் கிரேசி மோஹன் மறைந்து விட்டார்!

  • ?

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...