spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryசீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்

சீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்

- Advertisement -

new education policy

மூன்றாவது பீரியடு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு. அறிவியல் ஆசிரியை சீதா டீச்சர் எப்போதுதான் வருவாரோ..? அவரைப் பார்க்க வேண்டும்போல இருந்தது முத்துக்குமாருக்கு. முத்துக்குமார் சராசரி மாணவன் தான். ஆனாலும் அறிவியலில் ஆர்வமுள்ளவன். அதனால்தானோ என்னவோ சீதா டீச்சருக்கு முத்துக்குமாரின் மீது தனிப்பட்ட அன்பு. முத்துக்குமார் சென்ற காலாண்டுத் தேர்வில் மற்ற பாடங்களில் சராசரியாகத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அறிவியலில் 78 மதிப்பெண் பெற்றிருந்தான் என்றால் அதற்கு சீதா டீச்சர்தான் காரணம்.

சீதா டீச்சர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. வாரத்துக்கு இரண்டுநாள் தற்காலிக ஆசிரியர்களாக சமூக செயல்பாட்டாளர்கள் என்று சிலர் எங்கள் பள்ளிக்கு வந்து வகுப்பெடுப்பார்கள். எங்கள் வகுப்புக்கு தற்காலிக ஆசிரியராக ட்ராட்ஸ்கி மாஸ்டர் வந்துகொண்டிருக்கிறார். அவரை சார் என்று கூப்பிடக்கூடாதாம். தோழர் என்றுதான் கூப்பிட வேண்டுமாம். கையில் எப்போதும் ஒரு தகர உண்டியலுடன் தான் பள்ளிகூடத்துக்கே வருவார். பார்ப்பதற்கு வாத்தியார் போலவே இல்லை. அழுக்கு பேண்டும் , கசங்கிய ஜிப்பாவும், ஜோல்னா பையும், சிவப்பு அட்டை போட்ட 2 புத்தகமும் வைத்துக் கொண்டு அந்தக் கால ஆங்கிலப்படங்களில் வரும் ஹிப்பிக்கள் போலவே இருந்தார்.

முத்துக்குமாருக்கு அவரை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒவ்வொருவருடைய அப்பாவும் என்ன வேலை செய்கிறார்கள் என்று கேட்டு உண்டியலில் தினமும் காசு போடுபவர்கள், அவருடைய துண்டு பிரசுரங்களைப் படிப்பவர்களை மட்டுமே முதல் பெஞ்சில் அமரச் செய்தார். காலனி தெருவைச்சேர்ந்த சில மாணவர்களை எதுவுமே கேட்காமல் கடைசி பெஞ்சில் அமரவைத்ததை அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

பள்ளிக்கு வந்த முதல் நாளே வட்டி பிஸினஸை ஆரம்பித்துவிட்டார். உண்மையில் அந்த ஊரில் நிறைய பேருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தவர் அதை வசூலிக்க வசதியாக இருக்கும் என்றுதான் அந்தப் பள்ளிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். பலருக்கும் பண்ம் கொடுத்து அதற்கான வட்டியை மாணவர்களை விட்டுத்தான் வசூலித்து வரச் சொல்வார். அவர் ஆசிரியர்-ஊழியர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். எனவே எப்போது பார்த்தாலும் இயக்கப்பணி என்று சொல்லி வட்டிக்குப் பணம் கொடுக்கப் புறப்பட்டுவிடுவார்.

மாணவர்களுக்கு பாடம் எடுக்கவேண்டாமா என்று செல்லம்மா டீச்சர் கேட்டபோது, இந்த களுதைக படிச்சு கிளிச்சு என்ன சாதிக்கப்போவுது? அப்படி படிக்கணும்னா சாயந்திரம் நம்ம இயக்க பில்டிங்ல டியூசன் நடத்துவோம். அங்க வரட்டும். நம்ம இயக்க பசங்க பாடம் சொல்லித்தருவாங்க. மாசம் உண்டியல்ல 1000 ரூவா போடணும். எல்லாக்களுதைகளோட அப்பன்களும் விவசாயம், கடை-கண்ணி, கவர்மண்ட் வேலைன்னு வசதியாத்தான் இருக்கான். ஏளைகளுக்கு பணம் கிடைக்கணும்னா பள்ளிக்கூடத்தில பாடம் எடுக்காம டியூசன் நடத்துவதே அதற்கான ஒரே வழி என்று சொன்னார்.

தவிர நன்றாகப் படிக்கக்கூடிய பாலமுருகனை காரணமே இல்லாமல் திட்டி வெளியே அனுப்புவதையும், அவரது வகுப்பு முடியும் வரை வெளியே நிற்கவைப்பதையும் அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒன்றுமே கேட்கவில்லை… மாணவர்களிடம் விளையாட்டுப் பீரியடில் வட்டிக்கு விடுவது மட்டும் பூர்ஷ்வாத்தனம் இல்லையான்னு எங்கய்யா கேக்காருடா என்று சொன்னான். அதற்குத்தான் மூங்கில் கம்பால் அடித்து அவனை வெளியே நிற்க வைத்தார். அப்பாட்ட சொல்லி எதாச்சும் பிரச்சனை பள்ளிக்கூடத்துக்கு வந்துச்சு பத்தாப்பு பரிச்சை எளுதமாட்ட நீயி என்று மிரட்ட வேறு செய்தார்.

இன்னொருநாள், சாமி கும்பிடுவது பற்றி நக்கலடித்தார்…  சாமி கண்ணக்குத்தும் என்று அகமது சொன்னபோது உன்ன எவண்டா சொன்னது? நீ மசூதிக்கு 5 வேள போ என்றார். அப்ப நானு என்று ஜோசப் கேட்டபோது ”ஃபாதருக்கு தோத்திரம் சொல்லு. பாவமன்னிப்புக்கு அப்பப்ப வருவேன்னு சொல்லிரு”என்று சொல்லி கெக்கெக்கே என்று ஒரு மாதிரியாக இளித்தார். ”எங்க சாமிய மட்டும் ஏன் வையிதீய?” என்று கேசவன் கேட்டபோது ”நீ பெரியார் வாழ்கன்னு நூறு தடவை, மாவோ வாழ்கன்னு நூறு தடவை இம்போசிஷன் எழுது. அதுவரை பள்ளிக்கூடத்துக்கு வராதே” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

சீதா டீச்சர் வந்துட்டா எல்லாமே பழையபடி சரியாகிடும் என்ற நம்பிக்கைதான் முத்துக்குமாரை ஆசுவாசப்படுத்தியது.

ட்ராட்ஸ்கி தோழர் எடுக்கும் பாடங்கள் எதுவுமே புரிவதில்லை. அவர் பாடமே நடத்தமாட்டார். ரஷ்யா, சீனா பற்றித்தான் பேசுவார். அப்படித்தான் ஒருநாள் ரஷ்யாவில் வானில் இருந்து தங்கக்கட்டி கொட்டியது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ”அறிவியல் வகுப்பில் ஃபேண்டஸி கதை சொல்கிறீங்களே சார்?” என்று தனபால் வாத்தியார் கேட்டதற்காக அவரை தலைமுடியைப் பிடித்து சுவரில் முட்டி அடித்து ரத்தம் வந்துவிட்டது. தனபால் சார் மெடிக்கல் லீவ். அவருக்கு பதில் வேறொரு தோழர் வந்துள்ளார். இவர் அவரை லூசு என்று கூப்பிடுகிறார். அந்த புது தோழர் பேர் நிக்கோலய் நலங்கிள்ளியாம்.

சென்ற வாரத்தில் ஒருநாள் புரட்சி ஓங்குக என்று நாற்காலியில் ஏறி நின்று கத்தியவர் எங்களையும் பெஞ்சில் ஏறி நிற்கச் சொன்னார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வந்ததும் எல்லா ஏழைகளும் நேரா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு குடிபெயர்ந்து விடலாம் என்றெல்லாம் உணர்ச்சி பூர்வமாக விவரித்துக் கொண்டிருக்கும்போது தற்செயலாக உள்ளே வந்த பியூன் மாணிக்கவேல் (வேலு அண்ணன்) ”என்னங்க சார் இது நெசமா? அப்ப ராமதாஸ் கட்சி ஆட்சிக்கு வந்துருமா?” என்று கேட்டதுதான் அவர் செய்த தவறு. அதற்கு  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறேன் பேர்வழி என்று அவரை வகுப்பில் அத்தனை பேரின் ரிக்கார்டு நோட்டையும் தூக்கிக்கொண்டு கிரவுண்டை 10 தடவை சுற்றி வரச்செய்தார். வேலு அண்ணன் முட்டிவலி என்று ரெண்டு நாள் லீவு போட்டதற்கு கெட்டவார்த்தை சொல்லி “அவன் என்ன பெரிய கவர்னர் வேலையா பாக்குறான்?” என்று கத்தினார்.

இப்படி எல்லை மீறிக்கொண்டிருந்த இவரது அட்டூழியங்களை பிரின்சிபாலிடம் புகார் சொன்ன சீதா டீச்சரை வேறொரு தோழர் தீமிதி அழகேசன் (எம்பிக்கு வேண்டியவராம்)  ஒரு வாரம் லீவில் போகச் சொன்னார். “நீங்க யார் சார் சொல்றதுக்கு” என்று சீதா டீச்சர் கேட்டதும், அவர் மீது சத்துணவு முட்டை ரெண்டை வீட்டுக்குக் கொண்டு போனார் என்று புகார் சொன்னார் அந்த தீமிதி. சீதா டீச்சர் ஒரு வாரம் வரமாட்டார் என்று பிரின்சிபால் கையழுத்துடன் நோட்டிஸ் போர்டில் பேப்பரில் ப்ரிண்ட் எடுத்து ஒட்டினார்கள்.

இதைக் கேட்டுக் கடுப்பான அகமது அவரை பீமிதி அசிங்கேசன் என்று சொல்லிவிட்டான். அவனது தந்தை மறுநாள் வந்து அசரத்து உங்கள பாத்து பேசச்சொன்னாரு என்று சொல்ல, அவரிடம் அந்த தீமிதி எகிறிய விதம் ஏதோ அவர் அப்பன் வீட்டுச் சொத்தை கறிக்கடை கரீம்பாய் (அகமதுவின் அப்பா) ஆட்டையப் போட்டது போலத் தோன்றியது. ஒரு வாரம் உம்மவன் வெளியதான் நிப்பான். இல்லாட்டி டிசி வாங்கிக்க என்று கூவினார் தீமிதி.

இன்றோடு ஒரு வாரம் முடிந்தது. இன்றைக்காவது சீதா டீச்சர் வருவாரா என்று ஏக்கத்தோடு காத்திருந்த முத்துக்குமாருக்கு மீண்டும் ஏமாற்றம். தோழர் ட்ராட்ஸ்கிதான் இன்றும் வந்திருக்கிறார். வழக்கம்போல பாடத்துக்குச் சம்மந்தமில்லாமல் பினாத்திக்கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த பரமசிவத்திடம் கேட்டான் முத்துக்குமார்.

“ஏண்டா இன்னிக்கும் சீதா டீச்சர் வல்ல?”

“அவங்க வேலைய ரிசைன் பன்னிட்டு போய்ட்டாங்களாண்டா”

இனி எப்போதும் தனக்கு கடைசி பெஞ்சுதான் என்று நினைக்கும்போது அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இது எதுவுமே தெரியாமல் சீதா டீச்சர் வந்து தன்னை உள்ளே அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு வாசலில் நின்றுகொண்டிருக்கிறான் பாலமுருகன்.

#வரைவு முற்போக்கு கலவிக்கொள்கை#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe