அந்நியர் வைத்த பெயர்களில் ‘அந்நியோன்னியம்’!

நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்.... பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்…. பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

பிரயாகை மகா க்ஷேத்திரம் அலஹாபாத் ஆக மாறியது. பாக்கியநகரம் ஹைதராபாதாக, வாராணசி பனாரஸ் ஆக… இவ்வாறு பல பெயர்கள் மாற்றப்பட்டன.

பாரத தேசம் என்பதே இண்டியாவாக நிலைத்துவிட்டது. சுதந்திரம் வந்த உடனே அதுவரை வேற்று மதத்தவர் நம் நாட்டிற்கு அளித்த பெயரையே அன்றைய தலைவர்கள் நிரந்தரமாக்கி விட்டார்கள்.

வெவ்வேறு அரசுகளாக இருந்தாலும் அனைத்தும் சேர்ந்து ‘பரதவர்ஷம்’ என்ற பெயரோடு பல யுகங்களாக விளங்கி வருகிறது பாரத தேசம். ‘பாரத’ என்ற நாமம் வேத புராணங்களில் பல இடங்களில் காணப்படுகிறது.

நம் தேசத்தின் மீதும், கலாசாரத்தின் மீதும், தர்ம நூல்களின் மீதும் கௌரவமும் மதிப்பும் இல்லாத சுதந்திர பாரதத்தின் முதல் தலைவர் ‘பாரத’ என்ற பெயரை ஆமோதிக்கவில்லை. பிரிட்டிஷார் வைத்த இண்டியா என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அப்போது ‘பாரவேல்’ சாசனங்களின் ஆதாரமாக வரலாற்றுப் பிரமாணங்களோடு ‘இது பாரத தேசம்தான்!’ என்ற உண்மையை எடுத்துக் கூறியதால் ‘இண்டியா தட் ஈஸ் பாரத்’ என்று அரசியலமைப்பில் எழுதினார்கள். அதற்கு பதில் பாரத தேசம் என்று தெளிவாக எழுதி இருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்! ஒரு நாட்டிற்கு இரண்டு பெயர்கள் எதற்கு?

எது எப்படியாயினும் வேற்று நாட்டவர் மேல் அன்பு செலுத்தும் நம் நாட்டவரால் உண்மையான அசல் பெயர்கள் மறைந்து போயின. சில இடங்கள் மட்டும் மும்பை, சென்னை, பெங்களூரு… என்று முன்பிருந்த பெயர்களைத் திரும்பப் பெற்றன.

அலகாபாதை பிரயாக்ராஜ் என்றழைக்க வேண்டும் என்று முயற்சிகள் நடந்தன. பைதாபாதை அயோத்யா மாவட்டமாக மாற்ற வேண்டுமென்பது ஆதித்யநாதின் சங்கல்பம்.

ஆனால் செக்யூலர் வாதிகளும் சில கபட மேதாவிகளும், “பெயரை மாற்றுவதால் வேற்றுமையை பரப்புவதை தவிர வேறு என்ன பலன் இருக்கப் போகிறது? பெயர்களை மாற்றியதால் மட்டும் முன்னேற்றம் வந்து விடுமா?” என்று கேள்வி எழுப்பினார்கள். பின், பெயரை மாற்றுவதால் எந்த வித்தியாசமும் வராது என்கிறபோது மாற்றுவதால் வரும் நஷ்டம்தான் என்ன?

உண்மையில் பெயர் மீது ஒரு பாவனை, ஒரு அனுபூதி ஆதாரப்படுகிறது. அன்றைய வரலாற்றுப் பரிமள சுகந்தம் வீசுகிறது. பாரத தேசம் என்ற சொல் நம் பரம்பரையின் உயர்ந்த வரலாற்றினை நினைவுபடுத்துகிறது. சுபாவமான நம் தேசத்து நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் அனைத்தும் ஒரு ஆத்மார்த்தமான அநுபூதியைத் தூண்டி எழுப்புகிறது.

நமக்கென்று இயல்பாக ஒரு பெயர் இருக்கையில் வேற்று நாட்டவர் யாரோ வந்து வைத்த ஒலிக் குறிப்பான ஒரு பெயரின் தேவை என்ன?

சுதந்திரம் கிடைத்தபின் தெளிவாக நாட்டின் ஒவ்வொரு இடத்தின் பூர்வ பெயர்களையும் வழக்கத்திற்குக் கொண்டு வந்திருந்தால் விடுதலையின் தனித்தன்மை பலப்பட்டிருக்கும்.

உண்மையில் வேற்று நாட்டவரால் மாற்றப்பட்ட பெயர்கள் அனைத்தும் பொருளற்றவை. மொழியின்படி பார்த்தாலும் ஒழுங்கற்ற தவறான சொற்களைக் கொண்டவையே தவிர அசலான பதங்கள் அல்ல! பிறர் ஆக்கிரமித்து ஆள்வதற்கு முன்பிருந்த பெயர்களே விடுதலைக்குப் பின் இருக்க வேண்டுமென்பது குறைந்தபட்ச நாட்டுப்பற்று! அதுவே இல்லாதபோது சுதந்திரம் கிடைத்து என்ன பயன்?

பெனாரஸ் என்ற பொருளற்ற தவறான சொல்லை விட வாராணசி என்ற பெயர் அர்த்தத்தோடு கூடியது. அத்தகைய பொருள் கொண்ட பூர்வ பெயர்களோடு அந்தந்த இடங்களை அழைக்க வேண்டும் என்ற அரசாங்க ஆணைகள் சில மாநிலங்களில் சில இடங்களில் கொண்டுவரப்பட்டன. தெலுங்கு மாநிலத்தில் ராஜமகேந்திரவரம் என்ற பூர்வ பெயர் வந்தது அதன்படிதான்! ஆனால் தேசம் முழுவதும் இன்னும் அவ்வாறு நடக்க வேண்டும்.

இதில் மதத்தின் தலையீடு கிடையாது. இந்த நாட்டிற்கென்று உண்மையான கலாச்சாரம் உள்ளது. அதனை ஒதுக்கித் தள்ளும் மேதாவிகள் உள்ளனரென்றால் தேச கலாச்சாரத்தின் மீது எந்த காரணமும் இன்றி துவேஷம் கொண்டுள்ளார்கள் என்பதைத் தவிர வேறொரு காரணம் அவர்களுக்கு இல்லை என்பது புரிந்து போகிறது!

இந்த பூர்வ பெயர்களுக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு? வேற்று நாட்டவர்களை இன்னும் விரும்பி ஏற்று பாரத தேசத்தின் தனித் தன்மையையும் நாட்டுப்பற்றையும் வெறுப்பது எந்த அளவுக்கு நியாயம் என்பதை இங்கித ஞானம் உள்ள யாராக இருந்தாலும் உணர வேண்டியுள்ளது.

பெயருக்கு உள்ள மகிமையை வார்த்தையால் விவரிக்க இயலாதது. அது நம் கலாச்சாரத்தோடு இதயத்தை இணைக்கிறது. பெயர் என்பது ஏதோ நடைமுறை விவகாரங்களுக்கு பயன்படுத்தும் எழுத்துக்களின் கூட்டமல்ல!

தாக்குதல் நடத்தி மத மாற்றங்களால் பரவிய அந்நிய மதத்தவர்கள் ஊர் பெயர்களையும் பேட்டைகளின் பெயர்களையும் கூட இஷ்டம் வந்தாற்போல் இப்போதும் மாற்றி வருகிறார்கள். யாருமே எதிர்ப்பதற்குத் துணிவதில்லை!

பெயரை மாற்றினால் பூர்வ கலாச்சாரத்தோடு இருக்கும் அனுபந்தம், பாரம்பரியம், நம்முடையதான பண்பாட்டின் அழகான தொடர்ச்சி போன்றவை அடிபட்டுப்போகும். பரம்பரை பரம்பரையாக வாரிசுகளால் பலப்படுத்தப்பட்ட நாகரீக அஸ்திவாரம் சிதைந்து போகும்.

அப்படிப்பட்ட பரிணாமங்கள் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் வேற்றுநாட்டார் நம் நாட்டின் பெயர்களை மாற்றினார்கள். அந்த விபரீத மாற்றங்களுக்காகவே இன்றைய கபட மேதாவிகளும் முயற்சித்து வருகிறார்கள்.

பூர்வ பெயர்களால் தேசத்தின் வரலாறு மீண்டெழுந்து அற்புத எதிர்காலத்திற்கு பிரேரணை அளித்துவிடும் என்ற பீதியால் அயல் தன்மையை விடாமல் பெயரளவுக்கு இந்தியனாக உள்ளவர்கள் கூச்சலிடுகிறார்கள்.

மக்கள் பெருமளவில் வெகுண்டெழுந்து ஆய்ந்தறிந்து நம் தேசத்தின் இயல்பான பெயர்களால் பாரதத்தை ஒளி பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் தெலுகு மாத இதழ் – ஆகஸ்ட் 2019 தலையங்கத்தின் தமிழ் வடிவம்)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...