
பங்குகள் தொடர் வீழ்ச்சியால் அதானி குழும அதிகாரிகளை சந்தித்து விரைவில் பேச உள்ளதாக எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்கவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பங்கு வர்த்தகத்தில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டியது. இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரின. ஆனால், ஆளும் பாஜக அரசு அதானி விவகாரம் குறித்து பேசவில்லை.

அதேநேரம் அதானி நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்ஐசி, கடந்த ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி ரூ. 36,474.78 கோடி முதலீடு செய்துள்ளது. அதாவது சதவீத அடிப்படையில் மொத்த பங்குகளில் 4.23 சதவீதமாகும். அதேபோல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளன. எனவே எல்ஐசி, வங்கிகளின் நிதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், ‘நெருக்கடியில் சிக்கியுள்ள அதானி குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளை, எல்ஐசி நிர்வாக குழு விரைவில் சந்திக்கும்.
அப்போது அதானி குழுமம் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்கப்படும். அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதையும் கேட்டறிவோம். இருப்பினும், எல்ஐசி மற்றும் அதானி குழும அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு குறித்த காலக்கெடுவை தற்போது கூற இயலாது’ என்று கூறினார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 9 மாத காலத்தில் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருவாய் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 244 கோடியாக உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 673 கோடியாக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பிரீமிய வருவாய் 20.65 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோல 9 மாதத்தில், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.22 ஆயிரத்து 970 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே சமயத்தில் ரூ.1,672 கோடியாக இருந்தது. நடப்பு காலத்தில் லாப உயர்வுக்கு காரணம், ரூ.19,941.60 கோடி (வரிகள் நீங்கலாக), ‘நான் பேர்’ கணக்கில் இருந்து முதலீட்டாளர்கள் கணக்குக்கு மாற்றப்பட்டதே ஆகும்.
எல்.ஐ.சி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. அதன் விளைவாக, 9 மாதங்களுக்கான முதல் வருட பிரீமிய வருவாய் அடிப்படையில் எல்.ஐ.சி.யின் ஒட்டுமொத்த சந்தை பங்கு 65.38 சதவீதம். இது கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 61.40 சதவீதம் ஆக இருந்தது. இதேபோல, 9 மாதத்தில் தனிநபர் பிரிவில் 1.29 கோடி தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இது கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 1.26 கோடியாக இருந்தது. இது 1.92 சதவீதம் அதிகம் ஆகும். எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர் நம்பகத்தன்மை, சொத்துகளின் சந்தை மதிப்பு, புது வணிக லாப விளிம்பு போன்ற செயல்திறன் வழிகாட்டிகள் அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தை 3-வது காலாண்டு முடிவுகள் காட்டியுள்ளது. இதுகுறித்து, எல்.ஐ.சி.யின் தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், “இலக்கை அடைவதில் நாங்கள் உறுதியாக முன்னேறி வருகிறோம். வளர்ந்து வரும் காப்பீட்டு சந்தையில் எங்கள் சந்தை பங்களிப்பை தக்க வைப்பது மட்டுமல்லாமல் அதிகரித்து முன்னேறி செல்வோம் என திடமாக நம்புகிறோம்” என கூறியுள்ளார்.