நாட்டையே உலுக்கும் திடீர் பணத் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் புகார்; ஜேட்லி விளக்கம்; மக்கள் அவதி!

இருப்பினும் சாமானிய மனிதன் இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறான் என்பதும், வங்கி நிர்வாகம் மற்ற துறைகளைப் போல் துடிப்புடன் இல்லை, கருப்பு ஆடுகள் புகுந்து சீர்கெட்டு விட்ட நிர்வாகமாக வங்கி நிர்வாகம் ஆகிப் போயுள்ளது என்றும், குற்றச்சாட்டுகள் முவைக்கப் படுகின்றன.

புது தில்லி: நாட்டின் பல மாநிலங்களில் திடீரென பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஏடிஎம்கள் முடங்கின. ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமப் படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

குறிப்பாக, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, தில்லி ஆகிய மாநிலங்களில் பணம் எடுக்க இயலாமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து மக்கள் சமூக வலை தளங்களில் புகார்களைக் கூறி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், என்ன பிரச்னை என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் ஆனால் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். இன்று ஒரு நாளில் மட்டும் 5 அல்லது 6 ஏடிஎம்களுக்குச் சென்றும் பணம் எடுக்க முடியவில்லை. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், காய்கறி மற்றும் அத்யாவசியப் பொருட்கள் வாங்கவும் பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்குக் கூட பணம் எடுக்க இயலாத நிலையில் இருக்கிறோம் என்று கூறினர்.

இதனிடையே பணத் தட்டுப்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பணப் பதுக்கல் என்றால் எவ்வாறு வெளிக் கொண்டு வருவது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.

இந்நிலையில், ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் மோடி வங்கி நிர்வாகத்தை சீர்குலைத்து விட்டார். நீரவ் மோடி 30 ஆயிரம் கோடி ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிய போது பிரதமர் எந்த வார்த்தையும் கூறவில்லை. நமது பாக்கெட்டிலிருந்து 500 மற்றும், 1000 நோட்டுகளை பறித்து நிரவ் மோடியின் பாக்கெட்களில் திணித்து விட்டதால், நாம் பணத்திற்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள்ளது என்று கூறினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பதிவில், பல மாநிலங்களில் பணம் இல்லாமல் காலியாக உள்ளதாக தகவல் வருகிறது. பெரிய மதிப்பு நோட்டுகளை காணவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் காலம்தான் நினைவுக்கு வருகிறது. நாட்டில் நிதி நெருக்கடி ஏதும் ஏற்பட்டுள்ளதா? எனக் கூறியுள்ளார்.

Arun _jaitley

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதில் அளித்துள்ள அருண் ஜேட்லி, பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது, இந்தப் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியபோது, பணத் தட்டுப்பாடு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போதிய அளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. வங்கிகளிடம் போதிய பணம் கையிருப்பில் உள்ளது. திடீரென ஏற்பட்டுள்ள பணத் தேவை அல்லது வழக்கத்துக்கு மாறாக ஏற்பட்டுள்ள பணத்தேவை காரணமாக தற்காலிகமான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், பொருளாதார விவகார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தேவைக்கு ஏற்ப பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் தேவை அதிகரித்தலுக்கு ஏற்ப பண விநியோகம் இருக்கும். ஏடிஎம்களில் தேவையான அளவு பணம் கிடைக்கவும், செயல்படாமல் உள்ள ஏடிஎம்கள் வழக்கமான நிலைக்கு திரும்பவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு தொடர்பாக ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியபோது, விவசாயிகளின் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் காலம் வந்துள்ளதால், அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, ஏடிஎம்களில் பணம் இல்லை. ஸ்டேட் வங்கி கவலைப்பட்டது போல், மும்பையில் பணத் தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை என்று கூறினார்.

இருப்பினும் சாமானிய மனிதன் இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறான் என்பதும், வங்கி நிர்வாகம் மற்ற துறைகளைப் போல் துடிப்புடன் இல்லை, கருப்பு ஆடுகள் புகுந்து சீர்கெட்டு விட்ட நிர்வாகமாக வங்கி நிர்வாகம் ஆகிப் போயுள்ளது என்றும், குற்றச்சாட்டுகள் முவைக்கப் படுகின்றன.