ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் அதன் போட்டி நிறுவனமான ஏர்டெல், ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பைச் சந்திக்கிறது.
செல்போன் துறையில் ‘கிங்’காக வலம் வந்து கொண்டிருந்த ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்கு கடும் போட்டி கொடுத்த முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இப்போது இந்த நிறுவனங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. இதனால் போட்டியைச் சமாளிக்க முடியாமல், இலவச கால், ரோமிங் இலவசம், டேட்டாவை அள்ளி வீசுவது என தரை டிக்கெட் லெவலுக்கு இறங்கி வந்து விட்டன இந்த நிறுவனங்கள். இப்போது மேலும் ஒரு நெருக்கடி கொடுக்கும் விதமாக, ஜியோ நிறுவனம் ஒரு Postpaid திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பின் மூலம், ரூ.199 மாதாந்திர திட்டத்தில் வெளிநாட்டு அழைப்புகள் நிமிடத்துக்கு 50 பைசா என்ற கட்டணத்தில் மேற்கொள்ளலாம். ஜியோவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜியோவின் அறிவிப்பு இன்று பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சந்தை தொடங்கியதும் ஏர்டெல் மற்றும் ஐடியாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை முடிந்த நேரத்தில் 412.25 ஆக இருந்த ஏர்டெல்லின் பங்கு மதிப்பு இன்று 381.2 ஆக சரிந்தது. 1,64,793 கோடி ரூபாயாக இருந்த ஏர்டெல்லின் மூலதன மதிப்பு, இன்று 1,52,421 கோடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் 12,372 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது.
ஜியோ முந்திக் கொண்டுவிட்டது. ஆனால், ஏர்டெல்லின் ரூ.199 மாதாந்திர போஸ்ட்பெய்ட் திட்டம் மே 15ஆம் தேதி நாளை அமலுக்கு வருகிறது. இதில் இணையும் வாடிக்கையாளர்கள் காப்புத் தொகை செலுத்த வேண்டாம். இதில் வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ், மெசேஜ்கள், 4ஜி வேகத்தில் 25 ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும்.