இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் நடந்தபோது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது
நடிகர் பிருத்விராஜின் மனைவி, சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ள உருக்கமானப் பதிவு வைரலாகி வருகிறது.
தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகர் பிருத்விராஜ்.
தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார்.
இவர் நடித்து சமீபத்தில் வெளியான மலையாள படம், அய்யப்பனும் கோஷியும் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் ஹீரோவாக நடித்து வந்த பிருத்விராஜ் இயக்குநர் ஆன படம், லூசிஃபர். மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மஞ்சுவாரியர், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படமும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் அவர் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் பென்யாமின் இதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் இது. இந்தப் படம் தனக்கு முக்கியமானது என்று பிருத்விராஜ் தெரிவித்திருந்தார். இதை பிளஸ்சி இயக்குகிறார்.
இதில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினித் ஶ்ரீனீவாசன், உட்பட பலர் நடிக்கின்றனர். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் நடந்தபோது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் பிருத்விராஜ், பிளஸ்சி உட்பட 53 பேரை கொண்ட படக்குழு அங்கு சிக்கிக்கொண்டிருக்கிறது.
அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் உருக்கமானப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு நாளும் என் மகள் லாக்டவுன் முடிந்துவிட்டதா? அப்பா இன்னைக்கு வந்துவிடுவாரா? என்று கேட்கிறாள். இப்போது நானும் அவளும் (அலங்கிருதா) அவருக்காகக் காத்திருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஏராளமான ரசிகர்கள், இந்தப் பதிவுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ‘குழந்தை அப்பாவைப் போலவே இருக்கிறது, கவலைப்பட வேண்டாம் மகளே, சீக்கிரம் வந்துவிடுவார்’ என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர், உங்களைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம். அப்பா சீக்கிரம் வந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளனர். இந்த பதிவு வைரலாகி வருகிறது