தெலுங்கு திரை உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படத்திற்கும் கீரவாணிதான் இசையமைத்திருக்கிறார்
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றி பலரை கவனிக்க வைத்திருக்கிறது. இயக்குநர் ராஜமவுலி இயக்கும் பெரும்பான்மையான படங்களுக்கு இசை அமைத்தவர் தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயருடன் சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும் தெலுங்கு திரை உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படத்திற்கும் கீரவாணிதான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரன் ,அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக RRR படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இசையமைப்பாளர் கீரவாணி, தெலுங்கு இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விரைவில் திரையிசையிலிருந்து விலகி ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து விளக்கம் கேட்டபோது அதற்கான விளக்கம் காலம் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று பதிலளித்திருக்கிறார். தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர், தனது படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொள்ள மாட்டாரா என பல இயக்குநர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒருவர் ஓய்வுபெறப் போகிறேன் என்று அறிவித்துள்ளது, இசை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.