`மகன் பெங்களூரு மெடிக்கல் காலேஜ்ல உதவிப் பேராசிரியரா இருந்தான்.
`உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, `நிறைகுடம்’ முதலான படங்களில் நடிகர் சிவாஜி கணேசனுக்கும் `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட சில படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் தனது 36 வயதில் நேற்று மரணமடைந்தார். மருத்துவரான இவருக்கு நான்கு வயதில் ஒரு மகனும் பிறந்து எட்டே மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபினய்யின் மனைவியும் மருத்துவரே.
`மகன் பெங்களூரு மெடிக்கல் காலேஜ்ல உதவிப் பேராசிரியரா இருந்தான். என் மருமகள் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரில உதவிப் பேராசிரியை. அபினய்க்கு ஸ்போர்ட்ஸ்ல குறிப்பா கிரிக்கெட்ல விருப்பம் அதிகம். மெடிசின் படிக்கத் தேர்ந்தெடுத்தப்பக்கூட ஸ்போர்ட்ஸ் மெடிசின்தான் எடுத்துப் படிச்சான்.
எங்க குடும்பத்துக்கு என்ன சாபக்கேடோ தெரியல… எனக்கு அஞ்சு வயசா இருந்தப்ப என்னுடைய அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்தார். என்னுடைய அண்ணன் ஒருத்தரும் 40 வயசுல மாரடைப்பால இறந்தார். இப்ப என் ஒரே மகனும் அதே ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். என்ன சொல்றதுன்னே தெரியலை” எனக் கலங்கினார்.
அதேநேரம், கடந்த சில வருடங்களாகவே வாணிஸ்ரீ குடும்பத்தில் சொத்துப் பிரச்னை போய்க்கொண்டிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவலைச் சொல்கிறார்கள் வாணிஸ்ரீயை அறிந்தவர்கள்.
“கருணாகரனும் வாணிஸ்ரீயும் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. இவங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். பிள்ளைங்க ரெண்டு பேரையும் டாக்டருக்குப் படிக்க வச்சாங்க. அபினய் பண்ணதும் காதல் திருமணம்தான். அவரின் மனைவி நீலகிரி பகுதியைச் சேர்ந்தவங்க. அபினய்யுடன் படிச்சப்ப ரெண்டு பேருக்கிடையில் காதல்.
`சில மாதங்களுக்கு முன்னாடி குடும்பத்துல சொத்தைப் பிரிக்கிறதுல கருத்து வேறுபாடு உருவாகி, அது அப்பா – மகன், அம்மா – மகள்னு மோதல் போக்கை உருவாக்கியிருந்ததா தெரிய வந்துச்சு. அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடிகூட வீட்டுல சண்டை போட்டுட்டு சில நாள்கள் ஹோட்டல்ல போய் தங்கியிருந்தாங்க வாணி. சொத்துப் பிரச்னை தந்த அழுத்தத்துல அந்தப் பையனுக்கு இப்படி ஆகிடுச்சான்னும் தெரியல’’ என்றார்கள் வாணிஶ்ரீக்கு நெருக்கமானவர்கள்.
இதற்கிடையே அபினய் மாரடைப்பால் இறந்ததாக அவரின் தந்தை சொல்ல, வேறு சிலரோ அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்கிறார்கள். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வராமல் நேராக தந்தை கருணாகரன் தங்கியிருக்கும் திருக்கழுகுன்றம் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் அபினய். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.