விடுதலை திரைப்படம் – ஒரு புரட்சிகர இயக்க வரலாற்றை காசுக்காக உருமாற்றி கோடிக்கணக்கில் இயக்குனர் வெற்றிமாறன் சம்பாரிக்க உண்மைக்கதையை கற்பனை கலந்து எடுத்து இப்போ இது கற்பனை கதை என்று திருட்டு வேலையில் ஈடுப்பட்டு தமிழ் இன விடுதலைப் போராளிகளின் தியாகத்தை காற்றில் பறக்க விட்டுள்ளார்கள்… என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதற்குக் காரணம், தடா பெரியசாமி எழுதியுள்ள ஒரு பதிவு தான்..!
விடுதலை திரைப்படம் : நண்பர்கள் பலர் தொலைபேசியில் விடுதலை திரைப்படம் பாருங்கள் அதில் நீங்கள் தூக்குத் தண்டனை பெற்ற அரியலூர் மருதையாற்று பாலம் வெடிகுண்டு சம்பவம் இடம்பெற்று இருப்பதாக கூறினார்கள். அதன் அடிப்படையில் நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படத்தை பார்த்தேன்.
திரைப்படம் தொடங்கும் போது கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று சொல்வது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக ஒரு கதை எழுதப்படும் போது உண்மை சம்பவங்களின் நெகிழ்ச்சி தான், கற்பனையாக தோன்றி கதையாக வடிவமைக்கப்படுகிறது. வெற்றிமாறன் ஒட்டு மொத்தமாக இது கற்பனை கதை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. தமிழரசன், புலவர் கலியபெருமாள், தர்மலிங்கம், சுந்தரம் மற்றும் என்னை போன்ற பல போராளிகள் தியாகம் செய்த வரலாற்றை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக புரட்சிகர இயக்கம் நடத்திய தியாகத்தை வியாபார நோக்கத்திற்காக கற்பனை கதை என்று சொல்வது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தங்களுடைய வியாபார நோக்கத்திற்காக அன்று தமிழ்நாடு விடுதலைப் படை முன்வைத்த அரசியல் சித்தாந்த கருத்துக்களை மூடி மறைத்து உண்மை வரலாற்றை சிதைக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.
இதில் திருமாவளவன், சீமான் போன்றவர்களை படம் பார்க்க வைத்து அவர்களை ஏதோ போராளிகள் போன்று காட்ட நினைப்பதும் நகைப்புக்குரியது. அத்தகைய காலங்களில் திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்கள் அரசியல் களத்திலேயே இல்லை. அப்பொழுது அவர்கள் கல்லூரி மாணவர்கள்.
அசுரன் திரைப்படத்தில் பஞ்சமி நிலம் தொடர்பான கருத்துக்களால் இயக்குனர் வெற்றிமாறனை பலரும் பாராட்டினார்கள்.
அதேபோன்று விடுதலை திரைப்படத்தில் மக்களின் உரிமைகளுக்காக போராடிய இயக்கத்தின் வரலாற்றை திரைப்படமாக்கும் போது கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் அது மக்களிடத்திலே குழப்பத்தையும் இயக்கத் தோழர்கள் மீதும் தவறான புரிதலையும் ஏற்படுத்தி விடும். விடுதலை இரண்டாம் பாகத்தில் தெளிவான உண்மை வரலாற்றை பதிவு செய்து படமாக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: அரியலூர் மருதையாற்றுப்பால வெடிகுண்டு வழக்கில் 1 ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், 2 ஆண்டுகள் தூக்குத் தண்டனையில் சிறையில் இருந்து பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன்.
பிறகு மற்றொரு குண்டு வெடிப்பில் “தடா” சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தேன். அதில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்த வழக்கிலிருந்து விடுதலையானேன். ஆக எனது வாழ்க்கையில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன்.
இப்படிக்கு,
தடா பெரியசாமி