அக்சயகுமாருடன் முதன்முதலில் இணைந்த ‘பிக்பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமன்

அக்சயகுமாருடன் முதன்முதலில் இணைந்த 'பிக்பாஸ்' கணேஷ் வெங்கட்ராமன்

அபியும் நானும், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் கணேஷ் புகழ் பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கணேஷின் மார்க்கெட் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அவர் பாலிவுட் நடிகர் அக்சயகுமாருடன் இணைந்துள்ளார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், `தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் இருந்து வரும் நிலையில், கணேஷ் வெங்கட்ராமன் தற்போது அவருடன் கைகோர்த்துள்ளார்.

அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் இணைந்து கலந்து கொண்ட விளம்பர படங்களின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து கணேஷ் கூறியபோது, ‘நான் அக்சய்குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம்.

தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் `ஹார்பிக்’ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்“ என்று கூறினார்.