விபத்தில் சிக்கி காருக்குள் ஒரு மணி நேரம் போராடிய நடிகை: காப்பாற்றிய பத்திரிகையாளர்

நடிகை மேகாவை மீட்ட  புகைப்பட பத்திரிகையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தாம் கடவுளின் கருணையால் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் மேகா  தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மலையாள நடிகை மேகா மேத்யூ, சரியான நேரத்தில் புகைப்பட பத்திரிகையாளரால் அடையாளம் காணப்பட்டு விரைந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

வளர்ந்து வரும் மலையாள நடிகை மேகா மேத்யூ. இவர் ஆனந்தம் படத்தில் அறிமுமானார். தற்போது மோகன்லாலுடன் நீராளி, ஆசிப் அலியுடன் மந்தாரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை மேகா மேத்யு, நேற்று காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருவனந்தபுரத்திலிருந்து கோட்டையத்துக்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார்.

அவர் சென்ற கார் எர்ணாகுளம் அருகே உள்ள முளம்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்தது. இதனால் மேகா காரை மெதுவாக ஓட்டிச் சென்றாராம். ஆனாலும், எதிரே வந்த கார் ஒன்று, மேகா ஓட்டி வந்த கார் மீது இடித்து விட்டு வேகமாகச் சென்றது. இதில் மேகா ஓட்டிச் சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது.

கார் தலைகுப்புற கவிழ்ந்ததால், மேகா பலத்த காயம் அடைந்துள்ளார். காரை விட்டு வெளியே வர முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருக்கிறார் மேகா. இந்நிலையில், விபத்து குறித்து அறிந்து, விபத்தை படம் எடுக்க வந்த பத்திரிகை புகைப்படக்காரர், காரின் உள்ளே போராடிக் கொண்டிருப்பது நடிகை மேகா மேத்யூ என்பதையும், அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து, காரில் இருந்து மேகாவை வெளியே மீட்டுக் கொண்டு வந்து, கொச்சியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் விரைந்து அனுமதித்திருக்கிறார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை மேகாவை மீட்ட  புகைப்பட பத்திரிகையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தாம் கடவுளின் கருணையால் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் மேகா  தெரிவித்துள்ளார்.