சென்னை : தொப்பிக்கே தொப்பியா என தொப்பி பட விழாவில் தயாரிப்பாளர்கள் குறித்து பவர்ஸ்டார் பேசிய கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொப்பி பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவா, தேனப்பன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விமல், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் பேசியபோது… தொப்பி என இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். ஒரு காலத்தில் நான் எல்லோருக்கும் தொப்பி போட்டேன் (காசோலை மோசடி). எனக்கே இப்போது எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். எனக்கே செக்கா… ஒரு படத்தில் நடிப்பதற்காக முதலில் செக் கொடுக்கிறார்கள். நானே செக் கொடுத்தவன். எனக்கே செக்கா என்று கேட்டால் செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். கொடைக்கானல் போன்ற உயரமான மலையில் பலமுறை நடந்து கஷ்டப்பட்டு நடித்த பின் சம்பளம் கேட்டால் எனக்கு தொப்பி போடுகிறார்கள். என்னை திருந்தி வாழ விடமாட்டார்கள் போல் தெரிகிறது. நல்லதற்கு காலம் இல்லை. எனவே இந்த படத்திற்கு தொப்பி என்பது நல்ல தலைப்பு. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஏராளமான தயாரிப்பாளர்கள் தற்போது படம் எடுக்கிறார்கள். அவர்கள் படம் எடுக்க வரும்போது சுமார் 5 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் படத்தில் நடித்தவர்களுக்கு பின்னர் சம்பளம் கொடுக்க முடியும்’ என்றார்.
- ஏமாற்றுதலுக்கு தொப்பி என்ற பொருள் பட பவர்ஸ்டார் பேசிய இந்தப் பேச்சால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.