காலா படத்தால் நட்டமா? என்ன சொல்கிறார் தனுஷ்?

நடிகர் ரஜினி காந்த் நடித்து, பா.ரஞ்சித்தின் படமான காலா வெளிவந்து பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். ரஜினியின் வழக்கமான படமாக இந்தப் படம் அமையாமல், இயக்குனர் பா.ரஞ்சித் சொல்ல வந்த சாதீயக் கருத்துகளுடன் அமைந்திருந்தது. தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட் சம்பவம் நடைபெற, அது குறித்து ரஜினி கருத்து கூற, இதனால் காலா படம் சரியாகப் போகவில்லை என்ற ஒரு பேச்சு எழுந்தது.

மேலும், பாஜக., மத்திய அரசின் திட்டங்கள், இந்து மதக் கருத்துகள் ஆகியவை குறித்தும் தவறான பிரசாரங்களை காலா படத்தில் பா.ரஞ்சித் வைத்திருந்ததாகவும், அதனால் பாஜக., எதிர்ப்பு கிளப்பி, அந்த அரசியலால் படத்தை ஓட்ட வைத்துவிடலாம் என்று பேசப் பட்டதாகவும் செய்திகள் உலாவின. ஆனால், பாஜக., இந்தப் படத்தை கண்டுகொள்ளவில்லை. மௌனமாக காலா குறித்து பேசுவதையே தவிர்த்தனர்.

இந்நிலையில், இப்படம் சரியாக போகவில்லை என்றும் காலா படம் பலத்தை நஷ்டத்தை தந்திருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ரூ.40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் சிலருக்கு நஷ்டத்தை சரிக்கட்ட தனுஷ் முன்வந்திருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், காலா படம் லாபத்தைத் தந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் டுவிட்டர் பதிவில், “காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக நெகடிவ்வாக வரும் செய்திகள் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்திற்கு இப்படியொரு வாய்ப்பை தந்த ரஜினிக்கு நன்றி. படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி” என கூறப்பட்டிருக்கிறது.