சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்

Actress priyanka (2) சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார்  பிரபல  தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில்  ‘சாமி இயக்கத்தில் ‘கங்காரு’ என்கிற படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் 24ல் 150 திரையரங்குகளில் வெளியாகிறது .

அப்படி என்ன சினிமாவில் உங்களுக்கு கஷ்டம் என்று கேட்டவுடன் மனிதர் குமுறிக் கொட்டித்தீர்த்து  விட்டார். ”சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்களுக்கே    சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள்தான். அனைவருக்கும் ஊதியம் வழங்கும் அந்த தயாரிப்பாளர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.
தயாரிப்பாளர் படும் பாடுகளை அவர்கள் சந்திக்கிற சவால்களை சொல்லி மாளாது. ஒரு படம் திட்டமிட்டுத் தொடங்குவது முதல் எடுத்து சென்சார் ஆகி வெளியிட்டு முடிப்பதற்குள் அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.” என்றவர் ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார். பட்ஜெட்டில் பிரச்சினை! ஒரு படக்குழுவை உருவாக்கி முடிப்பதே பெரும் சவால்தான். முதலில் இயக்குநர் ஒரு பட்ஜெட் போடுவார். அதற்குள் சொன்னஅந்த தேதிக்குள் சொன்ன செலவுக்குள் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடிவதில்லை. திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் எப்படியும் இழுத்துக்கொண்டு போய்விடும். நாட்கள் அதிகமானால் செலவும் உயரும். செலவு அதிகமானால் முதலீடும் கூடும் வாங்கிய கடனும் கூடும். வட்டியும் அதிகமாகும். சொன்னதேதியில் முடிக்க முடியவில்லையே என்று இயக்குநரைக் கேட்க முடியாது- அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. சம்பளப்பிரச்சினை என்றால் மட்டும் வருவார்கள். சம்பளத்தில் 5 லட்சம் குறைத்து கொடுத்தால் மட்டும் விடமாட்டார்கள். படப்பிடிப்பில் பிரச்சினை! படப்பிடிப்பு தொடங்கினால் தினம்தினம் செலவு தான் அன்றன்றைக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். .இப்படி 24 கிராப்டுக்கும் சம்பளம் தர வேண்டும். 2, 3நாள் கூட பொறுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஒரு லைட்மேன் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்தமுடியும். ஒரு ஹேர் டிரஸ்ஸர் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்தமுடியும்.ஆனால் இவ்வளவு பேருக்கும் சம்பளம் தரும் தயாரிப்பாளர் நினைத்தால் எதுவுமே செய்ய முடியாது.
அப்படி ஒரு அனுபவம் எனக்கும் நடந்தது. ஒரு லைட்மேன் என் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் . என்ன கொடுமை பாருங்கள். கொடைக்கானலில் மலையில் படப்பிடிப்பு நடக்கிறது. பணம் வந்து சேர முன்னேபின்னே ஆகலாம்.  2 நாள் கூட பொறுக்க முடியவில்லை. நிறுத்தி விட்டார்கள். திரையுலகிலேயே பாவப்பட்ட ஜென்மம் என்றால் அது தயாரிப்பாளர் வர்க்கம் மட்டும்தான். சங்கங்களின் அச்சுறுத்தல்! திரையுலகில் சங்கங்கள் என்பது உரிமைகளை பெற ஊதியப் பிரச்சினை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்தான். ஆனால் அதன் பொறுப்பில் உள்ளவர்கள் பலர் அடாவடி செய்பவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி நெருக்கடி தந்து மிரட்டுகிறார்கள். நான் ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை. ஆனானப்பட்ட தயாரிப்பாளர்கள் சொல்லமுடியாது நான் சங்கங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லையென்று .. பேட்டா தாமதமானால் யார் யாரோ  போனில் மிரட்டுகிறான். உன் படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறான். முன்னே பின்னே பார்க்காத யார் யாரோ  படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறான் . படப்பிடிப்பு நிறுத்தப் பட்டால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு என்று அவர்களுக்குத் தெரியுமா? 24 கிராப்ட்டையும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் யாரும் ஏமாற்றிவிட முடியாது வாங்குவதற்கு எவ்வளவோ வழி முறைகள் உள்ளன.   ஆனால் தயாரிப்பாளர்களுக்கு என்ன உத்திரவாதம்? லைட் மேனுக்குக் கூட குறைந்த பட்ச உத்திரவாதம் உண்டு. தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் எப்போது திரும்பி வரும் எப்படி வரும்? எந்த உத்திரவாதமுமில்லை. வியாபாரத்தில் போராட்டம்! ஒரு படம் எடுத்தால் அதுவும் என்னை மாதிரி சின்ன தயாரிப்பாளர் படம் எடுத்தால் அதை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்வது பெரிய போராட்டம்தான் .ஆளாளுக்கு ஒவ்வொன்றைக் கூறுவார்கள். இந்தச் சூழலில் ஒருதயாரிப்பாளர் மிகவும் குழம்பிப் போவார். நாம் யாருக்காகப் படம் எடுக்க வேண்டும்? ரசிகர்களுக்காகஎடுக்க வேண்டு மா? இயக்குநரின் தனிப்பட்ட ரசனைக்குஎடுக்க வேண்டுமா?விநியோகஸ்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி எடுக்க வேண்டுமா ? குழம்பிப் போவார் .ஒன்றுமே புரியாது.பேசியபடி வியாபாரம் நடப்பதில்லை. சிறு படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. இவர்களால்தான் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது  சினிமாவில். எங்களால்தான்  தொழில் நடக்கிறது, ஆனால் எங்களுக்குத்தான் மரியாதை இல்லை.
பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் என்றால்தான் விநியோகஸ்தர்கள் வருகிறார்கள்,வியாபாரம் பேசுகிறார்கள். அவர்களின் முதல் கேள்வியே பெரிய நடிகர்கள் இருக்கிறார்களா என்பதுதான். பெரிய நடிகர்கள் ஆறு, ஏழு பேர்தானே இருக்கிறார்கள். அவர்களை வைத்து வருஷத்துக்கு எத்தனை படம் எடுக்க முடியும்? ஆறு, ஏழுபடம் தானே எடுக்க முடியும். மற்ற நாட்களில் யார் படங்களை திரையரங்கில் வெளியிடுவது? பெரிய தயாரிப்பாளர்கள்  10 பேர்தான் இருக்கிறார்கள். மற்றபடங்கள் தயாரிப்பது சின்ன தயாரிப்பாளர்கள்தானே? திருட்டு விசிடி பிரச்சினை! ஒரு படம் எடுத்து வெளிவந்து விட்டால் திருட்டு நோகாமல் விசிடி   போட்டு கொள்ளையடிக்கிறார்கள். தடுக்க வழியில்லை. சென்சார் பிரச்சினை! ஒரு படத்துக்கு ‘யூ’ சான்தறிதழ் கிடைத்தால்தான் 30 சதவிகித வரிவிலக்கு கிடைக்கும். சென்சாரில் யார்யாரோ கேள்வி கேட்பார்கள். என்ன வெல்லாமோ குதர்க்கமாககேட்பார்கள் அப்பாடா ‘யூ’ சான்தறிதழ் வாங்குவதற்குள் போதும் போதும் என்று நாக்கு தள்ளி விடுகிறது.
 இவ்வளவு சிரமப்பட்டு படமெடுத்து வெளியிட்டால் வெளிவரும் முன்பே எவன் எப்போது கேஸ் போடுவான் வழக்கு போடுவான் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.”
   இப்போ சொல்லுங்க தயாரிப்பாளர்கள் பாவப்பட்ட ஜென்மங்களா இல்லையா என்று நம்மையே  கேட்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. இத்தனை புள்ளி விபரங்களை எடுத்து வைத்தபிறகு நம்மால் மறுக்க முடியவில்லை. பேசுகையில் சினிமா மீது அவர் கொண்டுள்ள காதல் அழுத்தமாக தெரிகிறது. சரி  கங்காரு பற்றி என்ன கூறுகிறார்? ”’கங்காரு’படம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் ஏற்கெனவே வெற்றி பெற்று விட்டன. எந்தப் போட்டியுமின்றி ஏப்ரல் 24ல் வெளிவருகிறது. படத்தின் மீது அதன் தரத்தின் மீது எனக்கு பெரிதும் நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.