விமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்!

என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம்

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பத்து வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி-2’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்தப் படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தப் படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப்பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி-2’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தனது பக்க நியாயத்தைக் கூறி, வீடியோ வெளியிட்டுள்ளார் சிங்காரவேலன்.

விமல் தனது A3V சினிமாஸ் சார்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். ஆனால் அவரது அனுபவமின்மை காரணமாக நான் கொடுத்த 3 கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.. இன்னும் 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் இந்த படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும் இல்லை என்றால் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார் நடிகர் விமல்.. ஆனாலும் நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த 3௦.8.2௦17 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விமல் எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த விழாவில் இயக்குனர் சற்குணம் உட்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த விழாவின்போது அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அதில் ஒன்றை வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணி இயக்க உள்ளார் என்றும் இன்னொரு படமான களவாணி-2வை இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார் என்றும் அனைவரின் முன்னிலையில் அறிவித்தார் விமல்.

பின்னர் சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், இந்த களவாணி-2 படத்தை தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்த தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் களவாணி-2 படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் நீங்கள் தற்போது ஒரு படத்திற்கே தொடர்ந்து பைனான்ஸ் செய்வதாக பணம் கொடுக்க வேண்டாம். 2 படத்திற்கு பைனான்ஸ் செய்கிறீர்கள் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.

நானும் அதற்கு ஒப்புக்கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர்-17ஆம் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

ஆனால் அதன்பின் மன்னர் வகையறா படம் வெளியான பின்பு விமலுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருந்தவர்கள் அவர்களுக்குச் சேர வேண்டிய கடன் தொகையை அவருக்கு நெருக்கடி கொடுத்து வாங்கிச் சென்றனர்.. திரையுலகில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அவர்களுடன் போட்டியிட்டு விமலுக்கு நான் கொடுத்த பணத்தை கைப்பற்ற என்னால் முடியாமல் போனது.

இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தரவேண்டி இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் அந்த தொகையை தந்து விடுவதாக விமல் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை அவர் தரவில்லை. இந்தநிலையில் தான் களவாணி-2 படம் ‘வர்மன்ஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது. நான் இயக்குனர் சற்குணத்திடமும் விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்கள் இருவரும் அதை காதில் போட்டு கொள்ளவே மறுத்துவிட்டார்கள்.

பட வேலைகள் முடிந்து படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பு எனக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி தரும்படியும் அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியிருக்கும் என்றும் கூறி விமலுக்கு மீண்டும் மார்ச்-17ஆம் தேதி கடிதம் அனுப்பினேன். அதை பெற்றுக்கொண்ட அவரிடமிருந்து அப்போதும் எந்த பதிலும் வரவில்லை.

அதனால் அவர்மீது வழக்கு தொடரப் போகிறேன் என கூறி அதை அவருக்கு தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 8ஆம் தேதி விமல் மட்டுமல்லாது இயக்குனர் சற்குணம் உள்ளிட்டோருக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

ஆனால் அதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை.. எங்கள் தரப்பு வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி-2’ படத்திற்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி-2 படத்தை வேறு யாரும் வெளியிட கூடாது என 6 வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

இந்த படத்தின் உரிமை எங்களிடம் தான் இருக்கிறது.. இயக்குனர் சற்குணம் இந்த படத்தை அவர் தயாரித்ததாக சொல்வது பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று தான் நான் இதைக் கருதுகிறேன்… என்று கூறியுள்ளார் சிங்காரவேலன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...