Home சினிமா சார்பட்டா பரம்பரை: விமர்சனம்!

சார்பட்டா பரம்பரை: விமர்சனம்!

விமர்சனம் : அனந்து
(வாங்க பிளாக்கலாம் | VANGA BLOGALAM)

அட்டக்கத்தி , மெட்ராஸ் வெற்றிக்குப் பிறகு சூப்பர்ஸ்டாருடன் இணைந்து  கபாலி , காலா வில் சினிமா வெற்றியை விட தன் சித்தாந்தத்தை அதிகம் முன்னிறுத்தி தடம் மாறிய ரஞ்சித் , நான் கடவுள் படத்திற்கு பின்னர், தன்னை பெரிய நடிகராக நிரூபிக்க முடியாமல் தடுமாறிய ஆர்யாவுடன் இணைந்திருக்கும் படம் சார்பட்டா பரம்பரை . படம் வழக்கமான ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் ட்ராமா  தான் என்றாலும் 1970களில் மெட்ராஸ் வடக்கு பகுதிகளில் பிரபலமான குத்துச்சண்டை குழுக்களை பற்றி நேர்த்தியாக எடுத்த விதத்தில் ரசிக்க வைக்கிறார் ரஞ்சித் ‌‌…

பரம்பரை என அழைக்கப்படும் குழுக்கள் பல இருந்தாலும் மிக பிரபலமான இரண்டு அணிகள் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை . ‌‌தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சார்பட்டா பரம்பரை யின் வாத்தியார் ரங்கன்  ( பசுபதி ) வெற்றி பெற தனது மகன் வெற்றியை   ( கலையரசன் ) நம்பாமல் மற்றொரு சிஷ்யன் ராமுவை ( சந்தோஷ் ) நம்ப அவரோ குருவை நம்பாமல் வெளியூர் ஆளோடு பயிற்சியில் இறங்க கடுப்பாகிறார் கோச் ‌‌. அந்த நேரத்தில் ஏகலைவன் போல தூரமாகவே குத்துச்சண்டை யை கற்றுக்கொண்ட  குரு பக்தியுள்ள கபிலன் ( ஆர்யா ) ஆபத்பாந்தவனாக வருகிறார் . அவர் எதிரணியின் வேம்புலியை வென்று குருவின் மானத்தை காத்தாரா என்பதை விறுவிறுப்பாக இருந்தாலும் இடைவெளிக்குப்பின் கொஞ்சம் நீ…ட்டி சொல்வதே சார்பட்டா பரம்பரை….

ஆர்யா வின் கடும் உழைப்பு படத்திற்கு பெரிய பலம் . குறிப்பாக உடலை வருத்தி சிக்ஸ் ஆப்ஸோடு வருவதோடல்லாமல் குடிகாரனாகி தொப்பையோடு பழைய வெற்றியை நோக்கி ஏங்கும் இடங்களில் அதிகம் ஆச்சர்யப்படுத்துகிறார் . முதலிரவில் குத்தாட்டம் போட்டு முகம் சுளிக்க வைத்தாலும் ” வாடா வந்து சோறு ஊட்டு ” என்று ஆர்யாவை மிரட்டும் இடங்களில் அட போட வைக்கிறார் ஹீரோயின் துஷாரா . பசுபதி , கலையரசன்‌, சந்தோஷ் , ஜான் விஜய் எல்லோருமே கதாபாத்திரங்களாகவே  மாற்றியிருக்கிறார்கள் . அதிலும் டான்ஸிங் ரோசாக வரும் சமீர் , ஆர்யாவின் அம்மாவாக வரும் அனுபமா இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் …                                                          

படம் முழுவதும் மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தாலும் பீடி ராயப்பா , ராமுவின் மாமா , வேம்புலியின் கோச் ‌, எம்ஜிஆர் ரசிகராக வரும் மாறன் என அனைவரையும் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் . செட் என்றே நம்ப முடியாத கலை இயக்கம் , சந்நதோஷ் நாராயணின் இசை என எல்லாமே அவருக்கு கை கொடுக்கின்றன . இதில் ஹீரோ வெற்றிக்கு பிறகு குடிக்கு அடிமையாகி பின் தெளிவானது போல ரஞ்சித்தும் கபாலி , காலா வுக்கு பிறகு தெளிவாகி  தனக்கான சரியான படத்தை தயாரித்து இயக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள் …

கதை காலகட்டத்தின் படி எமர்ஜென்ஸி யின் போது திமுக எதிர்த்ததை பதிவு செய்த ரஞ்சித் குத்துச்சண்டை யில் ஆர்வம் கொண்டு அதை ஊக்குவித்த எம்ஜிஆர் அவர்களின் படத்தை படம் முடிவில் சின்னதாக போட்டு சுருக்கியது சீப் அரசியல் . சார்படடா பரம்பரை யில் சாதி, மதம் இல்லை என சொல்லப்பட்டாலும் இதிலும் வழக்கம் போல குறியீடுகள் மூலம் தனது சாதிப்பற்றை காட்டி சுய இன்பம் அடைந்திருக்கிறார் இயக்குனர் . ஆனால் கபாலி , காலா போல அதை ஓவர்டேக் பண்ண விடாமல் அடக்கி வாசித்ததால் நாம் பிழைத்தோம் . இன்டர்வெல் வரை வேகமாக செல்லும் படத்தை அதன் பிறகு இழுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இது போன்ற சில குறைகளை ஒதுக்கி விட்டு பார்த்தால் நல்ல படமாகவும் , வணிக ரீதியாகவும் சார்பட்டா பரம்பரை – சக்சஸ் பரம்பரை …

ரேட்டிங்.    : 3.5 *

இந்த படத்தின் யூடியூப் விமர்சனத்தை காண…

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version