ஒரு திரைப்படத்தை இரண்டு வகையில் அணுகலாம். ஒன்று திரை மொழி, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இசை என திரைப்படத்துக்கான அளவுகோல்களின் அடிப்படையில் பார்க்கலாம். இன்னொன்று அந்தப் படத்தின் அரசியல் சார்ந்து மதிப்பிடலாம். அதாவது, ஒரு படம் என்ன அரசியலைப் பேசுகிறது என்றும் அதை எந்த அளவுக்குக் கலை நயத்துடன் பேசியிருக்கிறது என்றும் பார்க்கலாம்.
இந்தப் படம் கலை அளவுகோலின்படிப் பார்த்தால் பலவீனமான படைப்பு (சில நுட்பமான காட்சிகள் உண்டு என்றாலும் ஒட்டுமொத்தமாக கலை நயம் குறைவான படைப்பே). அரசியல் அளவுகோலின்படிப் பார்த்தால் இந்தப் படம் முன்வைக்கும் அரசியல் அசட்டுத்தனமானது; அபாயகரமானது. எந்த மக்களுடைய வாழ்க்கையைப் பேசுகிறதோ அந்த மக்களின் அரசியலாக இல்லாமல் தயாரிப்பாளர்- இயக்குநர் கூட்டணியின் வில்லங்கமான அரசியலுக்கு ஏற்ப அந்த மக்களின் வாழ்க்கை திரிக்கப்பட்டிருக்கிறது.
கலை சார்ந்து பார்க்கும்போது படம் பல விஷயங்களை ஒரே திரைப்படத்தில் பேச முற்படுகிறது. மலைக் காட்டில் மூட்டை தூக்கிப் பிழைக்கும் மனிதர்கள், சொந்தமாக நிலம் வாங்கத் துடிக்கும் பாட்டாளி, யானையால் கொல்லப்படும் நபர்-மனநிலை பிறழும் அவருடைய மனைவி, மலைப்பகுதி தோட்டத் தொழிலாளர் பிரச்னை, தமிழர்-மலையாளி பிரச்னை என பல விஷயங்களை படம் பேச முற்படுகிறது.
திரைப்படத்தின் ஆதார வடிவம் சிறு கதையே… நாவல் அல்ல என்ற அடிப்படையில் பார்த்தால் ஒரே நிலப்பரப்பை மையமாகக்கொண்ட ஐந்து தனித்தனி சிறு கதைகளாக எடுக்கப்பட்டிருந்தால் கலையம்சத்தில் ஓரளவுக்குப் பொருட்படுத்தத் தகுந்த படமாக வந்திருக்கும். அதிலும் யானை மிதித்து கணவன் இறந்த பெண்ணின் கதை வசனங்களாகச் சொல்லப்பட்டிருப்பதற்குப் பதிலாக 10-15 நிமிடப் படமாகவே காட்டப்பட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும். அந்த மனநிலை பிறழ்ந்த பெண் அடை மழையில் மரம் விழுந்து இறந்துபோவது வெகு நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. என்றாலும் அவருடைய வாழ்க்கை விரிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
அதுபோல் சுமை தூக்கிச் செல்பவர்களில் ரத்தம் கக்கி இறப்பவரின் கதை ஓரளவுக்கு அழகாக இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதுவும் தனியாக விரிவாக சித்திரிக்கப்படவேண்டிய ஒரு கதையே. பொதுவாக, கடினமான, இழிவான வேலை செய்பவர்களைப் பார்க்கும்போது நமக்கு இயல்பாகவே அவர்கள் மேல் பரிதாபம் ஏற்படும். ஆனால், அந்தக் கடினத்தன்மையைப் போக்க அவர்கள் என்ன முயற்சி எடுக்கிறார்கள் என்ற கேள்வியை ஒருபோதும் கேட்பதில்லை.
இப்படியான மலைப் பகுதியில் 30-40 கிலோ மூட்டையைத் தலையில் சுமந்தபடி போவார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் கோவேறு கழுதை, கழுதை போன்றவற்றையே பெரிதும் பயன்படுத்துவார்கள். இந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே கழுதையை மலைப் பகுதியில் சுமை தூக்கப் பயன்படுத்துகிறது. பிறர் அனைவரும் தலையில் சுமந்தே செல்கிறார்கள்.
கழுதை, கோவேறு கழுதை போன்றவற்றை கஷ்டப்படுத்துவது தவறு என்பது ஒருபக்கம் இருக்கட்டும். மனித இனம் பொதுவாக தனது வாழ்க்கையை சுகப்படுத்திக்கொள்ள வாய் பேச முடியாத விலங்குகளை ஆதியில் இருந்தே பயன்படுத்தித்தான் வந்துள்ளது. இந்தப் படத்தில் அதைச் செய்யாதது அந்தக் கதாபாத்திரம் மீது வரவேண்டிய பரிதாபத்தை மட்டுப்படுத்தவே செய்கிறது.
மேட்டுக்குடியினர் ஒரு கிலோ இரண்டு கிலோவைத் தூக்கவே சிரமப்பட்டு ட்ராலி போன்றவற்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பாட்டாளிகள் அதுபோல் இழு விசைப் பை அல்லது சிறிய மர இழு வண்டியைப் பயன்படுத்தியிருக்கலாம். இவையெல்லாம் சமதளத்தில்தான் சரியாக இருக்கும் என்றால் கரடுமுரடான, சரிவான பாதையில் இழுத்துச் செல்ல என்ன தொழில் நுட்பங்கள் தேவையோ அதைப் பயன்படுத்தி ஒரு பையை, கருவியை வடிவமைத்திருக்கலாம்.
பாட்டாளி மக்கள் மீது அக்கறை கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி நியாயமான கூலி, பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் போன்றவற்றில் செலுத்திய அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கடினமான, இழிவான வேலைகளை மேம்படுத்துவதில் செலவிட்டிருக்கவில்லை. அது சரி… உலகம் முழுவதிலுமே மனித மலத்தை மனிதர்களே அள்ளிய நிலையில் ஃப்ளஷ் அவுட் டாய்லெட்டை ஒரு வணிக மூளை தானே கண்டுபிடித்துப் பிரபலப்படுத்தியது.
மலைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் தூளிகட்டித் தூக்கிக் கொண்டு நாலைந்து மணி நேரம் ஒத்தையடிப்பாதையில் ஓடியாகவேண்டும். ஒரு சாலை வசதி வந்தால்தான் உடனடி சிகிச்சை சாத்தியம். அதை ஒரு கார்ப்பரேட்தான் செய்து கொடுக்க முடியும். ஒருவேளை கார்ப்பரேட் வளர்ச்சியில் பல மோசமான பின் விளைவுகள் இருக்கும் என்றால், மலைப் பகுதி மக்களுக்கு அங்கேயே சித்த, ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் கிடைக்க கம்யூனிஸ்ட் கட்சி ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா..? மூலிகைச் செடிகளை வளர்த்து ஏதேனும் வரும் முன் காப்போம் போன்ற செயலில் ஈடுபட்டதா என்றால் அதுவும் கிடையாது. இருள் இருள் என்று ஒளி வரும் வழிகளை மறைத்தபடியே கத்திக் கொண்டிருப்பார்கள். தாமும் ஒரு சிறு அகல் விளக்கைக் கூட ஏற்றவும்மாட்டார்கள்.
பாட்டாளிகள் கம்யூனிஸ்ட்கள் பக்கம் அணி திரளாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம். பள்ளத்தில் இருக்கும் என்னை மேலேற்றுவதைவிட்டுவிட்டு என் அருகே இடித்துப் பிடித்தபடி நின்றுகொண்டு (பல நேரங்களில் என் தோளின் மீது ஏறி நின்றுகொண்டு) கோஷம்போடுவதால் எனக்கு என்ன லாபம் என்றுதானே ஒரு பாட்டாளி நினைப்பார்.
அந்த மக்கள் அப்படித்தான் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்றநிலையில் ஒரு படைப்பாளி அதைத்தானே காட்சிப்படுத்த முடியும் என்று கேட்கலாம். ஆனால், விடுதலைக்கான ஒரு வழியைக் கோடிகாட்டுவதும் படைப்பாளியின் நோக்கமாக இருக்கக்கூடாதா?
தோட்டத் தொழிலாளர் பிரச்னையில் பாட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்பதும் கம்யூனிஸ்ட்தான். எதிரியாக இருப்பதும் கம்யூனிஸ்ட்தான் என்பதை அழகாக சமநிலையுடன் யோசித்திருக்கிறார். இதுவும் காட்சிப்படுத்தலில் தோல்வியடைந்திருக்கிறது.
அடுத்ததாக, விவசாயக் கூலியாக இருந்த ஒருவர் காணி நிலம் வாங்க ஆசைப்படுவராக இடம்பெற்றிருந்தால் கூடுதல் நம்பகத்தன்மை இருந்திருக்கும். திரைப்படத்தில் அந்தக் கதாபாத்திரம் மூட்டை தூக்கிப் பிழைப்பவராக வருகிறது. எனவே, அவருடைய நிலம் சார்ந்த ஏக்கம் அழுத்தமாகப் பதிவாகவில்லை.
க்ளைமாக்ஸில் தான் கஷ்டப்பட்டு வாங்கிய நிலத்திலேயே காவல்காரராக வேலைக்குச் செல்ல நேரும் அவலத்தையும் காற்றாலை வருவதால் விவசாயம் பாதிக்கப்படும் சோகத்தையும் காட்சிப்படுத்தியவிதம் தட்டையாக இருக்கிறது.
அந்தக் காட்சியில் காற்றாலையானது பெரும் வில்லன் போன்ற அரக்கன் போன்ற கலர் காம்பினேஷனில் காட்டப்பட்டிருக்கவேண்டும். பிற காட்சிகள் போலவே வறண்ட, மந்தமான கலைநயமற்ற வண்ணத்திலேயே அதுவும் இடம்பெறுகிறது.
திரைப்படம் என்றால் ஒரு தொடக்கம், ஒரு முடிவு, முடிவை நோக்கிய காட்சிகள் என்றுதான் இருக்கவேண்டுமா… வாழ்க்கையில் ஏற்ற இறக்கம், வெற்றி தோல்வி, இன்பம் துன்பம் எல்லாம் மாறி மாறி வருவதில்லையா… ஒரே ஒரு வெற்றி… ஒரே ஒரு தோல்வி என்றா இருக்கிறது. திரைப்படத்திலும் அதுபோல் நாலைந்து ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் இருக்கக்கூடாதா என்ற கேள்வியின் அடிப்படையில் பார்த்தால் இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்ற வகையில் பொருட்படுத்தத் தகுந்ததே.
கதாநாயகன் நிலம் வாங்க, கஷ்டப்பட்டுக் காசு சேர்க்கிறான். முதலில் நிலத்தை விற்பதாகச் சொன்னவர் பின்வாங்க நேர்ந்துவிடுகிறது. இன்னொரு முறை விபத்தில் பணத்தை இழக்க நேர்கிறது. இறுதியில் தான் கஷ்டப்பட்டு வாங்கிய நிலத்திலேயே வாட்ச்மேன் வேலைக்குப் போக நேர்கிறது என மூன்று கிளைமாக்ஸ்களைக் கொண்ட திரைக்கதையாக இதைப் பார்க்கமுடியும்தான். ஆனால், இந்தக் கதையில் இருக்கும் கலை நயமும் உயிர்த்துடிப்பும் காட்சிப்படுத்தலில் இல்லாததால் அந்த இலக்கண மீறல் மரியாதையை இந்தப் படத்துக்குத் தரமுடியாமல் போய்விட்டிருக்கிறது.
*
படத்தின் அரசியலை எடுத்துக்கொண்டால் அதே எம்.ஆர்.ராதா கால டெம்ப்ளேட்தான். இந்து என்றால் கெட்டவர்… இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் என்றால் நல்லவர்கள் என்ற வழக்கமான ஜல்லிதான் இதிலும் தொடர்கிறது.
இந்து மதம், இந்து அரசியல் சக்திகள், இந்தியா, கார்ப்பரேட்டிஸம், பிராமணர்கள் இவையெல்லாம் விமர்சிக்கப்படவேண்டியவை. இடதுசாரி, இடைநிலை ஜாதிப் பெருமிதம், பிரிவினைவாதம், திராவிடம்(?), இஸ்லாமியர், கிறிஸ்தவர் எல்லாம் போற்றப்படவேண்டியவையே என்ற எளிய சூத்திரத்தின் அடிப்படையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தங்கள் கம்பெனியின் விளம்பரத்தைச் செருக பெரு நிறுவனங்கள் முயற்சி செய்வதுபோல் கிறிஸ்தவ, இஸ்லாமிய கம்பெனிகள் தமது விளம்பரத்தை நுட்பமாகத் திரைப்படங்களில் புகுத்திவருகிறார்கள்.
கதாநாயகனின் துயரங்களைப் பொருட்படுத்தாமல் இருக்கும் முதலாளிகள் எல்லாருமே தெளிவான இந்துக்கள். கருணையே வடிவாக அவருக்கு உதவுபவர்கள் எல்லாரும் இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள். அதிலும் இந்து நாயகியின் மகனைத் தேவாலயப் பள்ளியில் சேர்ப்பது இஸ்லாமியப் பெண்ணே.
ஓர் இந்துவைக் கெட்டவராகக் காட்டுவதால் எல்லா இந்துக்களையும் கெட்டவர்களாகச் சொன்னதாக அர்த்தமா..? ஒரு இஸ்லாமியரை, கிறிஸ்தவரை நல்லவர் என்று காட்டுவதால் அனைவரையும் நல்லவராகச் சொன்னதாக அர்த்தமா என்ற சமத்காரமான கேள்வி முன்வைக்கப்படுவதுண்டு. என்ன செய்ய..? எல்லாப் படங்களிலும் கெட்டவராக ஓர் இந்துவே வருகிறார். நல்லவராக ஒரு இஸ்லாமியரே, கிறிஸ்தவரே வருகிறாரே.
இந்துவாக இருப்பதால் எந்த நன்மையும் கிடையாது. இந்து முதலாளிகள் உதவ மாட்டார்கள். இந்து தெய்வங்கள் உதவாது என்ற செய்தி அனைத்துப் படங்களிலும் திரும்பத் திரும்ப திணிக்கப்படுகின்றன. பிற படங்களில் இருக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் வெளிப்படையாக இல்லை என்றாலும் அந்த மனோபாவமே படம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.
லயோலா போன்ற கல்லூரிகளில் ஆரம்பித்து திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் வரை அப்படியான சிந்தனை கொண்டவர்கள்தானே… ஊடகங்கள் தொடங்கி விருது கமிட்டிகள் வரை எல்லா இடங்களிலும் இந்தச் சிந்தனைதானே புரையோடிக் கிடக்கிறது.
அது மாறாதவரை, அதை மாற்றாதவரை இப்படியான குன்றுகளே மலைகளாக முன்னிறுத்தப்படும். இப்படியான குட்டைகளே ஆறாகச் சொல்லப்படும்.