
“விதை விநாயகர்” என்ற கோமாளித்தனம் பெங்களூரில் போன வருடம் ஆரம்பித்தது. இப்போது சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் பரவிக் கொண்டிருக்கிறது.
பச்சைக் களிமண்ணில் செய்த விநாயகரை அப்படியே பூஜிப்பது உத்தமம். அலங்காரத்திற்காக இயற்கை வண்ணங்களைச் சேர்க்கலாம், ஆனால் வேதிப் பொருட்களாலான பெயிண்ட் வண்ணங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டியவை. ‘பசுமை விநாயகர்’ (Green Ganesha) என்பது இவ்வளவு தான். இதற்கு மேல் ஒன்றும் தேவையில்லை.
பச்சைக் களிமண்ணில் வெண்டைக்காய், கத்தரிக்காய் இன்னபிற காய்கறி விதைகளைப் பொதிந்து விட்டு, பிறகு வினாயகர் பிம்பத்தைச் செய்து “விதை விநாயகர்” என்று 200-300 ரூபாய் என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிம்பத்தை ஒரு பூந்தொட்டியில் விசர்ஜனம் செய்தால் அதில் செடி வளருமாம். சூழலியல் நேசர்களே இதை வாங்குங்கள் என்று ஒரு பிரசாரம் வேறு.
தொட்டியில் காய்கறிச் செடி வளர்க்க வேண்டுமென்றால் நேரடியாக விதையைப் போட்டு வளர்க்க வேண்டியது தானே? அதற்கும் விநாயகருக்கும் என்ன சம்பந்தம்? இப்படிச் செய்வது, சாஸ்திர நோக்கிலும் சரி, பக்திபூர்வமாகவும் சரி – முற்றிலும் தவறானது.
திருமணம் உள்ளிட்ட இல்லறத்தார்க்கான கிரியைகளில் விதையை (பீஜம்) முளைக்க விட்டு சுமங்கலிகள் பாலிகை தெளித்து, பின்பு அதைக் கரைக்கும் மிகத் தொன்மையான சடங்கு உள்ளது. அந்த சடங்கிற்கான வேத மந்திரங்கள் உண்டு. அதன் உட்பொருளும் அழகியலும் முற்றிலும் வேறு வகையானவை. விநாயக சதுர்த்தி பூஜையில் மண்ணிலிருந்து பிம்பத்தை (ம்ருண்மயம்) உருவாக்கிப் பூஜை செய்து இறுதியில் நீரில் முற்றிலுமாகக் கரைத்து விசர்ஜனம் செய்வது என்பது வேறு வகையான ஆழ்ந்த உட்பொருளும் குறியீட்டுத் தன்மையும் கொண்டது. விசர்ஜனம் என்ற சொல்லின் பொருளே “முற்றிலுமாகக் கரைத்து விடுதல்” என்பது தான். கரைத்து விட்டு பிறகு அதிலிருந்து செடி முளைக்கும் என்பது அந்த வழிபாட்டுக் கூறையே அவதிக்கும் செயல்.
காசு கொடுத்து விநாயகர் பிம்பத்தை வாங்கினால், விசர்ஜனம் செய்தபின்பும் அதற்கு ஒரு லௌகீகமான உபயோகம்/லாபம் (utility) இருக்கும் என்று மார்க்கெட் செய்யும் வக்கிரமான வியாபார சிந்தனை தான் இதன் பின் உள்ளது.
நண்பர்கள் பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விதை சமாசாரத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
வேழமுகத்து விநாயகனைத்தொழ
வாழ்வு மிகுந்து வளர்ந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத்தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.
|| ஓம் ஸ்ரீகணேஶாய நம: ||
- சங்கர நாராயணன்