― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபுகார் பெட்டிதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்க!

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்க!

- Advertisement -
emergency-short-loan

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டதன் மூலம் இளைஞர்களின் தற்கொலை  தடுக்கப்பட்டுள்ள நிலையில், கந்துவட்டி செயலி கடன் நிறுவனங்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டின் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காத ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.

தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதர்களின் பேராசை ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவது தான் ஆன்லைன் சூதாட்டங்களின் அடிப்படை ஆகும். ஆன்லைன் சூதாட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியையும்,  மனிதர்களின் பணத்தேவையையும் பயன்படுத்தி மக்களைச் சுரண்டும் செல்பேசி செயலி வழி ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்கள், தங்களிடம் கடன் வாங்கி குறித்த காலத்தில் செலுத்தத் தவறியவர்களை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுகின்றன.

இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்கள்,  தொலைபேசி மூலம் இளைஞர்களை தொடர்பு கொண்டு எந்த ஆவணமும் இல்லாமல் எளிய முறையில் கடன் வழங்குவதாக ஆசை காட்டுகின்றன. பணம் தேவைப்படுவோரை தங்கள் நிறுவனத்தின் செல்பேசி செயலியில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்துகின்றனர்.

அவ்வாறு பதிவு செய்யும் போது கடன்தாரரின் அனைத்து விவரங்களும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாற்றும் நிறுவனம் ஆகியவற்றின் அனைத்து தரப்பினரின் செல்பேசி எண்களும் ஆன்லைன் கந்துவட்டி நிறுவனத்திற்கு செல்கின்றன.

gold-loan

ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் செல்பேசி செயலியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை எந்த ஆவணமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு வட்டி மற்றும்  பிற செலவுகளுக்காக 30% வசூலிக்கப்படுகிறது. ஒருவர் ரூ.5,000 கடன் வாங்கினால் அதில் வட்டியாக ரூ.1500 பிடித்துக் கொண்டு, மீதமுள்ள தொகை ரூ.3,500 மட்டுமே கடன்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தக் கடனை திருப்பிச் செலுத்த ஒரு மாதத்திற்கும் குறைவாகவே அவகாசம் வழங்கப் படுகிறது.

அதற்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அவர்களின் செல்பேசி வழியாக தகாத வார்த்தைகளில் திட்டுதல், கடன் பெற்றவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைத்து வாட்ஸ்-ஆப் குழுக்களை உருவாக்கி அதில் கடன் பெற்றவர் குறித்து அவதூறு செய்திகளை பரப்புதல் உள்ளிட்ட ஆன்லைன் அட்டகாசங்கள் அனைத்தையும் கந்து வட்டி நிறுவனங்கள் அரங்கேற்றுகின்றன. அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற தகவல்தொழில்நுட்ப பணியாளர் ஆன்லைன் கந்து வட்டி நிறுவனம் ஒன்றிடம் கடன் பெற்று அதை செலுத்த முடியாததால் கடுமையான தொல்லை மற்றும் அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மன உளைச்சலை தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இன்னொருவர் ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கிய கடனை அடைக்க இன்னொரு நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார். இவ்வாறாக பெறப்பட்ட கடன் மற்றும் வட்டித் தொகை லட்சக்கணக்கில் அதிகரித்து விட்ட நிலையில், ஆன்லைன் கந்து வட்டி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர் பணியாற்றும் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.

அதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த பணியாளர், கடனையும் அடைக்க முடியாமல், வாழவும் வழியில்லாமல் வாடிக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்டவர்கள், வேலை இழந்தவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

இந்தியாவில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது; கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களின்  புகைப்படங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்நிறுவனங்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் 30% வரை வட்டி வசூலிக்கின்றன; கடன் பெற்றவர்கள் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவதூறு பரப்புகின்றன என்பது தெரியவில்லை.

இதை மத்திய, மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் எவ்வாறு அனுமதிக்கின்றன என்பதும் புரியவில்லை. ஆன்லைன் கந்துவட்டி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அரவிந்த் அதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசங்கள் இந்திய தகவல்தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஆகும். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அந்த நிறுவனங்களால் அவமானப் படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.

எனவே, இத்தகைய ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் மற்றும் வணிகம் செய்வோர், மாத ஊதியதாரர்கள் எளிதாக கடன் பெற வகை செய்யப்பட வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக ஆன்லைன் நிறுவனங்கள் எளிதாக கடன் தருவதாக ஆசை காட்டினால் அதை நம்பி, விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்து மடிவதைப் போல, இளைஞர்கள் கடன் பெற்று தங்கள் வாழ்க்கையை இழந்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

  • டாக்டர் ராமதாஸ்
    நிறுவுனர், பாட்டாளி மக்கள் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version