துபாய் அரசாங்கம் கேரளாவிற்கு வெள்ள உதவியாக 100 மில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 700 கோடி ரூபாய்) கொடுக்கப் போவதாக இணையமெங்கும் உலவிய செய்தி எனக்கு ஆச்சரியமூட்டியதொரு விஷயம். ஏனென்றால் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக துபாய் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருப்பது உலகமறிந்ததொரு விஷயம். இந்தச் சூழ்நிலையில் எப்படி கேரளாவுக்கு 700 கோடிகள் கொடுப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை நிறைய மலையாளிகள் வளைகுடாவில் இருப்பதால் துபாய் ஷேக்குகள் அவர்களிடம் பணம் வசூலித்துக் கொடுப்பார்களாக இருக்கலாமோ என்று யோசனை வந்தது. ஒற்றுமைக்குப் பெயர்போன சேட்டன்மார்கள் அப்படிச் செய்யக் கூடியவர்கள்தான் எனவும் நினைத்துக் கொண்டேன்.
அந்தப் பணத்தை வாங்கக் கூடாது என்று மோடி குறுக்கே விழுந்து தடுத்துவிட்டதாக இணையமெங்கும் வசைகள். மீம்ஸ்கள். ஃபேஸ்புக் போஸ்ட்டுகள். ஊருருக்கு ஃப்ளெக்ஸ் போர்டுகள் என்று இந்தியாவே திமிலோகப்பட்டதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் துபாய் ஷேக்குகள் நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லை என்று சகலத்தையும் புஸ்வாணமாக்கிவிட்டார்கள்.
இன்றைய துபாய் மிகுந்த சிரமத்தில் இருக்கிறது. புர்ஜ்-காலிஃபா உலகத்தின் மிகப் பெரிய கட்டிடமாக இருக்கலாம். ஆனால் அதன் மீது ஏகப்பட்ட கடன் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திலிருக்கும் பெரும்பாலான அலுவலகங்கள் யாருமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. மொத்த துபாயும் ஒரு பெரிய Ponzi Scheme என்பது மெல்ல, மெல்ல வெளியில் வந்து கொண்டிருக்கிறது. இருக்கிற கடனைச் சமாளிக்க முடியாமல் துபாய் தவித்துக் கொண்டிருக்கிறது.
துபாயின் வியாபார நடைமுறைகள் தமாஷானவை. சீட்டுக்கட்டுகளால் ஆன கட்டிடம் போல வெற்று வங்கிக் காசோலைகளால் கட்டப்பட்டது துபாய். அடியில் ஒரு சீட்டை உருவினால் மொத்த துபாயும் கீழே விழுந்துவிடும் ஆபத்து அதனைச் சூழ்ந்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் துபாய் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும். இதனைச் சொல்வதால் எனக்கு துபாயின் மீது வெறுப்பு என்று அர்த்தமில்லை. எல்லாத் தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள்.
துபாயில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான். ஷாருக்கானிலிருந்து, ப.சி, மு.க. குடும்பம், இன்னபிற பணக்காரர்கள், சினிமா நடிக, நடிகைகள், கடத்தல்காரர்கள், கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள், அரசியல்வாதிகள் என அத்தனை பேர்களும் துபாயில்தான் முதலீடுகள் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தை திரும்ப எடுப்பது மிக, மிகக் கடினம் என்பேன். துபாயின் நிலைமை அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது. ஆனால் திறமையாக அதனை மறைத்து வருகிறார்கள்.
தன்னுடைய நிலையே ததிங்கிணதோம் போடுகையில் துபாய்க்காரன் எப்படி கேரளாக்காரனுக்குப் பணத்தைத் தூக்கிக் கொடுப்பான்? அப்படியே கொடுத்தாலும் ஓசியில் கொடுப்பான் என்று எதிர்பார்ப்பதெல்லாம் டூ மச்.
- பி எஸ் நரேந்திரன் (P S Narendran)