சென்னை – பாலங்களின் அவல நிலை

காலை … அலுவலகத்துக்கு ‘பைக்’கில் புறப்பட்டேன். அங்கங்கே ஏரி நீர் சாலைகளில் தேங்கி, வழிந்து சென்று, வடிந்து, சாலையைப் பெயர்த்தெடுத்து… நெடுஞ்சாலைகளின் தரம் கடுஞ்சோதனையில் உள்ளது. 

ஊரப்பாக்கம் தொடங்கி… வரிசை கட்டி நின்றன வாகனங்கள். நெரிசல். இடமின்மை. அங்கங்கே கிடைத்த சந்து பொந்துகளில் பைக் சாகசங்கள் (ம்… நானுந்தான்!)

சைக்கிள் சந்துகளில் பைக் முந்த, பைக் செல்லும் இடப்புற சிறிய இடைவெளியில் ஆட்டோ, கார்கள் முட்டிமோத… விட்டேனா பார் என்று சில மாநகர மற்றும் அரசுப் பேருந்துகள் விர் விர் என்று தெறிக்க…

நிச்சயமாக ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் மூளைக்குள் சோர்வும் நெஞ்சுக்குள் படபடப்பும் வந்திருக்கும்.
10 நிமிட தொலைவை 40 நிமிடங்களில் கடந்து… பெருங்களத்தூர் கழிந்து பார்த்தால்… அத்தனை நெரிசலுக்கும் காரணம் அந்த ரயில்வே லைன் மேம்பாலம்தான்… என்பது புரிந்தது.

சென்னைக்குள் வரும் பாதையில் பாலத்தில் பல ஓட்டைகள். குண்டு குழிகள். ஒவ்வொரு வண்டியும் ஏறி இறங்கும்போது, பாலம் எப்போது உடையுமோ என்ற அச்ச நிலை.

இதனை போன வாரம் பைக்கில் வந்த நானே உணர்ந்தேன். ஆனால், இத்தனை நாள் மெத்தனமாக இருந்துவிட்டு, அலுவலக நாளான இன்று காலை போக்குவரத்து போலீஸார் கல்லையும் மண்ணையும் சுமந்து, குழிகளில் இட்டு நிரப்பி… நெடுஞ்சாலைத்துறை வேலையை, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மேல் சட்டையைக் கழற்றி, பனியனுடன் நாலைந்து போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள்கள்… சித்தாள் கணக்காக சட்டியை எடுத்துக் கொண்டு, குழிகளை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
எனவே, இருவழித் தடத்தை ஒருவழியாக்கி… ஒரு வழியாக்கி விட்டிருந்தார்கள். அந்த நெரிசல்… ஊரப்பாக்கம் வரை எதிரொலித்தது.
***
பின்குறிப்பு:

1. பனியனுடன் அவர்கள் நின்ற கோலத்தை போட்டோ எடுக்க மனசில்லாமல் அப்படியே திரும்பிவிட்டேன்… *** காலம் கடந்து, அகாலத்தில் செய்தாலும், வாழ்க அவர்களின் ஈகோ பார்க்காத தொண்டுப் பணி.

2. சென்னை விமான நிலையம் முன்னுள்ள பாலம், அண்மையில் கட்டப்பட்டதுதான். மேலும், சென்ற மாதம்தான் பாலத்தின் மேல் புற தார்ச் சாலையில் மேல்புறத்தை இயந்திரம் கொண்டு சுரண்டி.. பின்னர் அதன் மேல் சல்லிக் கற்களைக் கொட்டி, தார்ச் சாலை அமைத்தார்கள். அதுவரையில் சிரமப்பட்டுதான் வாகனம் ஓட்டினோம். இப்போது… அந்த தார்ச் சாலை, தார் பிடிக்காமல் டைவர்ஸ் செய்துவிட்டு… கற்களெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. அதன் விளைவு… இரு இடங்களில் பெரும் பள்ளம். ஒவ்வொரு முறை கன ரக வாகனம் ஏறி இறங்கும்போதும் டம் டம் என்று சத்தம். பாலம் கீழிறங்குகிறது போல் தோன்றுகிறது. சென்னைக்கு மீனம்பாக்கம் என்ற பேர், பின்னர் டம் டம் என்று மாறிவிடப் போகிறது… பார்த்துக் கொள்ளுங்கள்!
(இப்போது பஸ்களை அதன் மேல் அனுமதிப்பதில்லை என்று தெரிகிறது…)

3. சாலையின் இடது புறம் உள்ள கொஞ்சூண்டு வழியைக் கூட மாநகர பேருந்துகளும், ஆட்டோ, வேன், ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமித்து, பைக் ஓட்டிகளின் பாதையை தடை செய்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். அதனால்தான், பைக் ஓட்டிகள், சாலைக்குள் கிடைக்கும் சந்து பொந்துகளுக்குள் சர் சர் என்று புகுந்து சாகசம் காட்டுகிறார்கள்.