உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் (ஐ.எல். அண்ட் எப்.எஸ்.) கடன்களில் தத்தளிக்கிற நிலையில், இந்த நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பணத்தை முதலீடு செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு எல் ஐ சி யின் பணத்தை எப்படி முதலீடு செய்யலாம் என்றும், ஐ.எல்.அண்ட் எப்.எஸ். என்றால் “ஐ லவ் பைனான்சியல் ஸ்கேம்ஸ் பார் யூ” என்று அர்த்தமா?” (ஐ.எல். அண்ட் எப்.எஸ். என்றால் நான் உங்களுக்காக நிதி ஊழல் செய்வதை விரும்புகிறேன் என்று அர்த்தமா?) என்றும் கேட்டுள்ளார் ராகுல் காந்தி.
உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் (ஐ.எல். அண்ட் எப்.எஸ்.) என்ற இந்த நிறுவனம் துவங்கப்பட்ட 1987ம் ஆண்டு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப் .சி, மற்றும் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய மூன்று மத்திய அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனங்களாலேயே நிறுவப்பட்டது என்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருப்பது காங்கிரஸ் கட்சியின் நிலைமையை, அதன் தலைவரின் பொறுப்பற்ற தன்மையை உணர்த்துகிறது.
ஐ.எல். அண்ட் எப்.எஸ் நிறுவனத்தில் இதுநாள் வரை, எல்.ஐ.சி நிறுவனம் 25 %ம், ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி குழுமத்தின் ORIX நிறுவனம் 23%ம், ஐ.எல். அண்ட் எப்.எஸ் நிறுவன ஊழியர் நல அறக்கட்டளை 12%ம், அபுதாபி முதலீட்டு நிறுவனம் 12 %ம், ஹெச்.டி.எப்.சி வாங்கி 9%ம், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 7%ம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 6%ம் பங்குகளை வைத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது என்பது மட்டுமல்ல ஒரு முதிர்ச்சியற்ற, பொருளாதாரம் அறியாத ஒரு அரசியல்வாதியின் அறிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் காங்கிரஸ் அரசு இருந்தபோது தான் பொது நிறுவனமான ஐ.எல். அண்ட் எப்.எஸ் நிறுவனத்தின் நிதியை காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்து, சில தனியார் நிறுவனங்களுக்கு சகோதர நிறுவனங்களின் பங்குகளை விற்றது போன்ற பல முறைகேடுகளை, சீர்கேடுகளை செய்து மக்களின் பணத்தை திருடியது என்பதே நிதர்சனம்.
“ஐ லவ் பைனான்சியல் ஸ்கேம்ஸ் பார் யூ” (I love Financial Scams for You) என்று அர்த்தமா?” (ஐ.எல். அண்ட் எப்.எஸ். என்றால் நான் உங்களுக்காக நிதி ஊழல் செய்வதை விரும்புகிறேன் என்று அர்த்தமா?) என்றும் கேட்டுள்ள ராகுல் காந்தி அவர்களே, ஐ .எல். அண்ட் எப்.எஸ் நிறுவனத்தை “ஐ லூஸ் பைனான்ஸ் சோர்ஸ் பார் யூ” (I Loss Financial Source for you) (ஐ.எல். அண்ட் எப்.எஸ். என்றால் நான் உங்களுக்காக மக்களின் பொது நிதி ஆதாரத்தை இழக்கிறேன் என்று அர்த்தம்) என்று தனியார் நிறுவனங்களுக்கு பொது துறை நிறுவனத்தை தாரைவார்த்தது நீங்களும், காங்கிரஸ் கட்சியும் தான்.
இந்த நிறுவனத்தின் மூலதனத்தை அதிகரிக்க சொல்லி, உங்கள் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே. வி. தாமஸ் அவர்கள், எல் ஐ சி மற்றும் இதர பொது நிறுவனங்களின் பங்குகளை அதிகரிக்க சொல்லி நிதியமைச்சருக்கு 20/09/2018 அன்று கடிதம் எழுதியுள்ளார். அவரிடம் இது குறித்த விவரங்களை அறிந்து கொண்டு தவறான தகவல்களை பரபரப்புக்காக, சுயநலத்திற்காக பரப்பியதற்காக மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பீர்களா ராகுல் அவர்களே?
அடிப்படை பொருளாதார அறிவு இல்லாமல், ஆபத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை காப்பாற்றி மக்களின் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது விமர்சனம் வைக்கும் தகுதியை இழந்து விட்டீர்கள் ராகுல் காந்தி அவர்களே. பொருளாதாரம் தெரியாமல், நாட்டின் பொது நிதி நிறுவனங்களின் நிலை அறியாமல் உளறி கொட்டி கொண்டிருக்கும் உங்களை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களை குழப்பி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் உங்களின் சதியை முறியடிக்கும் பாஜக.
கருத்து: நாராயணன் திருப்பதி.