புகாரே கொடுக்காமல் கைது! இந்து இயக்க பிரமுகர்கள் என்றால் போலீஸுக்கு இளக்காரமா?!

சென்னை: புகாரே கொடுக்காமல், போலீஸாரே கற்பனை செய்து கொண்டு, இந்து இயக்க பிரமுகர்களை கைது செய்து 3 மணி நேரத்துக்கும் மேல் காவல் நிலையத்தில் வைத்திருந்த சம்பவம், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மைக் காலமாக, பாரம்பரிய கர்நாடக இசைப் பாடகராக இருந்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்து இயக்கங்கள், பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அதற்கு காரணம், அவர் கூறும் கருத்துகளும், நடத்தைகளுமே!

பாரம்பரிய கர்நாடக சங்கீத மேடையில் லுங்கியுடன் பாட அமர்வது, இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிறிஸ்துவ மதமாற்ற பிரசார நிகழ்ச்சியில் பாடப் போவதாக இருந்த ஓ.எஸ். அருண் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். அதற்கு குரல் கொடுத்த டி.எம்.கிருஷ்ணா, வீம்புக்கு என்றே மாதம் ஒரு கிறிஸ்து, அல்லா பாடல் சிடி வெளியிடுவேன் என்றார்.

அவரது கருத்துகளால், பாரம்பரிய கர்நாடக இசை ரசிகர்கள் அதிர்ந்தனர். ஒரு நல்ல பாடகர், இசைக்கு உதவும் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் வந்த ஒரு பாடகர், இசைக்காகவே பொருந்தா நிலையிலும் காதல் மணம் புரிந்து கொண்ட ஒரு பாடகர், இவ்வாறு மதிகெட்டுப் போனது ஏன் என்று ரசிகர்கள் கேள்விகள் எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் டி.எம்.கிருஷ்ணா இந்து இயக்கத்தவர்களின் மத்தியில் பேசுபொருள் ஆனார்.

இந்நிலையில், மியூசிக் சீஸன் எனப்படும் டிசம்பர் மாதம் வருவதால், இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில், டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை சபாக்கள் அங்கீகரித்து ஏற்பாடு செய்யக் கூடாது என்று இசை ரசிகர்களாக, இந்து உணர்வாளர்களாக பலரும் சபாக்களின் செயலர்களை தொலைபேசியிலும் கடிதம் வாயிலாகவும், நேரிலும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஓர் ஆங்கில இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது. அதில், கேரளம் போன்ற மாநிலங்களில் கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்களால் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் வெட்டிக் கொல்லப் படும் போது அதனால் எனக்கு எந்த வேதனையும் எழாது. நான் மகிழ்ச்சி அடைவேன் என்று டி.எம்.கிருஷ்ணா சொன்னதாகக் கூறப்பட்டது. அந்தக் கட்டுரை, சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. வாட்ஸ் அப் குழுக்களில் இந்தத் தகவல்களைப் படித்த பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இப்படி ஒரு குரூர எண்ணம் கொண்ட, மனித விரோத எண்ணம் கொண்ட ஒருவர், மனத்தை லேசாக்கும் மந்திரம் எனப் போற்றப்படும் இசைக் கலைஞராக இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில்தான், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபா எனப்படும் ரசிக ரஞ்சனி சபாவில் டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு, ஞாயிற்றுக் கிழமை இன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மாலை 5.30.க்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், டிக்கெட் கட்டணம் ரூ.500. அர்நாப் சக்ரவர்த்தி- சரோட், பிடி ரவீந்த்ர யாகவல்- தப்லா, டிஎம்.கிருஷ்ணா -பாட்டு, ஆர்.கே.ஸ்ரீராம்குமார் வயலின், கேவி பிரசாத்-மிருதங்கம், பிஎஸ் புருஷோத்தம்-கஞ்சிரா என கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததை அறிந்த இந்து இயக்கங்களைச் சேர்ந்த சிலர், ரசிக ரஞ்சனி சபா செயலரை சந்தித்து, தங்களது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள எண்ணினர்.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார், பாஜக.,வை சேர்ந்த ஓமாம்புலியூர் ஜெயராமன் உள்ளிட்டவர்கள், ஆர்.ஆர்.சபா செயலரை போனில் தொடர்பு கொண்டு, தங்களது வருத்தத்தைப் பதிவு செய்வதாகவும், இது குறித்து செயலருக்கு ஒரு கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக அவரைப் பார்த்திட நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, ஆர்.ஆர்.சபா செயலரும், இன்று மதியம் 3 மணிக்கு தன்னை வந்து பார்க்க நேரம் ஒதுக்கி அனுமதி கொடுத்தார்.

இதை அடுத்து அவர்கள் அனைவரும் மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவுக்குச் சென்றனர். இதனிடையே, டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்கான ஏற்பாட்டாளரான மும்பையைச் சேர்ந்த தேவிநாத் தத் என்ற பெண்மணியிடம் ஓமாம்புலியூர் ஜெயராமன் தொலைபேசியில் பேசி, தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். ஆனால், இந்து இயக்கங்களின் இத்தகைய செயல்கள், தங்களுக்கு விடுக்கப் படும் மிரட்டல் என்று அந்தப் பெண்மணி கூறியுள்ளார்.

இதனிடையே, இன்று 3 மணிக்கு ஆர்.ஆர்.சபாவுக்கு இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சென்ற போது, வாசலிலேயே காத்திருந்த போலீஸார், அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். எவ்வளவோ சொல்லியும், சபா செயலர் வரச் சொல்லியிருக்கிறார் என்றும், தாங்கள் அவரைத்தான் பார்க்கப் போகிறோம் என்றும் கூறியும், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். சபா செயலர் நடந்ததைக் கூறியும் போலீஸார் கேட்கவில்லை.

இந்த நேரத்தில், போலீஸார் இந்து இயக்கத்தினர் மீது மனிதத் தன்மையற்ற முறையில், சொல்லப் போனால் சற்று காட்டுமிராண்டித் தனமாகவே நடந்து கொண்டதாகக் கூறுகின்றனர் இந்து இயக்கத்தினர். இதன் பின்னர் மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளனர். சபா செயலர் புகார் கொடுக்கவில்லை. எவருமே புகார் கொடுக்கவில்லை. ஆனால், அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றது மனித உரிமை மீறல் என்று குமுறுகின்றனர் இந்து இயக்கத்தினர்.

இதனிடையே டி.எம்.கிருஷ்ணாவுக்காக வேலை செய்யும் மும்பையைச் சேர்ந்த தேவிநாத் தத்திடம் பேசிய போலீஸார் அவரிடம், தம்மை இந்து இயக்கத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாக ஒரு புகாரை எழுதி அனுப்பி வையுங்கள் என்று கோரியுள்ளனர்.

இந்நிலையில், இவற்றை எல்லாம் அறிந்து மனம் வெதும்பிய ஆர்.ஆர்.சபா செயலர், மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் முன்னதாக, டி.எம்.கிருஷ்ணா செய்தவற்றையும், அவருக்காக செயல்பட்டவர்கள் குறித்தும், தேவையற்ற சர்ச்சைகளால் கர்நாடக இசை மேடையின் புனிதத்துவத்தை சீரழித்தது குறித்தும், இவற்றுக்காக ஆர்.ஆர்.சபா வருத்தம் தெரிவிப்பதாகவும் மேடையில் பேசியுள்ளார்.

இதை அறிந்ததும், தேவிநாத் தத் தாம் புகாரை திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளார். இதன் பின்னர், வழக்கு எதுவும் பதியப் படாமல் இரவு 7 மணிக்குப் பின்னர் அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி ரவிக்குமார் கூறியபோது, அண்மைக் காலமாக காவல் துறையினர் இந்து இயக்கத்தினர் மீது கண்மூடித்தனமான அடக்குமுறையுடன் சற்று மோசமாகவே நடந்து கொள்வதாகவும், இது வருத்தம் தரும் விஷயம் என்றும் கூறினார். மேலும், ஜனநாயக ரீதியில் நமது கருத்தைத் தெரிவிப்பதும் பண்பாட்டுச் சிதைவுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதும் உரிமை என்றும், அந்த உரிமையில் போலீஸார் தலையிடுவது தற்போது அவர்களிடம் அதிகரித்து வரும் போக்காகத் தெரிகிறது என்றும் கூறினார்.

ஒருவேளை, டம்மி முதல்வர் என நினைத்து காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனரோ என்றும், ஒரு வலிமையான தலைமையின் கீழ் இல்லாத மனப்போக்குடன், மனம் போன போக்கில் போலீஸார் வேறு எவருக்கோ அடிமை வேலை செய்கின்றனரோ என்ற சந்தேகம் தங்களுக்கு வலுத்து வருவதாகவும் பரவலாக கருத்து தெரிவிக்கின்றனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.