காஞ்சி கலைச் சண்டை கடலூருக்கும் பரவிய சோகம்! பகவானையே பாகுபடுத்தும் பைத்தியங்கள்!

அறுவெறுப்பு.. அநாகரீகத்தின் உச்சம்! இவர்களெல்லாம் இறைவனுக்கு தொண்டு செய்பவர்களா என்று பக்தர்களை அதிர வைத்த அசிங்கமான காட்சியைக் கண்டு விக்கித்துப் போனார்கள் கடலூர் அருகில் உள்ள திருவயிந்திபுரம் மக்கள்!

இன்று மாசி மகம், பௌர்ணமி. பல்வேறு ஆலயங்களிலும் இன்று தீர்த்தவாரி களை கட்டுகிறது. காலையிலேயே கடற்கரை அருகில் இருக்கும் திருக்கோயில்களில் இருந்து பெருமான் திருமேனிகளை பல்லக்கில் எழுந்தருளச் செய்து, கடற்கரைப் பகுதியில் தீர்த்தவாரி கண்டு வருவது வழக்கம்.

இன்றும் அப்படித்தான்..! திருவஹீந்திரபுரம் திருக்கோயிலில் இருந்து தேவநாதப் பெருமான் பல்லக்கில் கடலூர் பகுதி கடற்கரைக்கு திருவீதியுலாவாக எழுந்தருளச் செய்யப் பட்டார். அப்போது எதிர் திசையில் வைணவ சமயத்தின் கடைசி ஆசார்யர் என்று போற்றப்படும் மணவாள மாமுனிகள் திருமேனியும் பல்லக்கில் எழுந்தருளப் பட்டது. தேவநாதப் பெருமாள் திருக்கோயில் வடகலைப் பிரிவைச் சேர்ந்த வைணவர்களால் பூஜை செய்யப் பட்டு வருகிறது. மணவாள மாமுனிகள் என்ற ஆசார்ய புருஷர், தென்கலை பிரிவு வைணவர்களால் பூஜிக்கப் பட்டு வருபவர்.

சாலையில் ஓர் இடத்தில் இந்த இரு கோஷ்டிகளும் நேருக்கு நேர் சந்திக்கும் போது, பெருமாள் திருமேனி மணவாள மாமுனிகளின் விக்கிரக திருமேனி இருக்கும் பல்லக்கின் பார்வைக்கு தெரிந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தற்காலிக திரையைப் போட்டு மூடி வந்ததாகக் கூறப் படுகிறது.

இதனால் அதிர்ச்சியுற்ற தென்கலை பிரிவினர், அந்தத் திரையைத் தட்டி விட்டதாகவும், மணவாள மாமுனிகள் என்ற ஆசார்யருக்கு பெருமாள் தரிசனம் இங்கே கிடைக்கட்டும் என்று சில நொடிகள் நிறுத்தியதாகவும், அதனால் இரு தரப்புக்கும் சிறிது வாக்குவாதம் எழுந்ததாகவும் தெரிகிறது. இது அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பெருமாள் திருமேனியில் வெயில் படாமல் இருக்க வேண்டும் என்று திரை போட்டு மூடிக் கொண்டு வந்ததை தென்கலையைச் சேர்ந்த ஓரிருவர் வேண்டுமென்றே பிடித்து இழுத்து விட்டார்கள் என்று வடகலை பிரிவினைச் சேர்ந்த சிலர் இந்தச் சம்பவத்துக்கு குறை கூறியுள்ளனர். இருப்பினும் இது வேண்டுமென்றே சொல்லப்படும் விஷயமில்லாத குற்றச்சாட்டு என்கின்றனர் தென்கலை பிரிவினைச் சேர்ந்தவர்கள். அந்த ஒரு நொடி நேரம் கூட வெயில் படாமலா இவர்கள் பாதுகாக்கிறார்கள்? ஏன் இந்த விஷமத்தனம் என்று கேள்வி எழுப்புகின்றனர்?

இறைவன் முன் அனைவரும் சமம் என்று கூறிக் கொண்டு, ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்களால் பக்தர்களின் மனம் புண்பட்டிருப்பது கண்கூடு. பெருமாள் திருக்கோயில்களில் ஆசாரியர் ராமானுசரின் ஆசார்ய மரபில் வந்த இரு பெரும் ஆசார்யர்களான தேசிகர் மற்றும் அவருக்குப் பின் வந்த மணவாள மாமுனிகள் இருவரையும் வைத்து, இரு கலையார்களுக்கு இடையே இப்படி வேறுபாடு பார்ப்பது, இது குறித்த விவரம் அறியாத சாதாரண பாமர பக்தர்களை பெரிதும் வருத்தத்தில் தள்ளியுள்ளது.

இவர்கள் என்ன படித்தும் பயன் என்ன என்றும், மனதில் குறைபாடு உள்ள பைத்தியங்களான இவர்கள் எல்லாம் நமக்கு நல்ல வழி சொல்லப் போகிறவர்களா என்றும் சாதாரண பக்தர்கள் எண்ணுவதை இவர்கள் நியாயப் படுத்தியிருக்கிறார்கள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...