கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு
தேவையான பொருள்கள்:
பிஞ்சுக் கத்தரிக்காய்-350 கிராம்.
பச்சை மிளகாய் 5 அல்லது 6
புளி ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு
உப்பு-1 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு அரை கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம்,கறிவேப்பிலை மஞ்சள் பொடி
இரண்டு சிமிட்டாக்கள்.
எண்ணெய் 2 அல்லது 3 டீஸ்பூன்.
கத்தரிக்காயை நீளவாட்டத்தில் மெல்லியதாக நறுக்கவும்.. பச்சை மிளகாயையும் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக விட்டுக் கொள்ளவும். கற்சட்டியில் அல்லது பாத்திரத்தில் 2 டீஸ்பூன்கள் எண்ணெயை விட்டு, நறுக்கி வைத்துள்ள காயையும், பச்சை மிளகாயையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
புளியைக் கரைத்துவிட்டு, உப்பைப் போட்டு, மஞ்சள் பொடியையும் போடவும். “தான்” நன்றாக வெந்ததும் வெந்த துவரம் பருப்பைக் கொட்டி, சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து கொள்ளாமலிருந்தால் அரை டீஸ்பூன் அரிசி மாவைக் கரைத்துவிட்டு, கொதிக்கவிடவும். சேர்ந்து கொதித்ததும் பெருங்காயத்தைக் கரைத்துவிட்டு, கறிவேப்பிலையைக் கிள்ளி போடவும்.
எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றைத் தாளித்து போடவும்.