குமரி மாவட்டத்தில் மகளை கொலை செய்த தம்பதியர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் இன்று இச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி ஒற்றைத் தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (51). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரோகிணி பிரியா (45). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு அர்ச்சனா ( 13) என்ற மகள் இருந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அர்ச்சனா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். ரோகிணி பிரியா, ரமேஷ் இருவரும் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகளை கொலை செய்து விட்டு ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில் வாழ விருப்பமில்லாததால் உலகத்தை விட்டு செல்வதாக கூறி இருந்தனர். மேலும் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எங்களது நிலத்தை எனது மனைவியின் சகோதரிக்கு உரிமை கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.
மேலும் 3 பேரின் இறுதி சடங்கிற்கு செலவுக்கான பணத்தையும் வைத்திருந்தனர். மூன்று சாவு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட ரோகினி பிரியா கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்காக உறவின ர்க ளிடம் பணம் வாங்கி உள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு முன்பாக இவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
ரமேஷ் வேலை பார்த்த வங்கிக்கு சென்று போலீசார் இன்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட ரோகிணி பிரியா, ரமேஷ், அர்ச்சணாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். கொலை செய்யப்பட்ட மகளுக்கு தாங்களாகவே இறுதி சடங்கு செய்து விட்டு பெற்றோர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.