சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ் வழக்கில், கல்லூரி மாணவன் உள்பட 3 பேரை பிடிக்க, போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மாணவனின் உறவினர்கள் 5 பேரை பிடித்துசென்று விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த கூடமலையை சேர்ந்தவர் விவசாயி முருகேசன்(49). இவரது மனைவி ஜெயலட்சுமி(42). மகள்கள் நந்தினி(21), ரோஜா (19). 18 வயதில் மகனும் உள்ளார். முருகேசன், கூடமலை-கடம்பூர் சாலையில், சின்னசாமி என்பவரின் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பண்ணையம் செய்து வருகிறார். முருகேசன் மூத்த மகள் நந்தினிக்கு, வரும் 13ம் தேதி திருமணம் நிச்சயம் செய்துள்ளார். இளையமகள் ரோஜா, தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
ஆத்தூர் தாண்டவராயபுரம் நீலகிருஷ்ணன் மகன் சாமிதுரை(22). இவர் சென்னையில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கூடமலையில் உள்ள பெரியப்பா சின்னதுரை என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 30ம் தேதி கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்த ரோஜாவிடம், காதலிப்பதாக கூறிய சாமிதுரை, அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ரோஜா, அவரிடம் இருந்து தப்பித்து, கல்லூரிக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர், சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களுடன், சின்னதுரை வீட்டிற்கு சென்று புகார் தெரிவித்தனர். சாமிதுரை மீது போலீசில் புகார் தெரிவிக்க உள்ளதாக முருகேசன் தெரிவித்தார். அப்போது, இனிமேல் சாமிதுரை எவ்வித பிரச்னையும் செய்ய மாட்டான் என்று அவனது பெரியப்பா சின்னதுரை உறுதியளித்ததால், முருகேசன் மற்றும் உறவினர்கள், போலீசில் புகார் செய்யாமல் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
மேலும், இனிமேல் இங்கு இருக்க வேண்டாம் என சாமிதுரையை, சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் நந்தினி மற்றும் ரோஜா ஆகியோர் மட்டும் இருந்த போது அங்கு டீசல் கேனுடன் வந்த சாமிதுரை, நீ என்னை காதலிக்கவில்லை என்றால் டீசல் ஊற்றி உன்னை கொளுத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவரது அக்கா நந்தினி, வெளியே சென்றிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே சாமிதுரை, ரோஜா மீது டீசலை ஊற்றியுள்ளார், இதை தடுக்க வந்த நந்தினி மீதும் டீசலை ஊற்றினார். பின்னர் தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றபோது, நந்தினி உடனடியாக ரோஜாவுடன் வயலில் இருந்த சேற்றில் தள்ளி இருவரும் நனைந்து கொண்டனர். இதனால் சாமிதுரையால் அவர்கள் மீது தீ வைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவை கீழே தள்ளி, அவரது கழுத்தில் கால் வைத்து மிதித்துள்ளார். பிறகு அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து முகத்தில் போட்டார். இதில் முகம் நசுங்கிய ரோஜா, ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து மயங்கினார். அப்போது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதைப்பார்த்த சாமிதுரை, அருகில் இருந்த மலைமீது ஏறி ஓடிவிட்டான். அவனுடன் வந்த அவனது நண்பர்கள் இரண்டு பேரும் ஓடிவிட்டனர்.
அலறியடித்து கொண்டு வந்த பெற்றோர்கள் ரோஜாவை மீட்டு கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த செவிலியர் ரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொ) முருகேசன் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து, ரோஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிறகு முருகேசன் தோட்டத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்ேபாது சாமிதுரை கொண்டு வந்திருந்த டீசல் கேன், கொலைக்கு பயன்படுத்திய கருங்கல் மற்றும் அவனது செருப்பு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
நந்தினி கொடுத்த புகாரின் பேரில், சாமிதுரை மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது கெங்கவல்லி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சாமிதுரையின் பெரியப்பா சின்னதுரை, அவரது மனைவி சுதா, சுதாவின் அக்கா ராஜாம்பாள், மகன்கள் கோபிநாத், வினோத் ஆகிய 5 பேரை பிடித்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள், சேலம் மாவட்ட எஸ்பியின் தனி டீம் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தப்பியோடிய சாமிதுரை உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை குறித்து ரோஜா தாயார் ஜெயலட்சுமி கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சாமிதுரை உள்ளிட்ட 3 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும். கூடமலை கிராமத்தில் முக்கியஸ்தர்கள் என கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீதும்,முழுமையாக விசாரணை மேற்கொண்டு,குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று இனி எந்த பெண்ணுக்கும் நடைபெறக் கூடாது’ என்றார்.
சடலத்தை வாங்க மறுத்து வாக்குவாதத்தால் பரபரப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் கூறுகையில், ‘‘ரோஜா வீட்டில் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்டு சாமிதுரையும், அவரோடு வந்தவர்களும் ரகளையில் ஈடுபட்டு இச்செயலை செய்துள்ளனர். காவல்துறையினர் கொலை செய்தவர்களையும்,அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும். இது போன்ற கொடூர சம்பவம் எந்த பெண்ணிற்கும் நடக்கக் கூடாது,’’ என்றனர். தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கெங்கவல்லி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து நேற்று மாலையில் ரோஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
கொலையாளியை தேடுவதில் மெத்தனம்
மாணவியை கொடூரமாக கொலை செய்த மாணவர் சாமிதுரை அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவனை கைது செய்வதில் போலீசார் மெத்தனமாக இருப்பதாக மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று ஊருக்குள் வந்துவிட்டு என்னை யாரும் பிடிக்க முடியாது நான் மலை மேல்தான் இருப்பேன் என்று கூறியதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். மாணவனுடன் வந்த அவனது நண்பர்களை இவ்வழக்கில் இருந்து காப்பாற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. தலைமறைவான மாணவன் விபரீத முடிவு ஏதும் எடுக்கும் முன்பாக அவனை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர்.
