
தொழில்நகரம் ராஜபாளையத்தில்
நடந்த இரட்டை கொலை சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்( 75). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி குருபாக்கியம்(68). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் கோவை மற்றும் சென்னையில் உள்ளனர். ராஜகோபால் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் லட்சக்கணக்கில் பலருக்கு கடன் கொடுத்து வட்டி வாங்கி வந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராஜகோபாலும் அவரது மனைவியும் நேற்று வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. அவர்களின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் ராஜகோபாலும், குருபாக்கியமும் பிணமாக கிடந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன்-மனைவி இருவரது கழுத்திலும் காயம் உள்ளது. எனவே அவர்களை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதி முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் இந்த கொலை நடந்துள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை. மேலும் கொள்ளையர்கள் கொலையில் துப்புதுலங்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடிகளை தூவி உள்ளதால் கொலை குறித்து நம்பகமான துப்புகிடைக்காமல் போலிசாருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை பற்றி தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சபரிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கண்ணகாணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொலையாளிகள் உருவம் பதிவாகி இருந்தால் அதன் மூலம் குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்று போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கணவன்-மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ராஜகோபால் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அவரிடம் நகை-பணம் அதிகமாக இருக்கும் அதை கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்தால் இந்த கொலைகள் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
