விருதுநகர் அருகே இன்று ஓட்டுநரை அடித்துக் கொன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் விக்னேஷ்வரன் (25). இவர், சின்ன வாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும் தாதம்பட்டியைச் சேர்ந்த மதன்குமார் என்பவக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விக்னேஷ்வரன் மோட்டார் சைக்கிளில் செல்வக்குமார் என்பவருடன் சின்ன வாடியூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கன்னிசேரி புதூருக்கு வந்த போது, அங்கு வந்த மதன்குமார், அவரது நண்பர்கள் மகாராஜா, டி.காமராஜபுரத்தைச் சேர்ந்த கருப்புராஜா, துலுக்கப்பட்டியைச் சேர்ந்த குணா ஆகியோர் விக்னேஷ்வரனிடம் தகராறு செய்தார்களாம். பின்பு, விக்னேஷ்வரன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், விக்னேஷ்வரன் உடல்நிலை மோசமானது. எனவே, அவரது உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து, கொலை வெறித் தாக்குதல் நடத்திய 4 பேரையும் தேடி வருகின்றனர்.