கணவன், மனைவி, அவர்களது மகள் என மூவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ரவிசங்கர் கூறியதாவது: “ இந்த சம்பவம் கடம்டோலி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் அர்ஜூன் தெனுவா (43), அவரது மனைவி ஃபிர்னி தெனுவா (40 ) அவர்களது மகள் சஞ்சனா (19 ) என்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் இன்று (அக்டோபர் 10) எங்களுக்கு தகவல் அளித்தனர்.
இந்த மூவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தெனுவாவிற்கு சிலருடன் விரோதம் இருப்பது தெரிய வந்தது. அதனால், அவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளோம். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.” என்றார்.
