டெல்லியில் கொன்று 35 துண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் தேடி வருகிறார்கள்.தினமும் ஷ்ரத்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குற்றவாளி இந்த நம்பிக்கை மில் தலையை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.
கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்ட 26 வயது ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த குற்றவாளி அஃப்தாப் சொன்ன தகவல்களின் அடிப்படையில், ஷ்ரத்தாவின் தலையை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.அதாவது, உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டியிருந்தாலும், ஷ்ரத்தாவின் தலையை,அஃப்தாப்-ஆல் வெட்டியிருக்க முடியாது என்று நம்பும் காவல்துறையினர், அவரது தலையை மீட்டால் மட்டுமே, குற்றவாளியின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள்.
சத்தர்பூர் வனப்பகுதிக்கு, குற்றவாளி அஃப்தாப்பை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர் எங்கெல்லாம் உடல் பாகங்களை வீசியதாகக் கூறினாரோ அங்கெல்லாம் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பல மணி நேரம் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் சில உடல் பாகங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.அஃப்தாப், பயன்படுத்திய வேறு பல டேட்டிங் செயலிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள், அவருக்கு வேறு பெண்களுடனும் தொடர்பிருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை செய்த பிறகு, அஃப்தாப், மருத்துவமனைக்குச் சென்று கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், கொலை நடந்த வீட்டில், துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக, போரிக் ஆசிட் பவுடர் மற்றும் சில ரசாயனங்களைப் பயன்படுத்தி வீட்டை சுத்தப்படுத்தியிருப்பதும் தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.கொலைக் குற்றவாளிக்கு வீடு வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தவரிடமும், குற்றவாளி மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நெருங்கிய நண்பர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அஃப்தாப், அடிக்கடி தனக்கு ஷ்ரத்தாவின் நினைவு வரும் என்றும், அப்போதெல்லாம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஷ்ரத்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பல்வேறு இடங்களில் வீசிய அஃப்தாப், அவரது தலையை கடைசியாகத்தான் வீசியதாகவும், கடைசி வரை அவரது முகத்தை தினமும் பார்த்துக் கொண்டே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை, தேடுதல் வேட்டையில், நல்வாய்ப்பாக ஷ்ரத்தாவின் தலை அல்லது மண்டை ஓடு கிடைக்கும்பட்சத்தில், ஸ்கல் சூப்பர்இம்போசிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஷ்ரத்தாவின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.தற்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, தந்தை விகாஸ் வால்கரின் டிஎன்ஏ பரிசோதனை மட்டுமே. தற்போது வரை கிடைத்திருக்கும் எலும்புகளை வைத்து, டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இன்னமும் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.
எப்படி இருக்கும் டிஜிட்டல் ஸ்கல் சூப்பர்இம்போசிஷன் தொழில்நுட்பம்?
கிடைத்திருக்கும் மண்டை ஓட்டை டிஜிட்டல் முறையில் பதிவேற்றி, அந்த மண்டை ஓட்டை தொழில்நுட்பத்தின் உதவியோடு முக அமைப்பைக் கொடுத்து, யாருடைய மண்டை ஓடு என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தின் பழைய மாதிரியை அடிப்படையாக வைத்துத்தான் ஹிட்லரின் உடல் பாகங்களை வைத்து அவரது உடல்பாகம் என்பது நிரூபிக்கப்பட்டுளள்து.
அண்மையில், தனது தாயால் கொலை செய்யப்பட்ட ஷீனா போராவின் மண்டை ஓட்டையும், இதுபோன்ற தொழில்நுட்பத்தின் உதவியோடுதான் கண்டுபிடித்தனர்.அதிலும் குறிப்பாக, மண்டை ஓட்டின் தாடை வரிசையைப் பயன்படுத்தி, ஷீனா போராவின் பல் வரிசைகள் தெரியும்படியான புகைப்படத்தையும் கொண்டு, தனியா பல் வரிசை இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, அதுவும் ஒத்துப்போனதன் அடிப்படையில், அந்த மண்டை ஓடு ஷீனா போராவினுடையது என்பத உறுதி செய்யப்பட்டது கூடுதல் தகவலாக உள்ளது.