
திருச்சி அருகே தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் வசித்து வருபவர் தொழிலதிபர் நேதாஜி. இவரது தம்பி தேவேந்திரன். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். தேவேந்திரனின் மகன் நிச்சயதார்த்த விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் திருச்சிக்கு வந்து விட்டனர். இந்நிலையில், நேதாஜியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக, டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.