ஏப்ரல் 14, 2021, 1:45 காலை புதன்கிழமை
More

  அண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …!

  இலவசம் கொடுத்து… ஏமாற்றி ஓட்டுகளை தன் வசம்… மாற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள்… சிந்திப்போம்..!! செயல்படுவோம்.

  annadurai
  annadurai

  கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் சட்டமன்ற தேர்தல் நேரங்களில் இலவச அறிவிப்புகள் தமிழக வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் அதிகமாகவே வெளியாகின்றன. இலவச அறிவிப்புகளுக்கு தமிழகத்தில் பஞ்சம் இல்லை என்றாலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் போக்கு திருமங்கலம் இடைத் தேர்தலின்போது நடைபெற்றதாக கூறப்படுவது உண்டு

  இலவச அறிவிப்புகளில் மக்களைக் கவர்ந்து தங்களது வளமான வாழ்க்கைக்கு வழி தேடிக்கொண்டது திமுக .. குறிப்பாக கருணாநிதி..! வீட்டுக்கு வீடு கலர் டிவி இலவசம் என்று தொடங்கி கலைஞர் டிவி இலவசமாக அரசின் கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தார் கருணாநிதி ஆனால் அதன் மூலம் தங்களது குடும்ப தொழிலான கேபிள்டிவி தொழிலுக்கு வாடிக்கையாளர்களை பெருமளவில் உருவாக்கிக் கொண்டார்… எஸ்சிவி என்ற சுமங்கலி கேபிள் விஷன் மூலம் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியது… அதன் மூலம் கருணாநிதி குடும்பம் பெரும் வருவாய் ஈட்டியது இத்தகைய நுட்பமான இலவச அறிவிப்பை கருணாநிதியைத் தவிர வேறு எவராலும் செய்திருக்க முடியாது.

  ஜெயலலிதா பின்னாளில் அம்மா மிக்சி அம்மா கிரைண்டர் மின்விசிறி என்றெல்லாம் கொடுத்தார்.. அவை இல்லத்தரசிகளின் உண்மையான வேலைப்பளுவை குறைத்தது.. இதையடுத்து இலவச அறிவிப்புகள் இல்லாமல் தேர்தலை சந்திப்பது இயலாது என்ற சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டது.

  இப்போதும் இலவச அறிவிப்புகள் இந்த தேர்தல் களத்தை ஆட்டிப்படைக்கின்றன. பொங்கல் திருநாளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பணம் இலவச பொருட்கள் கொடுத்து பழக்கப்படுத்தி இப்போது பணத்தை மாதந்தோறும் இலவசமாக கொடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது திராவிட அரசியலின் இலவச அறிவிப்பு!

  annaadurai

  இந்த முறை கொரோனா கால வேலைவாய்ப்பின்மை வறுமையான சூழல் காரணமாக 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இலவசமாக பணம் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட்டது. அதுவே ஒரு முன்னுதாரணம் ஆகி அடுத்து தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் மாதந்தோறும் ரூபாய் 1000 பெண்களுக்கு வழங்குவதாக திமுக திடீர் அறிவிப்பை மேற்கொண்டது… அது தாங்கள் அறிவிப்பதாக இருந்தது என்றும் அதை முந்திக்கண்டு ஸ்டாலின் அறிவித்து விட்டார் என்றும் முழங்கிய எடப்பாடி பழனிசாமி, மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார் மேலும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம் என்றும் பெண்களை கவரும் அறிவிப்பினை வெளியிட்டார்..

  பெண்களை மையப்படுத்தி இவ்வாறு பணம் கொடுப்பதை சமூக வலைதளங்களில் பலரும் சற்று கேவலமாக விமர்சிக்கத் தொடங்கினர்.

  மத்திய அரசும் கூட இலவச அறிவிப்புகளை விடத்தான் செய்தது‌. ஆனால் அவை திட்டங்கள் ஆகவே இருந்தன. அனைவருக்கும் வீடு… இலவச கழிப்பிட வசதி… எரிவாயு இணைப்பு அனைவருக்கும் வங்கி கணக்கு இப்படியாக திட்டங்களை முன்னிறுத்தி ஏங்குவது தவறல்ல ஆனால் தனிப்பட்ட வகையில் அரசு கஜானாவில் இருந்து எடுத்து வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்குவது போல் பணத்தைக் கொடுப்பது தவறு என்கின்றனர் வாக்காளர்கள்

  ஏன் இந்த இலவசம்

  1967 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், அன்றைய தி.மு.க. முதல்வர் வேட்பாளராக இருந்த, அண்ணாதுரை அவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், “ஒரு படி அரிசி நிச்சயம், மூன்று படி லட்சியம்” என்ற ஒரு அறைகூவல் விட்டார். அதனால் கவரப் பட்ட தமிழக மக்கள், பெருவாரியான வாக்கு அளித்து, தி.மு.க.வை வெற்றி பெற வைத்தனர்.

  ஆட்சி அமைத்தவுடன், மக்களுக்கு, ஒரு ரூபாய்க்கு அரிசியை தந்து, மக்களின் மனம் கவர்ந்தனர். அன்று முதல், தற்போது 2021ல் நடைபெற இருக்கும், சட்டமன்ற தேர்தல் வரை, தமிழகத்தில் நடக்கும், எல்லா தேர்தல்களிலும், “இலவசங்கள்” பெரும் முக்கிய பங்கு வகிக்கின்றது, என்றால், அது மிகையாகாது.

  karunanidhi samadhi
  karunanidhi samadhi

  2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் :

  2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், “இலவச வண்ண தொலைக்காட்சி (Colour TV), ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய், நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம், இலவச சமையல் எரிவாயு, வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 300 ரூபாய், கர்பமாக உள்ள தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு தலா ஆயிரம் ரூபாய்… என பல இலவசங்களை, தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.

  திமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் அவர்கள், “இந்த தேர்தலின் முக்கிய ஹீரோவே, திமுக தேர்தல் அறிக்கை தான்”, என கூறினார்.

  2011 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் :

  2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தது அதிமுக. அதனால், திமுகவை போல், இலவசங்களை வாரி வழங்க தீர்மானித்தது.

  திமுக, ரேஷன் கடைகளில், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி என்றவுடன், அதிமுக, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், 20 கிலோ இலவச அரிசி என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது.

  jayalalithaa 1 1
  jayalalithaa 1 1

  தமிழக கடன் தொகை

  நகை கடன் தள்ளுபடி, கூட்டுறவு சங்கம் கடன் தள்ளுபடி போல பல கடன் தள்ளுபடிகள் மூலம், தமிழகத்தின் நிதி சுமை பெருமளவில் பாதிக்கப்படும். 2011 – 12 ஆம் ஆண்டு தமிழகத்தின் கடன், 1.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, 2021 – 22 ஆம் ஆண்டு, 5.7 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் ஏற்படும், கடும் நிதிச் சுமை, தமிழக மக்கள் அனைவரின் தலையிலும் விழும், என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்…
  இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்…
  என்ற எண்ணம் நிச்சயமாக நம் அனைவரின் மனதிலும் இருக்கும். உண்மையிலேயே, பணம் கொடுத்து பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, உதவி செய்யலாம். அதில், யாரும், எந்தத் தவறும், கூற முடியாது. ஆனால், தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது, மிகுந்த அதிர்ச்சி ஏற்படுகின்றது.

  தமிழக அரசு தைப் பொங்கல் அன்று இலவசமாக 2000 ரூபாய் தருவதாக, அறிவித்த உடன், நிறைய பேர் வாங்க, கூட்டமாக கடைகளில் நின்று இருந்தனர், அப்போது, அந்த வழியே சென்ற போது, பார்த்த சம்பவம், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் காரில் இருந்து இறங்கி வந்து, வரிசையில் நின்று, பணத்தைப் பெற்றுக் கொண்டு, திரும்பவும் அவருடைய சொந்த காரில் ஏறி சென்றார்.

  காலுக்கு செருப்பு வாங்க கூட, வசதி இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால், சொந்தமான காரில் செல்லும் வசதி படைத்தவர்களுக்கு, அதே இலவசங்களை வாரி வழங்க வேண்டுமா.? என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

  எல்லாம் அரசியலா..?
  ஐந்து வருடம் நம்மை ஆட்சி செய்ய இருக்கும் ஆட்சியாளர்கள், நம்மிடம் எதிர்பார்ப்பது, நமது ஓட்டுகளை மட்டும் தான். அந்த ஓட்டு மட்டுமே, நமக்கு ஆயுதமாகும். அந்த ஓட்டின் மூலம், நல்ல தரமான சாலை, குடிப்பதற்கு நல்ல தரமான குடிநீர், சுகாதார உயர் தரமான மருத்துவமனைகள், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பள்ளிக் கூடங்கள், நல்ல போக்குவரத்து வசதிகள், நல்ல முறையில் பராமரிக்கப்படும் கழிவு நீர் வடிகால் (Drainage), போன்ற மக்களுக்கு அவசியமானவற்றை கேட்டுப் பெற வேண்டும்.

  இலவசமாக தரும் பொருட்களை அரசு நிறுத்தினாலே, பல விலைகள் குறையும். அதன் மூலம், மக்களுக்கு பெரும் பொருள் செலவு மிச்சமாகும். ஓட்டுக்கு பணம் வாங்குதன் மூலமாகவும், இலவச பொருட்களுக்கு மயங்கி, வாக்கு அளிப்பதன் மூலமாகவும், கேள்வி கேட்கும் நிலையில் இருந்து, நாம் தவறி விடுகின்றோம். கேட்டு பெற நிலையில் இருந்து, எது கிடைத்ததோ அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு, நாம் தள்ளப்படுகிறோம்?

  நமது நாட்டின் கடன் சுமை, ஏற ஏற, அதற்கு உண்டான விலையையும், நாமே வரி போன்ற பல வழிகளில், அரசுக்கு கொடுத்தாக வேண்டும். இலவசங்களை வசதி படைத்தவர்களுக்கு தராமல் இருந்தாலே, நமது நாட்டின் கடன் சுமையும், பணவீக்கமும் பெரும் அளவில் குறையும்.

  வாக்கு என்பது, நமது நாடு, நமக்கு அளித்த மிகப் பெரும் கௌரவம். அந்த கௌரவத்தை முறையாக பயன் படுத்தி, சரியான நபர்களை தேர்ந்து எடுக்க வேண்டியது, நமது அனைவரின் கடமையாகும்.

  இலவசம் கொடுத்து…
  ஏமாற்றி ஓட்டுகளை தன் வசம்…
  மாற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள்…
  சிந்திப்போம்..!! செயல்படுவோம்..!!!

  • அ. ஓம்பிரகாஷ் (Centre for South Indian Studies, Chennai) தரவுகளுடன்…

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  3 × three =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »