June 23, 2021, 10:46 pm
More

  ARTICLE - SECTIONS

  ஆத்தா.. இன்னிக்கு ரேசன் கடையில என்ன போடுதாவ..?! ஆங்.. கொரோனா போடுதாவ..!!

  நாட்டுல நடக்குறதை நாங்க உங்க கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம்! அது மட்டுமே முன்களப் பணியாளரான எங்கள் வேலை

  rationshop crowd
  rationshop crowd

  ஏ… ஆத்தா… ரேசன் கடயில என்ன போடுதாவ..?! 
  ஆங்க்… சண்ட போடுதாவோ..! 
  – இது பழைய கடி –

  ஏ…ஆத்தா… ரேசன் கடையில என்ன போடுதாவோ..? 
  ஆங்… கொரோனா போடுதாவ…! 
  – புது யதார்த்தம் –

  இப்படிச் சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழக அரசின் நியாய விலைக்கடைகளில் இன்று தொடங்கப் பட்டிருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திமுக., அரசின் திட்டத்தின் தொடக்கம் இன்று. இதற்காக வீடுவீடாக டோக்கன்கள் கொடுக்கப் பட்டு, இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களை ரேசன் கடைகளுக்கு வரச்சொல்லி, கொடுக்கிறார்கள்! 

  ஆனால்… கொரோனா நிவாரணமாக அறிவித்த இந்த ரூ.2 ஆயிரமே கூட, கொரோனோ தொற்றுக்கு வழிவகுத்து, பலரையும் முடக்கிப் போட்டுவிடுமோ என்ற அச்சம் இப்போது மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 

  பயோமெட்ரிக் முறை இல்லை…ஸ்மார்ட் கார்டு வாங்கி, பதிவேட்டில் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆக… யார் வேண்டுமானாலும் போய், ஸ்மார்ட் கார்டைக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்ளலாம்…இதற்கு கார்டுதாரர் / பெயர் உள்ளவர் நேரடியாக வர வேண்டிய தேவையில்லை… எனவே இது முறைகேட்டுக்கு வழிவகுக்கிறது என்ற கருத்து பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 

  இதற்கு பதிலாக, சானிடைசர் உபயோகித்து, அனைவர் கைகளிலும் தெளித்து  விரல் ரேகை வைக்கச் சொன்னால் … சரியாக இருந்திருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்தது. முன்னதாக, கொரோனா தொற்றுக் காலம் என்பதால், பயோமெட்ரிக் முறையில்  ஒரே கைரேகை இயந்திரத்தில் பலரும் கைகளை வைத்தால், அதன் மூலம் கொரோனா பரவும் என்பதால், கைரேகை இயந்திரத்தை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப் பட்டது. 

  அதன்படி, அரசு, பயோமெட்ரிக் முறை கட்டாயம் இல்லை என்று அறிவித்து, வழங்கத் தொடங்கியிருப்பது, பலவிதங்களிலும் கட்சிக்காரர்கள் மூலமான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் பொதுமக்கள் பலர். காரணம், இந்த டோக்கன்களைக் கொண்டு கொடுத்து, முகம் காட்டிக் கொண்டவர்கள் உள்ளூர் திமுக.,வினரே! 

  எனவே இதில் எவ்ளோ… எவன்லாம் கொள்ளையடிக்கப் போறானோ… என்ற அச்சவுணர்வுடன் கூடிய விமர்சனத்தையும் பொதுமக்கள் முன்வைப்பதை காதால் கேட்கவே முடிகிறது.  

  krishnasamy dr
  krishnasamy dr

  இவற்றைக் கண்டு விட்டு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார் இப்படி… 

  முதல்வர் அவர்களே, ரேஷன் கடைகளில் கூட்டங்களை கூட்டாதீர்கள்! கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவுகிறது; ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது; இன்று முதல் அது கடுமையும் ஆக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில் கொரோனா நிவாரண நிதிகளை கூட்டம் கூட்டி ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்தலாம். எல்லாம் நிவாரணங்களும் வீடுகளுக்கு நேரடியாக சென்றடையட்டும்…. என்று குறிப்பிட்டிருக்கிறார். 

  arjun sampath
  arjun sampath

  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத்தின் கோரிக்கை இது…

  வேண்டாம் இந்த விளம்பர மோகம்! வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு! ரேஷன் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரானா நோய் பரவும் அபாயம்! தமிழக அரசே! மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே! நரேந்திர மோடி பாணியை பின்பற்றுங்கள்!ரேஷன் கடைகளில் வழங்கும் ரூபாய் 2000 த்தை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வையுங்கள்!

  பல்லாயிரம் கோடி ரூபாய்களை எந்த வித இடைத்தரகர்கள், மற்றும் அரசியல் கட்சியினர்‌ இல்லாமல் விவசாயிகளின்‌ வங்கிக்கணக்கில் நேரடியாக அனுப்பி விட்டார் பாரதப் பிரதமர் திரு மோடி ஜி அவர்கள். ஆனால் மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு சார்பில் குரானா நிவாரண நிதியாக ரூ‌2000 மக்களுக்கு கொடுப்பதற்கு தி.மு.க கொடி கட்டி ரேஷன் கடைகளில் பணம் கொடுக்கின்றார்கள்.

  இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி போட பாரதப் பிரதமரின் படத்தோடு பதிவு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடுநிலைகளும், மீடியாக்களும், பத்திரிக்கைகளும் எங்கே போயின?!

  சமூக அக்கறையுள்ள ஊடகவியலாளர்களே! நடுநிலையாளர்களே!
  உடனடியாக தமிழக அரசுக்கு இந்த ஆலோசனையை சொல்லுங்கள். நடவடிக்கை எடுங்கள்! … என்கிறார்.

   இது நியாயமான கோரிக்கையும் கூட! உண்மையில், கொரோனாவுக்காக முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள், கடுமையான நடவடிக்கை என்றெல்லாம் அனுதினமும் அறிக்கை விடுபவர்கள், நிச்சயம் இதைக் கருத்தில் கொண்டிருப்பார்கள். ஆனால், பத்து வருட காலத்துக்குப் பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் திமுக., உடன்பிறப்புகள், இதையெல்லாம் கவனிக்கவா போகிறார்கள்.?  

  rationa shop madurai
  திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு நியாய விலை கடையில் தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியை கோ.தளபதி எம்.எல்.ஏ.வழங்கியபோது எடுத்த படம். அருகில் தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி, துணை செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம் உள்பட பலர் உள்ளனர்

  அவ்ளோ அறிவு இருந்தா வீட்டுக்கு வீடு டோக்கன் குடுக்கறதுக்கு பதிலா ரூபாயாவே கொடுத்திருப்பாங்களே!. டோக்கன் வாங்க ஒரு வாட்டி அப்பறம் அதைக்காட்டி ரூபாய் வாங்க ஒரு வாட்டினு யாராவது அலைய விடுவார்களா? அதுவும்  கடுமையான சைனா வைரஸ் காலத்துல… என்ற கருத்துகளை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. 

  முதலில் வீடு வீடா வந்து டோக்கன் கொடுப்பாங்களாம்! அதுக்கு ரூவாயாவே கொடுக்கலாம். டோக்கன் கொடுப்பது ஒரு வேலை… ரேஷன் கடை போய் கூட்டம் போடுவது ரெண்டாம் வேலை… அவங்க ஆள் வைத்து பணம் பட்டுவாடா பண்ணுவது… என ஒரு வேலைக்கு மூணு வேலை என்று கருத்திடுகிறார்கள் சிலர். 

  எதற்காக கடைக்கு வர வைக்கிறார்கள்?! அதுவும் வெறும் 4 ஐநூறு ரூவா நோட்டுத்தாளை வாங்கி பையில் போட்டுக் கொண்டு அவர்கள் நகர்வதற்காக இவ்வளவு மெனக்கெட்டு அனைவரையும் கூட வைக்க வேண்டுமா?! அனைவரது வங்கிக் கணக்கிலும் பணத்தை எளிமையாக சேர்ப்பதே, கொரோனா பரவாமல் இருக்க வழி என்று முதலமைச்சருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்! 

  rationshop2
  rationshop2

  அட எங்க நோக்கமே அதான் சார்.. அல்லாங்காட்டி நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்ப மாட்டோமா!? எங்க நோக்கத்தையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே! … என்று ஜாம்பஜார் ஜக்கு பாணியில் நம்மிடமே கேள்வி எழுப்புகிறார் ஒருவர்! 

  rationshop1
  rationshop1

  கொடுக்குறது மக்கள் பணம்… என்னமோ கட்சியிலேர்ந்து மக்களுக்கு இலவசமா கொடுக்குறா மாதிரி… பில்டப்பு… அதுல இம்மாம் பெரிசுல பேனர் வேற… இந்த பேனர் வைக்கிற காசுல… நாலு பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமா வாங்கிக்  கொடுத்து, நாலு உசிர காப்பாத்தலாம்…. போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்… இதுல ஆறு மாசத்துக்கு விமர்சனமே செய்யக் கூடாதாம்! என்று அலுத்துக் கொள்கிறார் ஒருவர்.

  என்னவோ போங்க… நாட்டுல நடக்குறதை நாங்க உங்க கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம்! அது மட்டுமே முன்களப் பணியாளரான எங்கள் வேலை! சுளுக்கு எடுப்பது எங்கள் வேலை அல்ல!!!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-