To Read it in other Indian languages…

Home தலையங்கம் புனித நதிகளைத் தூய்மைப் படுத்துவது… அடுத்த வேலை!

புனித நதிகளைத் தூய்மைப் படுத்துவது… அடுத்த வேலை!

வெறும் கட்டடங்களாக அல்லாமல் வரலாற்று, தார்மீக ஆதார நினைவிடங்களாக அவற்றை ஸ்திரமான நிர்மாணங்களாக மாற்றியுள்ளது அற்புதமான செயல்

pmmodiji in ayodhya - Dhinasari Tamil

கையோடு கையாக இந்த வேலைகளும் நடக்க வேண்டும்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

பாரதிய வரலாற்றுக்கும் கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் சிரத்தைக்கும் நிலையங்களாக இருப்பவை நம் கோவில்கள். இமயம் முதல் குமரி வரை  எண்ணிலடங்கா பழம் பெரும் கோயில்கள் உள்ளன. கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகர்கள் தரிசித்துச் செல்லும் கலைச் செல்வங்களாக இவை உள்ளன. நாட்டின் புகழையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் இடங்களாக இவற்றை அடையாளம் கண்டு, அரசாங்கமும் பொதுமக்களின் அமைப்புகளும் குல, மதங்களுக்கு அப்பாற்பட்டு காப்பாற்றிக் கொள்ள வேண்டியவை இவை. தேவை ஏற்படும் இடங்களில் புனரமைப்பு பணிகளையும் செய்ய வேண்டும்.  

இந்தப் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு பாரத அரசாங்கம் கைகொண்டு நடத்தி வருவது நாட்டின் மீது கௌரவம் உள்ளவரனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுகிறது. அயோத்தி ராமர் கோயில், கேதார்நாத் புனரமைப்பு, காசி விஸ்வநாதர் வளாகம், குஜராத் மோதேரா சூரியனார் ஆலயம், உஜ்ஜயினி மஹாகாளேஸ்வர் கோயில் போன்ற மிக உயர்ந்த நிர்மாணங்கள் நாட்டின் புகழை அதிகரித்து பெருமைப்படுத்தியுள்ளன. இவை தார்மீக பலத்தோடு கூட நாட்டின் கலாசாரத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளதை அறிய முடிகிறது.

வெறும் மதக் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்த்து, பிறரை மகிழ்விப்பதற்காக இவற்றை கடந்த காலத்தில் விமர்சித்தார்கள், அலட்சியப்படுத்தினார்கள். யாத்திரிகர்களின் மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கலாச்சார புகழுக்கும் ஆதாரங்களாக  இருந்தாலும் இவற்றின் முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யவில்லை.

இப்போது அந்தக்  குறை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது. கை மேற்கொண்ட பணிகள் கூட வெறும் கட்டடங்களாக அல்லாமல் வரலாற்று, தார்மீக ஆதார நினைவிடங்களாக அவற்றை ஸ்திரமான நிர்மாணங்களாக மாற்றியுள்ளது மிகவும் அற்புதமான செயல். உபயோகப்படுத்திய கற்களும் அவற்றின் மேல் செதுக்கிய கலைச்செல்வங்களும்  திடமான வடிவில் உள்ளன. நம் தேசிய தொழில்நுட்பத்திற்கும் கலைத்திறனுக்கும் எடுத்துக்காட்டுகளாக நிற்கும் இவற்றை ஒவ்வொரு மனிதனும் பாராட்ட வேண்டும்.

தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் பல பெரும் கோவில்கள் துஷ்டர்களின் படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ண தேவராயர், சத்திரபதி சிவாஜி போன்ற மாமனிதர்களின் பராக்கிரமத்தால் தென்னிந்தியாவின் மாபெரும் பிரம்மாண்டமான கோவில்கள் காப்பாற்றப்பட்டன. ஹம்பி, விஜயநகரம் போன்றவை சிதிலமடைந்தாலும் சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருமலை, மதுரை, திருவனந்தபுரம் போன்ற ஆச்சரியகரமான பழங்கால கோவில்கள் பல இன்றைக்கும் திடமாக நின்று நாட்டின் பழம்பெரும் தொழில்நுட்ப, தார்மிக, சிற்பக்கலை வைபவங்களைப் பறைசாற்றி வருகின்றன.

இதேபோலவே வட இந்தியாவிலும் கோவில்கள் பண்டைக் காலத்தில் மிக உயர்வாக இருந்தாலும் வரிசையாக நடந்த படையெடுப்புகளால் சிதிலமடைந்தன. ஆனாலும் சிதைந்த பெரிய கோவில்களின் இடத்தில் சிறிய கோயில்களையாவது புனரமைத்துக் கொண்டு அவற்றின் மீது தம் சிரத்தையையும் பக்தியையும் காப்பாற்றிக் கொண்டு வந்தனர். காஷ்மீரில் தொடர்ந்து சில ஆண்டு காலம் துவம்சம் செய்யப்பட்ட மார்த்தாண்ட மந்திரம் போன்ற அற்புதங்களை மீண்டும் நம்மால் கட்ட முடியுமா? அது மட்டும் நடந்தால் அது எத்தனை அழகாக இருக்கும்!

தென்னிந்திய கோவில்களில் அரசியல் கடசிகளின் ஊடுருவல், அவர்களின் அளவுக்கதிகமாக தலையீடு, வெளிப்படைத் தன்மையின்மை போன்ற அம்சங்கள் நம்மை அச்சுறுத்தும் உண்மைகள். இவற்றை இல்லை என்று கூறி விட முடியாது. ஆனாலும் திடமான கோயில் கட்டிடங்கள் மனதிற்கு சிறிது ஆறுதல் அளிக்கின்றன.

ஒருபுறம் இப்படிப்பட்ட கட்டுமானங்கள் திருப்தியையும் பெருமையையும் அளித்தாலும் மறுபுறம் கவலை ஏற்படுத்தும் அம்சங்கள் சில உள்ளன. உலக நாடுகளில் இருந்து மிகவும் ஆர்வத்தோடும் சிரத்தையோடும் மக்கள் கோடிக்கணக்கில் வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமானாலும் இந்த க்ஷேத்திரங்களில் சுகாதாரம், தூய்மை, சௌகரியங்கள் போன்ற ஏற்பாடுகளில் மாநில அரசாங்கம் முதல் பெரியவர்கள் வரை அலட்சியம் காட்டுகிறார்கள்.

கடந்த காலத்தோடு ஒப்பிட்டால் சுற்றுலாத் தலங்களை விட புண்ணிய க்ஷேத்திரங்களின் பக்கமே மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது தற்போதைய ஆராய்ச்சி மூலம் கிடைத்த செய்தி. அதிலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஆனால் க்ஷேத்திரங்களின் சாலைகளிலும் ஆலயங்களின் சுற்றுப்புறங்களிலும் எங்கே பார்த்தாலும் பாலிதீன் பைகளும் பிளாஸ்டிக் பாத்திரங்களும் குப்பை தொட்டிகளும் சாலை மீது ஓடும் சாக்கடைகளும் நாற்றங்களும் மிகவும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன.

வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கடைகளும் தங்குமிடங்களும் விதிகளை மீறி நடந்து வருகின்றன. அதோடு கூட சுற்றுச்சூழல் தூய்மையின் மீதும் அலட்சியம் தென்படுகிறது. குறைந்தபட்சம் மிகப் புகழ் பெற்ற புண்ணிய க்ஷேத்திரங்களிலாவது பிளாஸ்டிக், பாலித்தீன் போன்றவற்றுக்கு தடை விதித்துத்  தீர வேண்டும்.

மாநில அரசுகள் குப்பையையும் சாக்கடையும் நீக்கும் முயற்சிகளை மனப்பூர்வமாக செய்ய வேண்டும். அந்த திசை நோக்கி மாநில, மத்திய சுற்றுலாத்துறை மும்முரமாகவும் மிக வேகமாகவும் முயற்சி செய்ய வேண்டும்.

இத்தனை அழகான கட்டடங்கள் கட்டிய அரசாங்கத்திடம் மட்டுமே நாம்   விண்ணப்பிக்க முடியும். செய்பவர்களைத் தானே நாம் மேலும் கேட்க முடியும்! அவர்களிடமிருந்து மேலும் பணிகளைச் செய்து கொள்ள வேண்டும் அல்லவா!

எத்தனை தெய்வீக நிர்மாணங்கள் செய்தாலும் அவற்றின் பலன் இந்த தூய்மைப் பணிகள் மூலம் மட்டுமே முழுமையாக முடியும். இவை போர்க் கால நடவடிக்கை போல உடனடியாக மேற்கொள்ள வேண்டிவையாக உள்ளன. கங்கை நதியோடு கூட யமுனா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போன்ற நதிகள் கூட தொழிற்சாலை கழிவுகளாலும் மக்களின் அலட்சியத்தால் ஏற்படும் மாசுகளாலும் அழுக்குச் சாக்கடைகளாக மாறி வருகின்றன. அவற்றையும் துப்புரவு செய்து புண்ணிய நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டம் மும்முரமாக செயல்வடிவம் பெற வேண்டும் .

அவற்றை எல்லாம் சகித்து, பொறுத்துக் கொண்டு இவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பக்தியோடு தீர்த்த விதிகளை அனுசரித்து ஸ்நானம் செய்து வருகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.

மக்களிடம் தூய்மை பற்றிய ஒரு புரிதலும் பொறுப்பும் விழிப்பும் ஏற்படும் விதமாக சில நடைமுறைகளை எடுத்துவர வேண்டும். இவற்றை மேற்கொண்டால் நம்முடைய நம் நம்பிக்கைக்குரிய வரலாற்று, தார்மிக நிலையங்களின் உயர்வும் அதன் மூலம் நாட்டின் புகழும் நிலை பெறும் என்பதில் ஐயமில்லை.

(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், டிசெம்பர், 2022)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.