― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்கூட்டணிப் பேச்சு இப்போது ஏன்? அண்ணாமலையின் ‘அதிவேக அரசியல்’ சரியானதா?!

கூட்டணிப் பேச்சு இப்போது ஏன்? அண்ணாமலையின் ‘அதிவேக அரசியல்’ சரியானதா?!

- Advertisement -

அதிமுக.,வுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் – என்று பாஜக., நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம் – என்றவாறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தத் தலைப்பிலான செய்தியை நம் தினசரி செய்திகள் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, “இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை என்ன? என்று கேட்டு உடனடியாக ஒருவர் விவாதத்தைத் தொடங்கினார். “செய்தியின் உண்மைத்தன்மையா, பின்னணியா?” எது குறித்துப் பேச வேண்டும் என்றால், “இரண்டும் தான்” என்று பதிலளித்தார்!

ஜே பி நட்டா இரு தினங்களுக்கு முன் பேசியது செய்திகளில் வந்திருக்கிறது. அதையும் படிக்கவும் அப்போது இதன் பின்னணி புரியும்… என்றேன். இருந்தாலும், கூட்டணி குறித்து பேச்சை எடுக்க வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது? பொதுத் தேர்தலுக்கு நாலைந்து மாதங்களுக்கு முன் மத்தியக் குழு பேச்சுவார்த்தைகளை நடத்தி, முடிவெடுத்து, அறிவிப்பார்களே! அதற்குள் ஏன் அண்ணாமலை இப்படி பேசினார் என்ற கேள்வி எழுந்தது.

ஒருவர் சொன்னார்… இந்த யுடியூபர்ஸ் விவகாரத்தை சோசியல் மீடியாவில் மடைமாற்ற! என்றார். வெறும் சோசியம் மீடியாவிலா கட்சி நடக்கிறது? இது சில நாட்களுக்கான பேசு பொருள். அதற்காக இந்த அளவுக்கு இறங்க வேண்டிய அவசியமில்லையே! என்றார் ஒருவர்.

அதிமுக.,வோடு கூட்டனி அமைத்தால் பாஜகவுக்கு சீட் கிடைக்கும் என்று சிலர் நினைக்கிறார்களோ என்னமோ, ஆனால், அதிமுக, பாஜகவுக்கு சீட் கிடைக்காமல் செய்து விடுமே… என்று கவலைப் பட்டார் ஒருவர்.

என்ன நடந்தது என்று வெளியான சில செய்திகளை ஒட்டி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… என்று இன்னொருவர் கருத்தைப் பதிவு செய்தார். சரிதான்! செய்தித்தாளில் வந்த, அதன் பின் கூட்டத்தில் பங்கேற்ற நண்பரிடம் கேட்ட தகவலின் அடிப்படையில் நடந்த விவாதம், தொடர்ந்து வந்த கருத்துப் பகிர்வுகள் அடிப்படையில் இந்தக் கருத்தோட்டம் எழுந்தது.


அண்ணாமலையின் இந்தப் பேச்சு, உண்மையில் எதிர்கால அரசியல் சூழலைக் கருத்தில் கொண்ட முன்னேற்பாடுதான் என்று தோன்றுகிறது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், தோல்விக்கான காரணத்தை திசைதிருப்பி அரசியல் செய்வது அதிமுக.,வுக்கு கைவந்த கலை. பாஜக.,வுடன் கூட்டணி இருந்ததால் தான் தோற்றோம் என்று அதிமுக.,வினர் ஏற்கெனவே இசைபாடிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமியோ, கட்சியைத் தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள இதே லாவனியை இரண்டாம் மட்ட நபர்களைக் கொண்டு பேச வைப்பார். ஆனால் அண்ணாமலைக்கு தன் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மட்டுமல்ல, தன் அரசியல் எதிர்காலத்துக்கான முக்கியப் பரீட்சையாகவும் 2024 பொதுத் தேர்தல் அமைகிறது. எனவே சில பல அரசியல் முன்னெடுப்புகளை அவரும் எடுத்தாக வேண்டியுள்ளது என்ற வகையில் அவரது இந்த கூட்டணி குறித்த பேச்சைப் புரிந்து கொள்கிறோம்.

மேலும், எடப்பாடிக்கு அண்ணாமலை முன்வைக்கும் ஓர் எச்சரிக்கை – என்ற அரசியல் கணக்கும் இதில் உண்டு! ‘நாங்கள் வலிய உன்னுடன் கூட்டணிக்கு அலையவில்லை’ என்ற கருத்தை விதைத்து விட்டால்.. கூட்டணி அமைந்தாலும் பேரம் பேசுவது எளிதாகும்!

சொல்லப் போனால், கூட்டணி அவசியம்; கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டாம் என்று பாண்டே மூலம் ஒலிக்கும் அறிவுரைக் குரலும் அன்புத்தம்பி அண்ணாமலையின் குரல்தான் என்கிறார்கள் சிலர்! இது ஒரு வித பேர அரசியல். இப்படி அடிபோட்டுத்தான் விரும்பிய தொகுதிகளை பேரம் பேசி வாங்க முடியும் என்ற டெக்னிக் அண்ணாமலைக்கு தெரிந்திருக்கிறது என்றே எடுத்துக் கொள்வோம்!

கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகளுக்கு அதிமுக கூட்டணி கசக்கிறது என்ற எண்ணம் விதைக்கப்பட்டு விட்டது. அதிமுக உடன் கூட்டணியில் இருந்தால் அண்ணாமலையால் முதல்வர் வேட்பாளர் ஆக முடியாது. கூட்டணி இல்லாமல் பெரிய அளவில் வெற்றியும் பெற முடியாது. அதற்காக கடுமையான உழைப்புடன் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்துவிட்டு, 2031ல் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்… இது அடிப்படை புரிதல்..!

ஜே பி நட்டா 2024 தேர்தலில் தமிழகத்திலிருந்து குறைந்தபட்சம் எம்பி.,க்கள் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு கூட்டணி தேவை என்று மத்தியில் உள்ளவர்கள் யோசிக்கிறார்கள். பாஜக.,வில் இருந்து கிடைப்பது மிக சொற்பம் என்றாலும், கூட்டணிக் கட்சிகள் கௌரவமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், மத்தியில் உள்ளவர்களின் தற்போதைய இலக்கு 2024.. அதேநேரம் அண்ணாமலையின் அடிப்படை இலக்கு தமிழக முதல்வர்..! அது ஒரு காலத்தில் சாத்தியப்படும். ஆனால் உடனடி சாத்தியம் இல்லை என்பதால் இத்தகைய கருத்து வேறுபாடுகள் ஏழத்தான் செய்யும். எனவே அண்ணாமலை இந்த அணுகுமுறையில் அவசரம் காட்டக் கூடாது. காலம் இருக்கிறது. சிறிய வயது தான்! மக்களிடம் இன்னும் திராவிடக் கட்சிகளின் சாயம் வெளுக்க வேண்டும். அதை அவர்களே செய்து கொள்வார்கள்.

குமரி மாவட்ட பாஜக., நண்பர் ஒருவர் தம் மாவட்ட நிலவரம் பற்றி சொன்ன கருத்து – திமுக., காங்கிரஸ் இரண்டும் கூட்டணி இல்லாமல் இங்கே போட்டியிட்டால் பாஜக வெற்றி பெறும். ஏனென்றால் மத ரீதியான வாக்கு இணைப்பு அப்படி என்றார்…. குமரி மாவட்ட நிலவரம், தமிழகம் முழுவதற்கும் என்று எடுத்துக் கொள்ளல் ஆகாது..! பாஜக பலமான கூட்டணி அமைப்பதை விட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உடைப்பதுதான் எதிர்பார்க்கும் வெற்றியைத் தரும் என்பது அடிப்படை புரிந்துணர்வு..!

அண்ணாமலையை நம்பி தலைமைப் பொறுப்பை மேலிடம் கொடுத்திருக்கிறது. அவர் எந்த வகையில் தன் திறமையை நிரூபிக்கிறார் என்று பார்ப்போம். அதுவரை தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்… இருந்தாலும், அண்ணாமலை சில நேரங்களில் அதிகமாகவே அவசரப் படுகிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தோன்றுகிறது. இன்னும் இதில் அவர் முதிர்ச்சி பெற வேண்டும். எந்த நேரத்தில், எந்த இடத்தில், என்ன சொல்ல வேண்டும் என்ற தன்மை அறிந்து பேசினால், வெற்றி கிடைக்கும் என்பது மூத்தோர் வாக்கு.

கூட்டணி என்று நான் கையைக் கட்டிக் கொண்டு அங்கே நிற்க மாட்டேன்; அதற்கு இங்கே நாலு பேர் இருக்கிறார்கள் என்றவாறு பேசியதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இவ்வாறான மனோபாவத்தை அண்ணாமலை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்து சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை, விளக்கமாகச் சொல்லுங்கள் என்று நாராயாணன் திருப்பதி ஓர் இடையூறு ஏற்படுத்தி சலசலப்பைத் தொடங்கி வைத்தார் என்றார்கள். கட்சியினரின் கூட்டம் என்பதால், கட்சி நிர்வாகிகள் எப்படி அதை உள்வாங்கிக் கொள்கின்றனரோ என்ற பதைபதைப்பில் கேட்பதால், அதிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ளலாம் என்றாலும், இந்த அணுகுமுறையும் தேவையற்றதே!

மத்தியக் குழுவில் பேச வேண்டியதை இங்கே ஏன் விவாதிக்கிறீர்கள் என்ற த்வனியில், அனுபவம் வாய்ந்த ‘சீனியர்’ வானதி சீனிவாசன் கேட்பது, ஒரு மாநிலத் தலைவரால் விரும்பப் படாத ஒன்று. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத் தலைவரிடம் இல்லை, மத்தியில் உள்ளோரின் முடிவுக்கு ஏற்ப நாம் செயல்படவேண்டும் என்று வானதி சீனிவாசன் சொல்வது மிகச் சரியானது, அதுதான் ஒரு தேசியக் கட்சியின் ஒழுங்குமுறை என்பது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கும் தெரியும்! இருப்பினும், ஒரே கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் கட்சியினர் மத்தியில் இவ்வாறு கருத்து வேறுபாடுகளுடன் பேசுவதைத் தவிர்த்து, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடக்க வேண்டும்.

ஒரு மாநிலத் தலைவர், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில், அதுவும் மூடிய அரங்குக்குள், தனக்கு அதிமுக., கூட்டணியில் விருப்பமில்லை என்று சொல்கிறார். அவர் பேசும் வரை இருந்துவிட்டு, தன் முறை வரும் போது, அவரவர் கருத்தை அங்கே பேசிவிடலாம். அதை விட்டு, பேச்சுக்கு இடையூறு செய்வது, மாநிலத் தலைமையை ஒப்புக்கு நீ இருக்கிறாய்; உனக்கு எந்த அதிகாரமுமில்லை என்ற எண்ணத்தை கட்சி நிர்வாகிகள் மத்தியில் விதைத்து, கட்சிக்கு உள்ளேயே செல்வாக்கு இழக்கச் செய்து விடும்.

ஒரு மாநிலத் தலைவரின் பேச்சை, அவரது தனிப்பட்ட கருத்து என்று ஊடகங்களில் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு ஒரு எம்.எல்.ஏ., (சட்டமன்றக் குழுத் தலைவர்) பதில் சொல்வதை இப்போதுதான் பார்க்க முடிகிறது. எந்தக் கட்சியிலும் இப்படி இருக்க முடியாது. கட்சியின் மற்றவர்கள் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னால், மாநிலத் தலைவர் அதற்கு இப்படி ‘தனிப்பட்ட கருத்து’ என விளக்கம் கொடுத்துத்தான் பார்த்திருக்கிறோம்.

மாநிலத் தலைவரின் கருத்து தவறு என்றால், மத்தியத் தலைமை அவரை அழைத்து விளக்கம் கேட்டுக் கொள்ளும்.

தேச நலனுக்காக வாழ்வைத் தொலைத்த எத்தனையோ தியாகியர், தங்களை சிறிதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல், தாங்கள் மேற்கொண்ட சங்கல்பத்துக்காக இங்கே உயிரையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், தான் பல தியாகங்களைச் செய்து, இங்கே வந்ததாகக் கூறுகிறார் அன்புத் தம்பி அண்ணாமலை.

தமிழகம் உணர்ச்சி அரசியலுக்கு உட்பட்டது. மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டே இங்கே அரசியல் செய்திருக்கிறார்கள். ஐயோ கொல்றாங்களே ஐயையோ கொல்றாங்களே சத்தம் தந்த அதிர்வுகள் இங்கே வரலாறு.

அண்ணாமலை, நிர்வாகிகளின் உணர்ச்சியைத் தூண்டி, மக்களின் உணர்ச்சியைத் தூண்டி, கட்சியோடு சேர்த்து தன்னையும் பிரபலப் படுத்திக் கொள்ள முனைகிறார். தவறில்லை. தமிழக அரசியலில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றே! அவரது பழக்கவழக்கங்களில், அணுகுமுறையில் சில குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அதை எடுத்துச் சொல்ல, வழிகாட்ட பெரியவர்கள், மத்தியின் சீனியர்கள் இருக்கிறார்கள்.! அவர்களிடம் சென்று வானதி சீனிவாசன் போன்றோர் வழக்கம் போல், நாசுக்காக காதைக் கடிக்கலாம். அதற்கான முழு வசதி வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அதை விடுத்து மாநிலத் தலைவரைக் கேள்வி கேட்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக, கட்சியினர் மத்தியில் காட்டிக் கொள்ளும் போக்கு சரியானதாகத் தோன்றவில்லை.

அண்ணாமலை பொதுக் கூட்டத்திலோ, பத்திரிகையாளர் சந்திப்பிலோ இப்படிக் கூறவில்லை, நிர்வாகிகள் கூட்டத்தில் தன் மனத் தாங்கலை வெளிப்படுத்துகிறார்; அதன் மூலம் கட்சி நிர்வாகிகளின் மனத்தை ஆழம் பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், தனித்துப் போட்டி, கூட்டணியில் தனக்கு விருப்பமில்லை என்ற அளவில் பேசியிருந்தால் போதுமானது; தான் அவமானப் பட்டதாகத் தெரிவித்தால் அனுதாபம் வளரும்; அதை விடுத்து, ராஜினாமா செய்வேன் என்றெல்லாம் பேசும் அளவுக்குச் செல்ல வேண்டியதில்லை!

அதிமுக., திமுக., காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிலுமே கட்சியின் நிர்வாகிகள் கூட்டங்களில் இதைவிட கடுமையான பேச்சுக்கள் இருந்திருக்கின்றன. அடிதடி கலாட்டா வரை நாம் பார்த்திருக்கிறோம், என்ற வகையில் இத்துடன் இந்த விஷயத்தைக் கடந்து போவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version