spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்மீண்டும் விடுதலைப் புலிகள்! விஜயகலாவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

மீண்டும் விடுதலைப் புலிகள்! விஜயகலாவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

- Advertisement -

ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழரான அமைச்சர் விஜயகலா, இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த அரசு சார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது, ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டுமானால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் குற்றச் சம்பவம் நடைபெறவில்லை. உண்மையிலேயே இப்போது எங்கள் நிலைமை மோசமாக உள்ளது. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை… என்று கூறியுள்ளார்.

அவரது பேச்சின் முக்கிய அம்சமாக, விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தபோது, பாதுகாப்பாக உணர்ந்தோம், இப்போதோ பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்காகவா நாம் அதிபரைத் தேர்ந்தெடுத்தோம். நாம் உயிருடன் வாழ வேண்டுமானால், நம் பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்” என்பதை கட்டம் கட்டி விவாதிக்கிறார்கள் தமிழர்கள்.

விஜயகலாவின் பேச்சைக் கேட்கும் நமக்கு முதலில் அச்சமாகத்தான் இருந்தது.  புலிகள் இருந்த காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்று கூறுவதை அங்குள்ளோர் ஏற்கின்றனர். ஆனால் புலிகளை மீண்டும் உருவாக்குவோம் என்ற அவரது பேச்சு முட்டாள் தனமானது என்றே பலரும் கருதுகின்றனர்.

விடுதலைப் புலிகள் ஒரு வரலாற்றுப் போக்கின் விளைவு. இன்று அந்த வரலாற்றுக் கட்டம் மாறிவிட்டது என்றும், இது புதிய யுக்திகளுடன் கூடிய புதிய ஆளுமைகள் வளர வேண்டிய கால கட்டம் என்பதை வலியுறுத்துகிறார்கள் தமிழர்கள். அறிவார்ந்த ஆளுமைத் தளத்தில் தமிழர்கள் தலையெடுக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கும் சூழலில், மீண்டும் புலிகள் குறித்த பேச்சு தமிழர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே நாமும் கருதுகிறோம்.

விஜயகலா புலிகளை மீண்டும் உருவாக்குவோம் என்று கூறியது, மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு மக்களை தயார் செய்வதற்காகவோ, நாட்டைப் பிரித்து தனிநாடு அமைப்பதற்காகவோ நிச்சயமாக இல்லை என்பதை நாம் உணர்கிறோம். இலங்கையில் இன ரீதியாகப் பெருகிவிட்ட அடக்குமுறை, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்படுவது, பெண்களை நாசமாக்குவதன் மூலம் ஓர் இனத்தை மெது மெதுவாக அழிப்பது என்ற நடப்பியல் கருத்தோட்டங்களை எதிர்த்து, பெண்களைப் பாதுகாக்கவே ஒரு பாதுகாவல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை விஜயகலா குறிப்பிடுவதாகவே நாம் கருத முடிகிறது. காரணம், இலங்கையின் இன ரீதியான அடக்குமுறை நடப்புகள், மத ரீதியாகவும் அமைந்து, தமிழ் சமூகத்தின் வேரை வெட்டி விட முயன்று வருவதை நாம் ஒவ்வொரு நாளும் செய்திகளின் வாயிலாக உணர்கிறோம்.

இலங்கை இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற 2009ம் ஆண்டுக்குப் பின்னர், தமிழர்கள் பலர் வீதிகளில் தன்னுணர்வு இன்றி கால் போன போக்கில் உளவியல் ரீதியாக மாய்ந்து ஓய்ந்து போன நிலையில் நடமாடியதை பகிர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தகைய உளவியல் தாக்குதலில் இருந்து மீண்டுவிட்டாலும், இப்போதும் இத்தகைய மன நிலையில் பலர் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

போர் நடந்தது நடந்து விட்டது. அப்பாவிகள் கொல்லப் பட்டார்கள், அபலைகள் உருவானார்கள். இருக்கும் மிச்சம் மீதி உள்ள தமிழ்ச் சமூகத்தையும் அங்குள்ள இஸ்லாமியர்களும் கிறிஸ்துவ சர்ச்சுகளும் நெருக்கி வருவதையும், தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு, சிந்தனை, திருவாசகத்தின் மீதான பக்தி, அறநூல்களின் மீதான நெருக்கம் இவை போன்ற வேர்களை வெட்டி விடும் வேலைகளையும் செய்து வருவதை எதிர்க்கவும் வழி தெரியாமல் பலரும் உள்ளக் குமுறல்களாய் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை இறுதிப் போரில் அழிக்க, சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்து உதவியவர்கள் முஸ்லிம்களே என்று இலங்கை ரியல் அட்மிரல் ரவீந்திர விஜய குனவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. (பார்க்க...விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்!)

இன்னொரு புறம், இந்தியாவின் தென் பகுதியை ஆக்கிரமித்து கபளீகரம் செய்து வரும் கிறிஸ்துவ அமைப்புகள், இலங்கையில் ஆழ ஊடுருவும் முயற்சியில் இருக்கிறார்கள் என்பது. (பார்க்க…: இலங்கைத் தமிழர்களே உஷார்! பாவமா, வியாதியா, கவலையா, கண்ணீரா என்று ஏமாற்ற வரும் ஏஜெண்டுகள்!) இங்கே எந்த சீமானையும், திருமுருகன் காந்தி, உதயகுமார் உள்ளிட்ட தமிழப் போராளிகள் போர்வையில் இயங்கும் கூலியாட்களையும் சர்ச்சுகள் வளர்த்து வருகின்றனவோ அதே வேலையை இலங்கையில் செய்வதற்கும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியும் வருகின்றன)

இது போதாதென்று பௌத்த இனவாதிகளின் நெருக்குதல்கள். தமிழர் வழிபாடுகள் சார்ந்த அடையாளங்களை அழித்தொழிக்கும் முயற்சிகள். இப்படி மும்முனைத் தாக்குதல்களில் தள்ளாடும் போது,  இருப்பதைக் கொண்டு எப்படி தமிழர்கள் தங்களின் இருப்பைத் தக்க வைப்பது, அதிகபட்சம் தற்போதைய சூழலில் எதைப் பெற்றுக் கொண்டு மிச்சம் மீதமிருக்கும் தமிழர்களைக் காப்பது என்பது குறித்து தமிழ்ச் சமூகம் சிந்தித்தாக வேண்டும்.

வருங்காலங்களில் கொந்தளிப்பு மனோபாவத்தை தூண்டிவிடும் அரசியல் கைகொடுக்காது. நீண்ட கால நோக்கைக் கருத்தில் கொண்டு, இலக்கை அடையும் அமைதியான தெளிவான அணுகுமுறையை தமிழ்ச் சமூகம் கையில் எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன ரீதியாகவும், மக்கள் தொகை அடிப்படையிலும் குறுகிக் கொண்டு வரும் சமூகம், தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தாக வேண்டும். அது இல்லாமல், இருப்பைக் காட்டிக் கொள்வதும் கட்டிக் காப்பதும் சாத்தியமற்றதே!

இது இல்லாமல், ஏற்கெனவே குறுகிக் கிடக்கும் சமூகத்தில், தேவையற்ற பிரிவினைக் கருத்துகளோ வன்முறை அரசியலை விதைப்பதோ, தமிழர்களின் இருப்பை முழுதாய்த் துடைத்தெரியும் வஞ்சகச் செயலன்றி வேறொன்றாய் இருக்க இயலாது. அண்மையில் தமிழகம், குற்றாலத்துக்கு வந்திருந்த இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனிடம் நாம் செய்தியாளர்களாக உரையாடியபோது,  இதனை அவர் வலியுறுத்திச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. (பார்க்க…  இலங்கையில் தனி நாடு கோரிக்கை இல்லை; ஒரே இலங்கை, தமிழர்களுக்கு மாநில சுயாட்சி இதுவே எங்களின் கோரிக்கையாக உள்ளது என்று கூறினார் விக்னேஸ்வரன் …)

இப்போதைய சூழலில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையைக் காக்க, வாழத் தேவையான உதவிகளைச் செய்ய மோடியின் இந்திய அரசு முனைப்புடன் உள்ளது. சில சர்வதேச அரசியல் நெருக்குதல்களால் மோடி மேற்கொள்ள நினைக்கும் சில உதவிகள் இழுத்தடிக்கப் படலாம். சிலவற்றில் பொறுமையான அணுகுமுறையே நீண்ட கால பலன்களைத் தருவதாய் அமையும்!

இத்தகைய பின்னணியில் விஜயகலாவின் பேச்சு, அவர் தனது அரசியல் நலனுக்காக தமிழர்களின் பாதுகாப்பை பலிகடா ஆக்குகிறாரோ என்ற சந்தேகத்தை விதைப்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய நிலையில், இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளையும் இழந்துவிட்டு தமிழ்ச் சமூகம் நிர்கதியாக நிற்கக் கூடாதே என்று கவலை கொள்கிறோம்.

சிங்கள பௌத்த இனவாதிகளிடமும் கிறிஸ்துவ இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளிடமும் தமிழ் அரசியல்வாதிகளை பலிகடா ஆக்கும் முன்னேற்பாடாகத்தான் விஜயகலாவின் இந்தப் பேச்சு தோற்றமளிக்கிறதோ என்ற மயக்கம் ஏற்படுகிறது. தமிழர்கள் எச்சரிக்கை உணர்வுடன் அணுக வேண்டிய விஷயம் இது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe