கஜா… வெறும் செய்திகள் கண்ணீரைத் துடைக்காது! அரசே களத்துக்கு வா!

அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது அல்ல! களத்திற்கு செல்லுங்கள்…!! மக்கள் தவிக்கிறார்கள். உதவி கேட்டு போராடுகிறார்கள். மின்சாரமில்லாமல், குடிநீர் இல்லாமல் அல்லாடுகிறார்கள். ஆனால், அமைச்சர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

கஜா புயலால் டெல்டா மாவடட்ங்கள் சிக்கி சின்னபின்னமாகிக் கிடக்கின்றன. சற்றேறக்குறைய 46 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 40 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன விலங்குகள், ஆடு, மாடுகள் இறந்து கிடக்கின்றன. வேதாரண்யம், பேராவூரணி பகுதிகள் சற்று தடம் மாறிக் கிடக்கிறது.

இதுதான் நேரம் என்று, குடிநீரையும், அத்தியாவசியப் பொருட்களையும் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள் வியாபாரக் கயவர்கள். அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை, அமைச்சர்கள் வந்து குறைகளைக் கேட்கவில்லை என்று மக்கள் சாலையில் இறங்கி போராடுகிறார்கள்.

இந்தப் பக்கம் ஒரு நாளைக்கு குறையாமல் நான்கைந்து முறை அமைச்சர்கள் பேட்டி கொடுக்கிறார்கள். அங்கு பாலும் தேனும் ஓடி கொண்டிருப்பதாக அமைச்சர்கள் பேசுவது நகைப்பாக இருக்கிறது.

கஜா கூஜாவாகிவிட்டது என்று ஒரு அமைச்சர் பேசுவதும், இன்னும் புயல்கள் வந்தால்தான் தண்ணீர் பிரச்னை தீரும் என்று அமைச்சர்கள் பேசுவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

களத்தில் இறங்கி கண்ணீர் துடைக்க துடிப்புடன் யாரும் இல்லை; மக்களின் அடிப்படை தேவைகளை கேட்டு பூர்த்தி செய்யவில்லை என்றே குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. புயல் முன்னெச்சரிக்கை சிறப்பாக எடுத்தாக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அரசு என்ன அப்படி செய்துவிட்டது என்று பார்த்தால்… வெறுமனே செய்திகளை வழங்கி மக்களை எச்சரிக்கை மட்டும் செய்து விட்டால் போதுமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

இந்த எச்சரிக்கைகளால்… உயிரிழப்புகள் குறைந்து விட்டதா என்ன? மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா? மூன்று நாளாகி விட்டதே… மின்சாரம் வந்திருக்கிறதா? குடிநீர் கிடைக்கிறதா? மரங்கள் அகற்றப்பட்டுவிட்டனவா? சாலைகள் சரியாகிவிட்டதா?

களத்திற்கு செல்லாமலே ட்விட்டரிலும், அறிக்கையிலும் அரசை பாராட்டிவிட்டால் போதுமா? அங்கே போய்ப் பாருங்கள். மக்கள் கொதிப்பதை!

சென்னையில் புயல் அடித்து பிரச்னை ஏற்பட்ட போது, மற்ற மாவட்டங்களில் இருந்தெல்லாம் உதவிக்கரம் நீண்டன. சமூக வலைத்தளத்தில் கூக்குரல்கள் ஒலித்தன. நேசக்கரங்கள் நீண்டன. உதவிகள் குவிந்தன. இவற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட மற்ற மாவட்டங்கள் பாதிக்கப் பட்ட போது இல்லையே…! கேரளத்தில் மழை பெய்து கேரளம் மழை நீரில் மூழ்கிய போது தமிழகம் ஓடோடி உதவியது. எவ்வளவு நிவாரண உதவிகளை நாம் வழங்கியிருப்போம். லாரி லாரியாக அனுப்பி வைத்தோமே! நம் தமிழக டெல்டா  மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து கண்ணீரில் மூழ்கியுள்ள போது… சென்னை கூட தஞ்சைக்கும் நாகைக்கும் வரவில்லையே என்று கோபத்துடன் பேசுகிறார்கள் மக்கள்! 

கீழ்க்காணும் வீடியோக்கள் டெல்டா மாவட்டங்களின் தற்போதைய நிலையை படம் பிடிக்கிறது. செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு நண்பர்கள் மூலம் பெறப்பட்ட வீடியோக்கள்…

வீடியோ 1: ஒரு அமைச்சர் கூட வரவில்லை: வேதாரண்யம் மக்கள்.

https://youtu.be/KDo6WmuU7k4

வீடியோ 2: மன்னார்குடி மக்கள் கண்ணீர் கோரிக்கை

https://youtu.be/pgREL_MQQSc

வீடியோ 3: பட்டுக்கோட்டையை காப்பாற்றுங்கள்.

https://youtu.be/c_WfaR4eL2U

வீடியோ 4: லட்சக்கணக்கில் வீழ்ந்து கிடக்கும் தென்னை மரங்கள்: பேராவூரணி

https://youtu.be/1kB-08vD70Q

வீடியோ 5: பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாய்ந்து கிடக்கும் மரங்கள்: வேதாரண்யம், நாகை, செம்போடை

https://youtu.be/x7z_kosjDq0

வீடியோ 6: கஜா புயலால் புதுக்கோட்டையில் பாதிப்பு: வந்து பாருங்கள் எங்கள் நிலைமையை….

https://youtu.be/5iGpWhvRzOY

வீடியோ 7: இதுவரை வெளிவராத புயல் காட்சிகள்: புதுக்கோட்டை

https://youtu.be/_VPAqAC_SmI

வீடியோ 8: சேதமடைந்து கிடக்கும் வீடுகள்: மன்னார்குடி, திருவாரூர்

https://youtu.be/umGnj_5GS2E

தகவல் : செய்திக்கதிர்

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.