திமுக.,வின் குண்டர் ராஜ்ஜியம்! பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு வைகோவின் பதில் என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்ற குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்று குறை கூறி, ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நேற்று நடத்தப் பட்டது.

மதிமுக., தலைமையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை திங்கள் அன்று நடத்திய போது சுரேஷ்பாபு என்கிற கட்சித் தொண்டர் ஒருவர் அந்த பகுதியில் இருந்த தேநீர் விடுதியில் புகுந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்ததுடன், அந்த தேநீர் விடுதியின் ஊழியர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

அப்போது போராட்டம் குறித்து செய்தி சேகரித்து வந்த “மிரர் நவ்” ஆங்கில செய்தி சேனலின் செய்தியாளர் பிரமோத் மாதவ், அந்தக் காட்சியை தனது கேமராவில் படம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் பாபு என்ற அந்த நபர், செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

தேநீர் விடுதியில் புகுந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்தும், அந்த தேனீர் விடுதியின் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் ரவுடித்தனம் செய்த திமுக., தொண்டர், செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியது, அவர்களின் வழக்கமான குண்டாயிஸத்தை வெளிப்படுத்துகிறது.

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் நடத்துகின்ற போராட்டங்களோ, விழாக்களோ அல்லது மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களோ எதுவாயினும் அதனை செய்தி சேகரித்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுப்பி அதனை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அரிய பணியை செய்யும் செய்தியாளர்களை, கட்சி ரீதியாகப் பிரித்து இனம் காணும் கேவலமான செயல்களில் திராவிட இயக்கங்கள் செய்கின்றன என்பது மட்டுமல்ல, அவர்கள் மீது அரசியல் வன்மத்தையும் இவர்கள் தொடுக்கத் தவறுவதில்லை!

தம் உயிரையும் பணயம் வைத்து களப்பணியில் ஈடுபட்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரும் செய்தியாளர்கள் மீது ஏவப்படும் இது போன்ற கொலைவெறித் தாக்குதல்கள் நிச்சயமாக ஒரு நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்த எவராலும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றல்ல. “மிரர் நவ்” செய்தி சேனலின் செய்தியாளர் பிரமோத் மாதவ் மீதும், தேனீர் விடுதியில் புகுந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து தேனீர் விடுதியின் ஊழியர்களுக்கு தங்கள் தொண்டர்கள் கொலை மிரட்டல் விடுத்ததற்கும், ம.தி.மு.க., தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது?! யோக்கியவான் வைகோ.,வின் வாய்ப் பேச்சு அவ்வளவுதானா? தேனீர் கடையில் ஏற்படுத்தப் பட்ட இழப்பினை யார் ஈடுகட்டுவது? பொது இடங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்பிலும் நாகரீகமற்ற வகையில் அரசியல் பேச்சுகளை அரங்கேற்றும் வைகோ, நிச்சயம் இதற்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்!